Published:Updated:

`வியூஸ் அதிகம்; பணமும் கிடைக்குது!' -வேட்டையாடி யூடியூபில் வீடியோ வெளியிட்ட அரியலூர் இளைஞர்கள்

வனவிலங்குகளை வேட்டையாடி அதைச் சமைக்கும் வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட 4 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர் அரியலூர் போலீஸார்.

பிடிபட்ட இளைஞர்கள்
பிடிபட்ட இளைஞர்கள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் மான், முயல், மயில், உடும்பு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் அந்த வனவிலங்குகளை வேட்டையாடி அதைச் சமைத்துச் சாப்பிடும் வீடியோவை சிலர் யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக அரியலூர் போலீஸாருக்குத் தகவல் வந்துள்ளது. அவர்கள் மாவட்ட வனத்துறையினரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

யூடியூப்
யூடியூப்

இதையடுத்து வனத்துறை அலுவலர் இளங்கோவன் தலைமையில் உடையார்பாளையம் அருகே உள்ள மணக்காடு என்ற பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நான்கு பேர், இரண்டு டூவீலர்களில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்களது கையில் ஹைடெக்கான ஆப்பிள் லேப்டாப் மற்றும் போன்கள் இருந்தன. அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை, சுப்பிரமணி, கார்த்திக், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய நால்வரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன்கள், மடிக்கணினி மற்றும் கேமரா பதிவுகளைப் பறிமுதல் செய்த ஜெயங்கொண்டம் போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

`யூடியூப் வீடியோ பார்த்து கற்றுக்கொண்டேன்!' - ஏடிஎம் கொள்ளையில் சிக்கிய சென்னை இன்ஜீனியர்

போலீஸாரிடம் பேசினோம். ``இவர்கள் நால்வரும் காடுகளில் வளரக்கூடிய வனவிலங்குகளை எப்படி வேட்டையாடுவது என்றும், அதை எப்படிச் சமைத்துச் சாப்பிடுவதும் என்றும் வில்ஜேஜ் ஹண்டர் என்ற பெயரில் யூடியூப் கணக்கு ஒன்றைத் தொடங்கி அதில் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க டிஸ்கவரியில் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே செய்திருக்கிறார்கள்.

பிடிப்பட்ட இளைஞர்கள்
பிடிப்பட்ட இளைஞர்கள்

இதுவரையில், 25-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை வேட்டியாடி அதை யூடியூபில் போட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்கள். அவர்களிடம், `ஏன் இப்படிச் செய்தீர்கள்?' எனக் கேட்டால், ‘இந்த மாதிரி வீடியோக்களைப் போட்டால்தான் அதிகமான மக்கள் பார்ப்பாங்க. யூடியூப் நிறுவனமும் காசு கொடுக்கும். நாங்களும் பிரபலம் ஆகிவிடுவோம்’ என்று கூலாகச் சொன்னார்கள். இந்த இளைஞர்கள் சம்பாதிப்பதற்காகவும் பெயர் எடுப்பதற்காகவும் என்னென்ன காரியங்களைச் செய்திருக்கிறார்கள் பாருங்கள்" என்று ஆதங்கப்பட்டனர்.