Published:Updated:

`மைதானத்தில் விளையாடுவதில் தகராறு; பள்ளி மாணவனைக் கொலை செய்த நண்பர்கள் கைது!'

பள்ளி மைதானத்தில் விளையாடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 10-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பை அருகிலுள்ள தானேயில் இருக்கும் ராஜஸ்ரீ சாஹு மஹாராஜ் மராத்தி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தவர் துஷார் (16). துஷாருக்கும், அவருடன் படிக்கும் சில மாணவர்களுக்கும் இடையே பள்ளி மைதானத்தில் விளையாடுவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில், மாணவர்கள் இரு தரப்பாகப் பிரிந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டனர். பள்ளியில், தற்போது தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிவிட்டுச் சென்றுவிட்டனர். அப்போது, துஷாரை அவருடைய நண்பர்கள் சிலர் பள்ளிக்குப் பின்புறம் வருமாறு அழைத்தனர். துஷாரும் அவர் நண்பர் ஒருவரும் அங்கு சென்றனர்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

அப்போது, அங்கு ஏற்கெனவே, நின்றுகொண்டிருந்த நான்கு மாணவர்களில் ஒருவர் கத்தி வைத்திருந்தார். அவர்கள் அனைவரும், துஷாருடன் மைதானத்தில் நடந்த சண்டை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது, அவர்களில் ஒரு மாணவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து துஷாரைக் குத்தியிருக்கிறார். அதில், துஷார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அதையடுத்து, சம்பவ இடத்திலிருந்து நான்கு மாணவர்களும் ஓடிவிட்டனர். துஷாருடன் வந்தவர் மட்டும் உதவி கேட்டு அருகில் உள்ளவர்களை அழைத்து துஷாரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

ஆனால், அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னரே துஷார் உயிரிழந்துவிட்டார். கத்திக் குத்தில் நுரையீரல் சேதம் அடைந்துவிட்டதால் துஷார் உடனே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து உடனே நான்கு மாணவர்களையும் கைது செய்தனர். இது தொடர்பாக டி.சி.பி ரத்தோட் அளித்த பேட்டியில், "துஷாரை ஒரு மாணவன் நெஞ்சில் கத்தியால் குத்தியிருக்கிறான். இந்தச் சண்டை அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கின்றன. குற்றவாளிகள் அனைவரும் சிறுவர்கள். அவர்களுக்குக் கத்தி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரித்துவருகிறோம்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு