Published:Updated:

குமரி: மதுபோதையில் சிறுவர்கள்! - சாலையோரம் தூங்கியவரைச் சலனமின்றி எரித்துக் கொன்ற கொடூரம்

எரித்துக் கொல்லப்பட்ட தொழிலாளி
எரித்துக் கொல்லப்பட்ட தொழிலாளி

சாலை ஓரம் தூங்கிய சந்திரனிடம் லைட்டர் வாங்கிய சிறுவர்கள், அவர் கண்ணயர்ந்த சமயத்தில், அவரது வேட்டியில் தீயைப் பற்றவைத்துள்ளனர். இதில் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் சந்திரன் துடிதுடித்து இறந்துபோனார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (60). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகன்களுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக வீட்டுக்குச் செல்லாத சந்திரன், இருளப்பபுரம் பகுதிகளிலுள்ள சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் தூங்குவது வழக்கம். பகல் நேரங்களில் கூலி வேலைக்குச் சென்று வந்திருக்கிறார்.

இந்தநிலையில், இருளப்பபுரம் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் அருகே நேற்று அதிகாலையில் சந்திரன் பாதி எரிந்த நிலையில் இறந்துகிடந்தார். இது குறித்துத் தகவலின்பேரில் கோட்டாறு போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு ஆசாரிப்பள்ளத்திலுள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட சந்திரன்
கொலை செய்யப்பட்ட சந்திரன்

போலீஸார் நடத்திய விசாரணையில், அந்தக் கொலையைச் செய்தது ஐந்து சிறுவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸார் கூறுகையில், ``இருளப்பபுரம் பகுதியிலுள்ள ஒரு ஆக்கர்கடையில் மதுரையைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் வேலை செய்துவந்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிறுவன் ஒரு பெண்ணைக் காதலித்துவந்திருக்கிறார். நேற்று இரவு சிறுவனின் காதலி செல்போனில் பேசாமல் இருந்த காரணத்தால், விரக்தியில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்திருக்கிறார்.

போதை தலைக்கேறிய நிலையில், வழி நெடுகிலும் பல்வேறு கார்கள் மற்றும் கடைகள் மீதும் கல்லெறிந்தபடியே சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் இருளப்பபுரம் பகுதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த சந்திரனை பார்த்திருக்கிறார்கள். அவரைத் தட்டி எழுப்பி, தீப்பெட்டி இருக்கிறதா என கேட்டிருக்கிறார்கள். அவர் தீப்பெட்டி இல்லை என்றும், லைட்டர் தான் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். சந்திரனிடமிருந்து சிறுவர்கள் லைட்டரை வாங்கியிருக்கிறார்கள். சந்திரன் மீண்டும் கண்ணயர்ந்த சமயத்தில், அவரது வேட்டியில் தீயைப் பற்றவைத்திருக்கிறார்கள் சிறுவர்கள். இதில் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் சந்திரன் துடிதுடித்து இறந்துபோனார்" என்றனர்.

எரிந்த நிலையில் தொழிலாளி
எரிந்த நிலையில் தொழிலாளி

சந்திரன் உடலில் தீ வைத்த சிறுவர்கள் எந்தவித அச்சமோ, சலனமோ இல்லாமல் அங்கிருந்து செல்லும் காட்சி அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி-யில் பதிவாகியிருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்திய கோட்டாறு போலீஸார், மதுரையைச் சேர்ந்த அந்த ஐந்து சிறுவர்களையும் கைதுசெய்தனர். அதிகமான கடைகளும் குடியிருப்புக்களும் நிறைந்த இருளப்பபுரம் பகுதியில் இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு