Published:Updated:

`3 நாள் ஒத்திகை; ஸ்கெட்ச் போட்ட நண்பன்!'- ரவுடி கொலையில் கைதானவர் வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

ரவுடி வசந்தகுமாரைக் கொலை செய்ய 3 நாள் ஒத்திகை பார்த்தோம். சம்பவத்தன்று போதையில் இருந்த வசந்தகுமார், எங்களைக் கொலை செய்ய கத்தியை எடுத்தார். இதனால் அவரைக் கொன்றோம்.

Vasanthakumar
Vasanthakumar

சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் பெரிய கொளுத்துவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (21). போரூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது கொலை வழக்கு, வழிப்பறி வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், வீட்டின் அருகில் உள்ள சுடுகாட்டில் வசந்தகுமார் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ராகேஷ் கொலைக்குப் பழிவாங்க வசந்தகுமாரை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. இதையடுத்து, காட்டுபாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் (24), கார்த்திக் (23), மணிமாறன் (23) கொளுத்துவான்சேரியைச் சேர்ந்த அஜித்குமார் (20) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.

burial ground
burial ground

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த மார்ச் 31-ம் தேதி மதுரவாயலைச் சேர்ந்த ராகேஷ் என்பவரை வசந்தகுமார் கொலை செய்தார். வழிப்பறி செய்த செல்போனை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில்தான் இந்தக் கொலை நடந்தது. இதனால் ராகேஷின் கூட்டாளிகள் வசந்தகுமாரை கொலை செய்யத் திட்டமிட்டனர். ஆனால், வசந்தகுமார் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரைக் கொலை செய்வதற்கான சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தனர்.

இந்தச் சமயத்தில் கடந்த மாதம் வசந்தகுமார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்தார். இதனால் வசந்தகுமாரை கொலை செய்ய ராகேஷ் கூட்டாளிகள், வசந்தகுமாரின் கூட்டாளியும் நண்பருமான அஜித்குமாரின் உதவியை நாடினர். இதையடுத்து வசந்தகுமாரை வழக்கமாக மதுஅருந்தும் சுடுகாட்டுக்கு அஜித்குமார் மூலம் அழைத்துவந்தனர் ராகேஷின் கூட்டாளிகள். அங்கு அனைவரும் சேர்ந்து மதுஅருந்தியுள்ளனர். அப்போது நடந்த தகராறில்தான் வசந்தகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

vasanthakumar murder case accused
vasanthakumar murder case accused

வசந்தகுமாரின் கூட்டாளியான அஜித்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

``கடந்த மூன்று நாள்களாக வசந்தகுமாரை மதுஅருந்த சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். இதனால் அவர் என்னை நம்பி வந்தார். எப்போதும் வசந்தகுமாரிடம் கத்தி இருக்கும். இதனால் அவரை அவ்வளவு எளிதில் கொலை செய்ய முடியாது. மேலும், ராகேஷை வசந்தகுமார் கொலை செய்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் ராகேஷ் நண்பர்களின் சதித் திட்டத்துக்கு நானும் சம்மதித்தேன். சம்பவத்தன்று வசந்தகுமாரை வீட்டிலிருந்து மது அருந்த நான் அழைத்துச் சென்றேன். அங்கு ராகேஷின் கூட்டாளிகள் தயாராக இருந்தனர். அனைவரும் மது அருந்தினோம்.

அப்போது வசந்தகுமாரிடம், `ஏன் ராகேஷைக் கொலை செய்தாய்?' என்று கேட்டோம். அதற்கு வசந்தகுமார், அளவுக்கு அதிகமான போதையில், `நான் பெரிய ரவுடி, ராகேஷ் என்னிடம் பந்தா காட்டினான். அதனால்தான் அவனை போட்டுத்தள்ளினேன். அவனைப் போல உங்களையும் கொலை செய்துவிடுவேன்' என்று பொருளை (கத்தி) எடுத்து மிரட்டத் தொடங்கினார். இதனையடுத்து நாங்களும் கத்தி, அரிவாளால் வசந்தகுமாரை வெட்டினோம். போதையில் இருந்ததால் சுலபமாக அவரைக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டோம்" என்று கூறியுள்ளார்.

4 வெட்டு; கொலையைக் காட்டிக்கொடுத்த தடயம்! - நாள் முழுவதும் சுடுகாட்டில் சடலமாகக் கிடந்த ரவுடி

அஜித்குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆனந்த், கார்த்திக், மணிமாறன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். வழக்கம்போல அவர்களை போலீஸார் பிடிக்கச் சென்றபோது கீழே தவறி விழுந்ததில் மூன்று பேரின் கை முறிந்தது. இந்தநிலையில், தலைமறைவாக இருந்த சக்திவேல், பரத்குமார் ஆகிய இருவரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.