Published:Updated:

`பண பரிவர்த்தனை; சர்ச்சை வாட்ஸ்அப் குழு?'- எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் சிக்கிய மேலும் ஒருவர்

தேவிபட்டினம் காவல் நிலையம்
தேவிபட்டினம் காவல் நிலையம் ( உ.பாண்டி )

தங்கள் இயக்கத்துக்குத் தேவிபட்டினம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களைத் தேர்வுசெய்து அவர்களை ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடச் செய்யத் திட்டமிட்டனர் எனக் கூறப்படுகிறது.

எஸ்.ஐ வில்சன் கொலையில் தொடர்புடைய மேலும் ஒரு நபரை அதிதீவிரவாதத் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார் இன்று ராமநாதபுரம் அருகே கைது செய்தனர். கடந்த 23-ம் தேதி தேவிபட்டினத்தில் போலீஸாரால் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய நான்காவது நபர் இவர்.

கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ வில்சன்
கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ வில்சன்
விகடன்

கடந்த மாதம் 23-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் என்.ஐ.ஏ வழக்கில் தொடர்புடையவர்கள் 4 பேர் குழுவாகப் பேசிக்கொண்டிருப்பதாகக் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த இடத்துக்குத் தேவிப்பட்டினம் சார்பு ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் போலீஸார் சென்றனர். போலீஸாரைப் பார்த்தவுடன் அங்கு நின்றுகொண்டிருந்த 4 பேரும் தப்ப முயன்றனர்.

இவர்களைச் சுற்றிவளைத்த போலீஸார், கீழக்கரை அருகே உள்ள கும்புடுமதுரை என்ற பகுதியைச் சேர்ந்த புறாக்கனி என்ற பிச்சைக்கனி, கடலூர் மாவட்டம் கோண்டூர் காலனியைச் சேர்ந்த முகமது அலி என்ற மணிகண்டன், விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முகம்மது அமீர் என்ற அருண்குமார் ஆகிய மூவரைப் பிடித்தனர். போலீஸார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பிச் சென்ற மற்றொரு நபர் ஷேக் தாவூத் எனவும் தெரியவந்தது.

இவர்கள், களியக்காவிளையில் போலீஸ் எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்துல் அமீமிற்குப் பணப் பரிவர்த்தனை செய்தது குறித்தும், மேலும் தங்கள் இயக்கத்துக்குத் தேவிப்பட்டினம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களைத் தேர்வுசெய்து அவர்களை ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடச் செய்யவும், அப்படி சேர்பவர்களுக்குட் தேவிப்பட்டினம் மற்றும் கீழதில்லையேந்தல் பகுதிகளில் உள்ள மதரசாக்களில் பயிற்சி அளிப்பதுடன், பயிற்சியில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் குறித்தும் விவாதித்துக்கொண்டிருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேவிபட்டினத்தில் ஏற்கெனவே பிடிபட்டவர்கள்
தேவிபட்டினத்தில் ஏற்கெனவே பிடிபட்டவர்கள்
உ.பாண்டி

மேலும், இவர்களின் செல்போனை ஆய்வு செய்ததில் தனியாக வாட்ஸ்அப் குழு அமைத்து இது தொடர்பாகப் பேசியதும், மதங்களையும் அரசியல் தலைவர்களையும் அவதூறாகப் பேசிய ஆடியோ மூலம் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கத் திட்டம் தீட்டியதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களிடமிருந்து மதரீதியான பிரசாரப் புத்தகங்களையும் போலீஸார் கைப்பற்றினர்.

தேவிபட்டினம் காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் சாமுவேல் தலைமையிலான போலீஸார், இவர்கள் மூவர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தப்பியோடிய ஷேக் தாவூத்தையும் தேடி வந்தனர். இந்நிலையில் ஷேக் தாவூத் ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை பகுதியில் உள்ள மீனவர் கிராமத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

ஷேக் தாவூத்
ஷேக் தாவூத்
உ.பாண்டி

இதையடுத்து அங்கு சென்ற அதிதீவிரவாதத் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் சித்தார்கோட்டை மீனவர் கிராமத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பதுங்கியிருந்த ஷேக் தாவூத்தை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷேக் தாவூத்தை விசாரணைக்குப் பின் ராமநாதபுரம் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் ராமநாதபுரம் பகுதியில் அடுத்தடுத்து சிக்கி வருவது மாவட்ட மக்களைப் பதற்றமடையச் செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு