Published:Updated:

`நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தேன்; சடலமாகப் பார்த்தேன்' - 4 வயதுச் சிறுமியின் தாய் கதறல்

எஸ்.மகேஷ்

திருவள்ளூர் அருகே `ஹாலோ பிளாக்' தயாரிக்கும் இடத்தின் பின்புறத்தில் உள்ள முட்புதரிலிருந்து 4 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹாலோ பிளாக் தயாரிக்கும் இடம்
ஹாலோ பிளாக் தயாரிக்கும் இடம்

திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரா கொத்தியம்பாக்கத்தில் `ஹாலோ பிளாக்' தயாரிக்கும் இடம் உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அமீத் வேலைபார்த்துவருகிறார். இவருக்கு 4 வயதில் மகள் இருந்தார். இவரின் மனைவியும் `ஹாலோ பிளாக்' தயாரிக்கும் இடத்தில் வேலை பார்த்துவருகிறார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 25 குடும்பங்கள் இங்கு வேலைபார்த்துவருகின்றன.

கொலை செய்யப்பட்ட 4 வயது சிறுமி
கொலை செய்யப்பட்ட 4 வயது சிறுமி

இந்நிலையில், நேற்று பிற்பகலில் அமீத்தின் உறவினர்களான நிலக்கர், சந்தரவனம் ஆகியோர் 4 வயதுச் சிறுமியைக் கடைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு, சிறுமி வீட்டுக்கு வரவில்லை. இதனால், அமீத்தும் அவரின் மனைவியும் சிறுமியைத் தேடி நிலக்கர், சந்தரவனம் தங்கியிருந்த பகுதிக்கு வந்தனர். அப்போது இருவரும் போதையில் உளறிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் சிறுமி குறித்து விசாரித்தபோது போதையில் இருந்த அவர்கள் எந்தவித பதிலும் சொல்லவில்லை.

இதனால் அமீத் மற்றும் அங்குள்ளவர்கள் சிறுமியை விடிய விடிய தேடினர். இந்த நிலையில் சிறுமியின் சடலம், ஹாலோ பிளாக் தயாரிக்கும் இடத்தின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் கிடந்தது. மேலும், சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. அதைப் பார்த்து அமீத் மற்றும் அவரின் மனைவி கதறித் துடித்தனர்.

Representational image
Representational image

இதையடுத்து, வெள்ளவேடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிறுமியின் சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சிறுமியின் சடலம் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளது.

இதற்கிடையில் சிறுமியை அழைத்துச் சென்ற நிலக்கர், சந்தரவனம் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் சில தகவல்களை போலீஸாரிடம் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நம்பிக்கையுடன் அவர்களோடு அனுப்பி வைத்தேன். ஆனால், அவர்கள் பொறுப்பில்லாமல் பதில் சொல்கின்றனர். தற்போது என் மகள் உயிரோடு இல்லை.
சிறுமியின் அம்மா

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``4 வயதுச் சிறுமியின் சடலத்தில் ஆங்காங்கே காயங்கள் உள்ளன. அவளின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமி இறந்து 10 மணி நேரத்துக்கு மேலாக இருக்கும் என்பது எங்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும். சிறுமியைக் கடைக்கு அழைத்துச் சென்றவர்கள் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஆனால், அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்துவருகின்றனர். சிறுமியைக் கொலை செய்தவர்கள் யாரென்று இன்று தெரிந்துவிடும்" என்றனர்.

காவல் நிலையத்தில் சிறுமியின் அம்மா, ``நம்பிக்கையுடன் அவர்களோடு அனுப்பி வைத்தேன். ஆனால், அவர்கள் பொறுப்பில்லாமல் பதில் சொல்கின்றனர். தற்போது என் மகள் உயிரோடு இல்லை. சடலமாக முட்புதரிலிருந்து மீட்கப்பட்டுள்ளாள். என் மகளை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை" என்று கதறினார்.

Representational image
Representational image

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. சில வாரங்களுக்கு முன், திருமுல்லைவாயல் பகுதியில் தனியாக இருந்த சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரரையும் அவரின் மனைவியையும் திருமுல்லைவாயல் போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. எனவே, சிறுமிக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.