Published:Updated:

`என் அப்பா கையை உடைச்சவனை விடக்கூடாது' -கரூரில் இளைஞரின் சபதத்தால் பால்காரருக்கு நேர்ந்த கொடூரம்

அன்பழகன்
அன்பழகன்

கதிரேசன் உள்ளிட்ட நான்கு பேரையும் கொலை செய்துவிடுவதாக அன்பழகன் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

தன் தந்தையின் கையை உடைத்த பால்காரர் ஒருவரை, மூன்று பேரோடு சேர்ந்து இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி, தெற்கு மாடுவிழுந்தான் பாறையைச் சேர்ந்தவர், ராசு என்ற வடிவேல். இவரது மகன் அன்பு என்ற அன்பழகன் (வயது 30). பால் வியாபாரியான இவர், தினமும் தனது மோட்டார் சைக்கிளில் சென்று நச்சலூர், மாடுவிழுந்தான் பாறை பகுதிகளில் உள்ள வீடுகளில் பால் விற்பனைசெய்து வந்துள்ளார்.

இதற்கிடையில், நச்சலூர் பகுதியில் உள்ள சொட்டல் கீழ்நந்தவனக்காட்டைச் சேர்ந்த கதிரேசன் (21), வினோத் (19), ராஜேஷ் (20), குமார் (21) ஆகியோருக்கும், அன்பழகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

`பாதபூஜை; 105 நபர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு'- தூய்மைப் பணியாளர்களைக் குளிர்வித்த கரூர் தொழிலதிபர்

இந்த நிலையில், அதிகாலை வழக்கம்போல அன்பழகன் தனது மோட்டார் சைக்கிளில் நச்சலூரில் உள்ள சொட்டல் கீழ்நந்தவனக்காடு பகுதியில் ஒரு வீட்டில் பால் கறந்து, விற்பதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது, அப்பகுதியில் நின்ற கதிரேசன் உள்ளிட்ட 4 பேரும் அன்பழகனை வழிமறித்தனர். பின்னர், தாங்கள் மறைத்துவைத்திருந்த அரிவாள்களால் அன்பழகனை சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே அன்பழகன் இறந்துவிட்டார். அன்பழகன் இறந்ததை உறுதி செய்த 4 பேரும், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.

இந்தப் படுகொலையைப் பற்றி தகவல் அறிந்ததும், அன்பழகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கதறி அழுதனர். கொலைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை டி.எஸ்.பி கும்மராஜா, லாலாபேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நச்சலூர் கிராம நிர்வாக அதிகாரி ராமநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர், அன்பழகனின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கரூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்தனர்.

கதிரேசன், வினோத்
கதிரேசன், வினோத்

சம்பவம் நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் லக்கி, மோப்பம் பிடித்தவாறு பல மீட்டர் தூரம் ஓடிச்சென்று படுத்துக் கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதற்கிடையே, அன்பழகனைக் கொலை செய்ததாக கதிரேசன், வினோத், ராஜேஷ், குமார் ஆகிய 4 பேரும் குளித்தலை காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களைப் போலீஸார் கைதுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அன்பழகனுக்கும், 4 இளைஞர்களுக்கும் இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இதைத் தட்டிக்கேட்ட கதிரேசனின் தந்தையின் கையை அன்பழகன் தரப்பு அடித்து உடைத்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், கதிரேசன் உள்ளிட்ட நான்கு பேரையும் கொலை செய்துவிடுவதாக அன்பழகன் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

ராஜேஷ், குமார்
ராஜேஷ், குமார்

இதனால், ஆத்திரத்தில் இருந்த கதிரேசன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து, 'என் அப்பா கையை உடைச்சவனை உயிரோடு விடக்கூடாது, அவனுக்கு நாம யார்னு காட்டனும்' என்று கூறி, அன்பழகனைக் கொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட அன்பழகனுக்கு தங்கமணி (24) என்ற மனைவியும், 2 வயதில் மகளும் உள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தால், நச்சலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குளித்தலை காவல் நிலைய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு