Published:Updated:

`7 ஆண்டுகள் காத்திருப்பு; 3 முறை போடப்பட்ட ஸ்கெட்ச்!'- ஈரோட்டில் தந்தை கொலைக்காக பழிதீர்த்த மகன்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கூலிப்படை
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கூலிப்படை

கடந்த ஒருமாத காலமாக ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து ஃபாலோ செய்து கொலை செய்வதற்குத் திட்டம் வகுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் சின்ன தங்கம் (எ) ராதாகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் அந்தியூர் மூலக்கடை பகுதியில் தனது பைக்கை சர்வீஸ் செய்வதற்கு விட்டுவிட்டு, மெக்கானிக் ஷாப்பின் வெளியே நின்றிருந்தார். அப்போது, கருப்பு நிற ஸ்கார்ப்பியோ காரில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்மக்கும்பல், ராதாகிருஷ்ணனை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ராதாகிருஷ்ணன், சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சடலமாக ராதாகிருஷ்ணன்
சடலமாக ராதாகிருஷ்ணன்

இதையடுத்து, ஸ்கார்ப்பியோ காரில் தப்பித்துச் சென்ற கொலையாளிகளைப் பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸார் அலர்ட் செய்யப்பட்டனர். கவுந்தப்பாடியை அடுத்த சலங்கபாளையம் பகுதியில் கொலையாளிகளின் கார் கிராஸ் ஆக, போலீஸார் அவர்களை விரட்ட ஆரம்பித்தனர். நீண்ட சேஸிங்கிற்குப் பிறகு கொலையாளிகளின் காரை மடக்கிய போலீஸார், காரில் இருந்த சரவணன், பாலமுருகன், ராஜேஷ் ஆகிய மூவரை வளைத்துப் பிடித்தனர். தப்பித்துச் சென்ற கொலையாளிகளான சிவா, சூர்யா ஆகியோரை அன்றைய இரவே ஈரோடு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், `பணத்துக்காகவே இந்தக் கொலையைச் செய்தோம்’ எனக் கூறியுள்ளனர்.

போலீஸாரிடம் கைது செய்யப்பட்டவர்கள் கூறுகையில், ``2013-ம் ஆண்டு நிலப் பிரச்னை தொடர்பாக ஊஞ்சக்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த சேகர் என்பவரை, ராதாகிருஷ்ணன் ஊர் மத்தியில் வைத்து அடித்தே கொலை செய்துள்ளார். அவர்மீது பல்வேறு அடிதடி வழக்குகள் இருந்ததால், மக்கள் பயந்துகொண்டு புகார் அளிக்கவில்லை. சரியான சாட்சியங்கள் இல்லாத காரணத்தால், சேகர் கொலை வழக்கிலிருந்து ராதாகிருஷ்ணன் விடுதலையானார். அப்பாவின் கொலைக்கு நீதி கிடைக்காததாலும் கொலை செய்த ராதாகிருஷ்ணனைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்றும் உயிரிழந்த சேகரின் மகன் அரவிந்த் எங்களை அணுகினார்.

கொலை செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன்
கொலை செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன்

`எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, என் அப்பாவைக் கொன்னவனோட கதையை முடிச்சிடுங்க’ என முதலில் ஒன்றரை லட்ச ரூபாயைக் கொடுத்தார். அந்தப் பணத்தோடு எங்களிடமிருந்த பணத்தையும் சேர்த்து முதலில் கார் ஒன்றை வாங்கினோம். அதையடுத்து முதல் தவணையான 2 லட்ச ரூபாயைக் கொடுத்தார். அதன்பிறகு ஈரோடு வந்து கடந்த ஒரு மாதமாக ராதாகிருஷ்ணனை ஃபாலோ செய்தோம். கொலை செய்ய இரண்டு முறை ஸ்கெட்ச் போட்டோம். ஒருசில இடையூறுகளால் அது மிஸ் ஆனது. சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தோம். மூன்றாவது ஸ்கெட்ச்சில் வகையாகச் சிக்கிக் கொண்டார்” எனக் கூறியிருக்கின்றனர்.

கைதான கொலையாளிகள் 5 பேரையும் போலீஸார் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2ல் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர். கூலிப்படையை ஏவிய அரவிந்தை கைதுசெய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தான் 16 வயதாக இருக்கும் போது தந்தையைக் கொலை செய்தவரை, 7 ஆண்டுகளாகக் காத்திருந்து மகன் கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அந்தியூர் பகுதி மக்களை அதிச்சியடைய வைத்திருக்கிறது.

பின் செல்ல