ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர் உத்தம மைதி. இவரின் மனைவி அஞ்சனா மஹதோ. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தார். அந்த குழந்தையை பள்ளியில் சேர்த்துள்ளனர். அந்த குழந்தை சரியாக படிப்பில் ஈடுபாடு காட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு கோபமடைந்த பெற்றோர் அந்த குழந்தையின் கைகளை கட்டி சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். அதன் பிறகு பிஞ்சு குழந்தை மயக்கம் அடைந்ததை தொடர்ந்து, அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது மருத்துவமனைக்கு சென்ற வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

குழந்தை உயிரிழந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர், ரயிலில் ஏறி ஹலுதி நகருக்கு சென்றனர். அப்போது ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த முப்புதருக்குள் அந்த குழந்தையின் சடலத்தை வீசிவிட்டனர். இந்த சம்பவம் ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்று இருக்கிறது. இதையடுத்து இந்த தம்பதியினர் வீடு திரும்பி உள்ளனர். அக்கம் பக்கத்தினர் குழந்தையை பற்றி கேட்டபோது சரியாக பதில் கூறவில்லை. இதையடுத்து போலீஸுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கணவன் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெற்றோர்கள் தனது குழந்தை படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை எனவும் அதானல் அடித்ததில் இறந்துவிட்டதாகவும் கூறியிருந்தனர். இதனை தொடர்ந்து, கணவன், மனைவி இருவரையும் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
