ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரைப் பகுதியில் காதலனோடு வந்த கல்லூரி மாணவியை கஞ்சா போதையில் வந்த மூன்று பேர் காதலனைக் கட்டிப்போட்டு அவர் கண்முன்னே அந்த மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து ராமநாதபுரம் எஸ்.பி. கார்த்திக் தலைமையிலான தனிப்படையினர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தினேஷ்குமார், அஜித்குமார், பத்மேஷ்வரன் ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்தனர்.
அதேபோல், பரமக்குடியில் மூன்று வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரை பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸார் கைதுசெய்தனர்.
இந்த இரு வழக்குகளிலும் தொடர்புடைய நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி.கார்த்திக், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால்குமாவத் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நான்கு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
இது குறித்து எஸ்.பி.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசியபோது,
``ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 14 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை நான்கு பாலியல் குற்ற வழக்குகளில் ஐந்து பேருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
தென்மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் உத்தரவுப்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயலோ இக்னேஷியஸ், ராமநாதபுரம் டி.ஐ.ஜி மயில்வாகனன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகத் தாக்கலாகும் வழக்குகள் மீது, வழக்கு பதிவுசெய்யப்பட்ட 60 நாள்களுக்குள் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி காவல்துறையில் புகார் அளிக்க முன்வர வேண்டும். அவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1098 என்ற தொலைபேசி எண்ணிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 181 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் அனைத்துவிதமான குற்றங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஹலோ போலீஸ் தொலைபேசி எண் 8300031100 தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் பட்சத்தில் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.