Published:Updated:

கடித்தும், தீக்கட்டையால் சூடுவைத்தும் கொடுமை; 4 வயது குழந்தை பரிதாப பலி - நடந்தது என்ன?

குழந்தை மரணம்

`நாயுடன் விளையாடாதே... இல்லையென்றால் கடித்துவிடும்' எனக் கூறியவர், குழந்தையைக் கடித்துவிட்டு, `சொல்பேச்சு கேட்காமல் நாயுடன் விளையாடினால் இப்படித்தான் கடிக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.

கடித்தும், தீக்கட்டையால் சூடுவைத்தும் கொடுமை; 4 வயது குழந்தை பரிதாப பலி - நடந்தது என்ன?

`நாயுடன் விளையாடாதே... இல்லையென்றால் கடித்துவிடும்' எனக் கூறியவர், குழந்தையைக் கடித்துவிட்டு, `சொல்பேச்சு கேட்காமல் நாயுடன் விளையாடினால் இப்படித்தான் கடிக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.

Published:Updated:
குழந்தை மரணம்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி பிரகாஷ், கெளரி. இவர்களுக்கு ஷிவானி என்ற 4 வயது பெண் குழந்தை இருந்தது. இவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்துவருகின்றனர். திண்டுக்கல் வடமதுரை அருகே செங்குளத்துபட்டியில் இவர்களின் தூரத்து உறவினர் ராஜேஷ்குமார், அவரின் மனைவி கீர்த்திகா இருக்கின்றனர். இவர்களுக்குத் திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகளாகியும் குழந்தையில்லை. ராஜேஷ்குமார் கட்டட வேலை பார்த்துவருகிறார். 

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

இவர்கள் தூரத்து உறவினர்களாக இருந்தபோதிலும், நெருங்கிப் பழகியுள்ளனர். மேலும் குழந்தையில்லாத காரணத்தால் ராஜேஷ்குமார், கீர்த்திகா தம்பதி, ஷிவானியிடம் அன்பு காட்டியுள்ளனர். இதனால் அடிக்கடி திண்டுக்கல்லிலிருந்து பல்லடத்துக்கு வந்து பிரகாஷ் வீட்டில் இருந்துவிட்டு ஷிவானியை அடிக்கடி திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து தங்களுடன் தங்க வைத்திருக்கின்றனர். 

ஷிவானியும்  அவர்களிடம் மிகவும் அன்பாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த மாதம் தீபாவளிக்கு ராஜேஷ்குமார், கீர்த்திகா தம்பதி பல்லடத்துக்குச் சென்றுவிட்டு ஷிவானியை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஷிவானி வழுக்கி விழுந்து காயமடைந்துவிட்டதாகக் கூறி அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சிகிச்சையில் இருந்த ஷிவானி உயிரிழந்திருக்கிறார். குழந்தை உயிரிழந்த தகவலறிந்த பிரகாஷ், கெளரி தம்பதி போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

கீர்த்திகா
கீர்த்திகா

இது குறித்து வடமதுரை போலீஸாரிடம் விசாரித்தோம். ”ராஜேஷ்குமாரின் உறவினர்கள் பல்லடத்திலுள்ள செங்கல்சூளையில்  பிரகாஷ், கெளரியுடன் சேர்ந்து வேலை பார்த்திருக்கின்றனர். அவர்களைப் பார்க்க பல்லடத்துக்கு வந்தபோதுதான், பிரகாஷ் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியுள்ளனர். ஒருவகையில் தூரத்து உறவினர்களாகவும் இருந்துள்ளனர். இந்தப் பழக்கம் குழந்தையை திண்டுக்கல்லுக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தீபாவளிக்கு அழைத்து சென்றவர்கள் தொடர்ந்து குழந்தையைத் தங்களுடனேயே வைத்துக்கொண்டிருந்திருக்கின்றனர். இதற்கிடையே வழக்கமாக குழந்தைகள் செய்வதுபோலச் சுட்டியாகச் சேட்டைகள் செய்திருக்கிறார் ஷிவானி. இதை கீர்த்திகா கடுமையாகக் கண்டித்திருக்கிறார். தொடர்ச்சியாக சொல்பேச்சுக் கேட்காமல் இருந்த குழந்தையைத் தாக்கத் தொடங்கியிருக்கிறார். 

`நாயுடன் விளையாடாதே இல்லையென்றால் கடித்துவிடும்’ எனக் கூறியவர், குழந்தையைக் கடித்துவிட்டு, `சொல்பேச்சு கேட்காமல் நாயுடன் விளையாடினால் இப்படி தான் கடிக்கும்’ எனக் கூறியிருக்கிறார். மேலும் அவர்கள் வீட்டில் விறகு அடுப்பு பயன்படுத்திவந்த நிலையில் தீக்கட்டையால் குழந்தைக்குச் சூடுவைத்திருக்கிறார். இதில் மிகவும் படுகாயமடைந்த குழந்தை படுத்த படுக்கையான பிறகே வேறு வழியின்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

சிறுமி
சிறுமி

நான்கு நாள்களாக பிரகாஷ், கெளரி குழந்தையிடம் பேச முயன்றபோதும் பல்வேறு காரணங்களைக் கூறி நடந்ததை மறைத்துள்ளனர். குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த கீர்த்திகா, உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டவராக இருந்திருக்கிறார். இதனால்தான் ஒரு குழந்தையின் உயிர் பறிபோயிருக்கிறது. எனவே, இதில் தொடர்புடைய ராஜேஷ்குமார், கீர்த்திகா இருவரையும் கைதுசெய்து விசாரித்துவருகிறோம்” என்றனர்.