சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

அடி, கடி, சூடு, பாலியல் வன்கொடுமை... 4 வயது சிறுமியை சிதைத்துக் கொன்ற கொடூரத் தம்பதி!

ராஜேஷ்குமார் - கீர்த்திகா
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேஷ்குமார் - கீர்த்திகா

ரேத பரிசோதனையில், குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததை அறிந்த போலீஸார், விசாரணையைக் கடுமையாக்கியுள்ளனர்

4 வயது குழந்தையை அடித்தும், கடித்தும், சூடு வைத்தும், பாலியல் வன்கொடுமை செய்தும் கொலைசெய்த கொடூரத் தம்பதியால் மிரண்டுகிடக்கிறது திண்டுக்கல்!

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார் - கீர்த்திகா தம்பதி. இவர்களுக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இவர்களின் தூரத்து உறவினர்கள் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த மற்றொரு தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்திருக்கிறாள். கடந்த மாதம் தீபாவளிப் பண்டிகையின்போது பல்லடத்துக்குச் சென்ற ராஜேஷ்குமார் தம்பதி, அந்தச் சிறுமியை தீபாவளிக்குத் தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில், ராஜேஷ்குமார் - கீர்த்திகா வீட்டுக்கு வந்த இரண்டே வாரங்களில், பலத்த காயங் களுடன் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட சிறுமி கடந்த 4-11-2022 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

அடி, கடி, சூடு, பாலியல் வன்கொடுமை... 4 வயது சிறுமியை சிதைத்துக் கொன்ற கொடூரத் தம்பதி!

கீழே வழுக்கி விழுந்து காயமடைந்ததாகக் கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தையின் கை கால்களில் சூடுபோட்ட காயங்களும், முதுகில் அடித்த காயங்களும், கைகளில் கடித்த காயங்களும், உதடுகள் வீக்கமடைந்து ரத்தம் கசிந்த நிலையிலும் இருந்ததால், வடமதுரை போலீஸார் இது குறித்து விசாரணை செய்திருக்கின்றனர்.

அதில், ‘‘சிறுமி, வீட்டுக்குள்ளேயே உச்சா இருந்ததால், சூடுவைத்து அடித்தேன். `சொல்பேச்சு கேட்காமல் நாயுடன் விளையாடினால், அது இப்படித்தான் கடிக்கும்’ என்றவாறே குழந்தையின் கையைக் கடித்துவைத்தேன்’’ என்று இரக்கமே இல்லாமல் சொல்லியிருக்கிறார் கீர்த்திகா.

அடி, கடி, சூடு, பாலியல் வன்கொடுமை... 4 வயது சிறுமியை சிதைத்துக் கொன்ற கொடூரத் தம்பதி!

பிரேத பரிசோதனையில், குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததை அறிந்த போலீஸார், விசாரணையைக் கடுமையாக்கியுள்ளனர். அப்போதுதான், ராஜேஷ்குமார் - கீர்த்திகா தம்பதியின் கொடூர முகம் அம்பலமானது.

இது குறித்து நம்மிடம் பேசிய வடமதுரை போலீஸார், ‘‘கீர்த்திகா, ப்ளஸ் டூ படித்தபோதே இளைஞர்களுடன் நட்புகொண்டு கர்ப்பமாகி, ஒரு குழந்தைக்குத் தாயாகியிருக்கிறார். அந்தக் குழந்தையை கீர்த்திகாவின் சித்தப்பா வளர்த்துவருகிறார். சிறு வயதிலேயே தாயாரை இழந்த ராஜேஷ்குமாரும் சரிவர வேலைக்குச் செல்லாமல் போதைக்கு அடிமையானவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட பிறகு, சேர்ந்தே மது குடிப்பது, திருமணம் தாண்டிய உறவைத் தொடர்வது என்று மோசமாக இருந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய வாரம் பல்லடத்துக்குச் சென்றவர்கள், ‘சிறுமியைத் தங்களுடன் தீபாவளி கொண்டாடிவிட்டு வரட்டும்’ எனக் கூறி திண்டுக்கல்லுக்கு அழைத்துவந்திருக்கின்றனர். ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்தில் தென்னந்தோப்புக்கு நடுவேயுள்ள தங்கள் வீட்டில் வைத்து குழந்தையைப் பல்வேறுவிதங்களில் சித்ரவதை செய்து கொன்றுள்ளனர்’’ என்றனர்.

அடி, கடி, சூடு, பாலியல் வன்கொடுமை... 4 வயது சிறுமியை சிதைத்துக் கொன்ற கொடூரத் தம்பதி!

ராஜேஷ்குமார் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் வசிக்கும் பழனியம்மாளிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, ‘‘நவம்பர் 3-ம் தேதி மதியம் கனமழை பெய்துகொண்டிருந்தது. வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த கீர்த்திகா, பதற்றத்தோடு என்னை அழைத்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, உடம்பெல்லாம் நனைந்த நிலையில், குழந்தை தரையில் கிடந்தாள். அவளை மடியில் தூக்கி வைத்தேன். தலை நிற்கவில்லை. கை கால்கள் செயலிழந்திருந்தன. உடம்பெல்லாம் சூடுவைத்த காயங்களும், கடுமையாக அடித்து உதைத்த அடையாளங்களும் இருந்தன. குழந்தையின் உதட்டில் ரத்தக்கசிவும், பின்னந்தலையில் கடுமையான காயமும் இருந்தன. ‘பிள்ளையை என்ன செஞ்சீங்க?’ எனக் கேட்டபோது, ‘தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட காயம்’ என்றார் கீர்த்திகா. உடனடியாக ஆட்டோ பிடித்து, குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

இத்தனைக்கும் தீபாவளியன்று, ராஜேஷ்குமார் அந்தக் குழந்தையை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். ‘புது டிரெஸ் நல்லா இருக்கா மாமா?’ என அவள் என் மகனிடம் கேட்டது இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. என்ன நடந்தது என்று அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்’’ என்றார் கனத்த மனதுடன்.

ஜோதிமுருகன்
ஜோதிமுருகன்

வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகனிடம் இந்தச் சம்பவம் குறித்துக் கேட்டபோது, ‘‘குழந்தையின் பெற்றோரை வரவழைத்து, அவர்களிடமிருந்து புகாரைப் பெற்று விசாரித்தோம். மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த குழந்தையின் உடலைப் பார்த்தபோதும் அவர்களிடம், `ஒரே மகளை இழந்துவிட்டோமே...’ என்கிற தவிப்போ, பிஞ்சுக் குழந்தையைச் சிதைத்துவிட்டார்களே என்ற கோபமோ துளிக்கூட இல்லை. இதனால் உயிரிழந்த குழந்தை, உண்மையிலேயே அவர்களுடைய குழந்தைதானா என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ராஜேஷ்குமார்-கீர்த்திகா தம்பதி குழந்தையைச் சித்ரவதைசெய்து கொன்றதை ஒப்புக்கொண்டனர். குழந்தையிடம் ராஜேஷ்குமார் தவறாக நடந்துகொண்டதற்கு கீர்த்திகாவும் உடந்தையாக இருந்திருக்கிறார். குழந்தைக்குத் தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டபோது, ‘நாப்கின்’ மாட்டிவிட்டிருக் கிறார். வலியால் சதா அழுத குழந்தையைத் தூக்கி வீசியிருக்கின்றனர். அதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. முதலில் குழந்தையைக் கொடுமைப்படுத்தியதற்கான வழக்கு பதிவுசெய்து விசாரித்தோம். பிறகு அதைக் கொலை மற்றும் போக்சோ வழக்காக மாற்றியிருக்கிறோம்’’ என்றார்.

கொடூரம்!