Published:Updated:

கோவில்பட்டி: யூடியூப் மூலம் பயிற்சி! -வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட கும்பல் சிக்கியது எப்படி?

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்

வங்கிகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட வங்கி உதவி மேலாளர் உள்ளிட்ட ஐந்து பேரை போலீஸார் கண்காணித்து கைதுசெய்துள்ளனர். அந்தக் கும்பல், கொள்ளையடிப்பது எப்படி என யூடியூப்பைப் பார்த்து பயிற்சி எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்தவர் வாஷிங்டன். இவர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலுள்ள ’இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கிளை’யில் உதவி மேலாளராகப் பணிபுரிந்துவந்திருக்கிறார். இவர், 98 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்த விவகாரத்தில் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இவர்மீது வங்கி நிர்வாகம் விசாரணை செய்துவருகிறது. அத்துடன், போலீஸார் மற்றும் சைபர் க்ரைம் போலீஸாரிடம் இவரது நடவடிக்கைகள் குறித்து புகாரும் அளித்துள்ளது. இந்தநிலையில், இவர், அந்த வங்கிக் கிளையில் பணியாற்றியபோது நட்பாகப் பழகிவந்த ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன், பட்டினம்பக்கத்தைச் சேர்ந்த ஆண்டனி சகாயராஜ், கீழக்கரையைச் சேர்ந்த குமார், கமுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி ஆகியோருடன் வங்கிகளில் கொள்ளையடித்து, அதில் கிடைக்கும் பணத்தைப் பங்குபோட்டுக்கொள்ளலாம் எனவும் திட்டமிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வாஷிங்டன், ஆண்டனி, குமார், வெள்ளைப்பாண்டி, வெள்ளைச்சாமி
கைது செய்யப்பட்ட வாஷிங்டன், ஆண்டனி, குமார், வெள்ளைப்பாண்டி, வெள்ளைச்சாமி

இந்நிலையில், வெள்ளைச்சாமியின் நண்பரான வெள்ளைப்பாண்டியிடம் இந்தத் திட்டத்தைச் சொல்ல, `கோவில்பட்டியிலுள்ள ஏதாவது ஒரு பேங்க்கில் கொள்ளை அடிக்கலாம்’ என யோசனை கூறியிருக்கிறார். அந்த வங்கியை நோட்டமிடுவதற்காகவும், பாதுகாப்பு வசதிகளைத் தெரிந்துகொண்டு தகவல் சொல்வதற்காகவும் வெள்ளைப்பாண்டிக்கு அட்வான்ஸாக ரூ.1 லட்சம் பணத்தையும் கொடுத்திருக்கிறார் வாஷிங்டன்.

கொள்ளையடிப்பதற்காக ’வாஷிங்டன் லோன்ஸ்’ என்ற தனி வாட்ஸ்அப் குருப்பை உருவாக்கி, அதில் கொள்ளையடிப்பது குறித்து உரையாடிவந்திருக்கிறார்கள். வாஷிங்டனின் போன் நம்பரை சைபர் க்ரைம் போலீஸார், கடந்த ஒரு மாதமாகக் கண்காணித்து வந்துள்ளனர். அந்த வாட்ஸ்அப் குரூப்பில் முதற்கட்டமாக கோவில்பட்டியிலுள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாஷிங்டன், ஆண்டனி சகாயராஜ், குமார், வெள்ளைச்சாமி, வெள்ளைப்பாண்டி ஆகிய ஐந்து பேரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராணி தலைமையிலான போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கொள்ளைக் கும்பலின் வாட்ஸ்அப் உரையாடலகள்
கொள்ளைக் கும்பலின் வாட்ஸ்அப் உரையாடலகள்

``எனக்கு இருந்த கடனை அடைப்பதற்காக 98 லட்ச ரூபாயை என் மனைவியின் அக்கவுன்ட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணினேன். அது பேங்க் மேனேஜ்மென்டுக்குத் தெரிஞ்சு என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. கையாடல் செய்த பணத்தைத் திரும்ப அடைப்பதற்காகவும், சொந்தமாக வீடுகட்டி செட்டில் ஆகிவிடலாம் என்பதற்காகவும் பேங்க்குல பணத்தைக் கொள்ளை அடிக்கலாம்னு நினைச்சேன்.

ஆனா, ஒத்த ஆளா, அதைச் செய்ய முடியாதுன்னு இந்த அஞ்சு பேருகிட்டயும் பிளானைச் சொன்னேன். கிடைக்குற பணத்துல ஷேர்னு சொன்னதுனால, எல்லாரும் சம்மதிச்சாங்க. எங்க டீம்ல இருக்குற வெள்ளைச்சாமி பத்து வருசத்துக்கு முன்னால கோவில்பட்டியில குடியிருந்தப்போ, வெள்ளைப்பாண்டி அவருக்கு நண்பரானார். அதனால, கோவில்பட்டியிலேயே முதல் கொள்ளையை நடத்திடலாம்னு வெள்ளைப்பாண்டியிடம் சொல்லி அங்கே இருக்குற பேங்குகளுக்குப் போயி நோட்டம்விடச் சொன்னோம்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்

அதுக்காக அவருக்கு ஒரு லட்சம் ரூபா அட்வான்ஸ் பணமும் கொடுத்தோம். கோவில்பட்டி டு எட்டயபுரம் ரோட்டுல இருக்குற எஸ்.பி.ஐ பேங்க்குல கொள்ளை அடிக்கலாம்னு திட்டம் போட்டோம். பேங்குக்குள்ள எப்படிப் போகணும், எப்படி லாக்கரைத் திறக்கணும்னு நான் சொல்லிக் கொடுத்தேன். இதுபோக, யூடியூப்கள்ல பேங்குக்குள்ள ரகசியமா நுழையுறது, மாட்டிக்காம கொள்ளையடிக்கிறது எப்படின்னு கொள்ளை சம்பந்தமான வீடியோ லிங்க்குகளையும் குரூப்ல ஷேர் பண்ணினோம். இந்த வாரத்துல கோவில்பட்டியிலயும், அடுத்த வாரத்துல விருதுநகர்லயும் கொள்ளையடிக்கலாம்னு பிளான் போட்டிருந்தோம்.

அதுக்குள்ள சைபர் க்ரைம் போலீஸ்காரங்க கண்காணிச்சு எங்களைப் பிடிச்சுட்டாங்க” என போலீஸாரின் விசாரணையில் கூறியிருக்கிறார் வாஷிங்டன். “எங்களுக்கும் கடன்கள் இருக்குது. சொந்தமா வீடு கட்டலாம். நிலம் வாங்கிப் போடலாம், ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாம்னு பணத்தாசையில்தான் கொள்ளையடிக்கக் கூட்டுச் சேர்ந்தோம்” என அப்பாவியாக கூறியிருக்கிறார்கள் மற்ற நான்கு பேரும். ”வாஷிங்டன் மீது அவர் பணிபுரிந்த வங்கி நிர்வாகம் அவரது நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருந்தது. அவரது மொபைல் எண்ணைத் தொடர்ந்து கண்காணித்ததால்தான் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருப்பதும், அதற்காக தனி வாட்ஸ்அப் குரூப் அமைத்து உரையாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வாட்ஸ் அப் உரையாடல்கள்
வாட்ஸ் அப் உரையாடல்கள்

இவர்களில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள பாலமுருகனைத் தேடிவருகிறோம். இவர்களுக்கு வேறும யாருடனும் தொடர்பு உண்டா, வேறு வங்கிகளில் எதுவும் கைவரிசை காட்டியிருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர் போலீஸார். இந்தச் சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`3 ஆண்டுகளாக மாற்றப்படாத பாஸ்வேர்டு; இஎம்ஐ நெருக்கடி!’- ஏடிஎம் கொள்ளை வழக்கில் சிக்கிய வங்கி ஊழியர்
அடுத்த கட்டுரைக்கு