Published:Updated:

7 நாள்கள்... 5 கொலைகள்... ரத்தத்தில் நனையும் தலைநகரம்!

7 நாள்கள்... 5 கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
7 நாள்கள்... 5 கொலைகள்

இரும்புக்கரம் கொண்டு அடக்குவாரா முதல்வர்?

7 நாள்கள்... 5 கொலைகள்... ரத்தத்தில் நனையும் தலைநகரம்!

இரும்புக்கரம் கொண்டு அடக்குவாரா முதல்வர்?

Published:Updated:
7 நாள்கள்... 5 கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
7 நாள்கள்... 5 கொலைகள்

சில நாள்களுக்கு முன்பு சென்னையில் மழை பெய்து ஓய்ந்த ஈர இரவு அது. குளிர்ச்சியான காற்று வீசிக்கொண்டிருக்க, பெரும்பாக்கம் அண்ணா தெருவைச் சேர்ந்த பழனீஸ்வரியும், அவரின் மகன் சரத்குமாரும் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். விர்ர்ர் விர்ர்ரென சீறியபடியே மூன்று பைக்குகளில் மூர்க்கமாக வந்த ஒரு கும்பல், சரத்குமார் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. பெரும் சத்தத்துடன் வெடித்து அந்த ஏரியாவே புகை மண்டலமாக... அப்போதும் விடாமல் சரத்குமாரை பட்டாக்கத்தியால் வெட்டி, சடலத்தைச் சாலையில் எறிந்தனர். கொலையாளிகளிடம் கொஞ்சமும் பதற்றமில்லை... சுற்றியிருந்த பொதுமக்களிடம் பட்டாக்கத்தியை நீட்டியபடி எச்சரித்துவிட்டு, நிதானமாகக் கிளம்பிச் சென்றது அந்தக் கும்பல்!

பட்டாக்கத்தியுடன் பைக் வலம்!

மேற்கண்ட சம்பவம் மட்டுமல்ல... கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டுமே ஐந்து கொலைகள் நடந்திருக்கின்றன. அண்ணா சாலையிலிருக்கும் ஓர் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் இருவர் நம்மிடம் பீதியுடன் பகிர்ந்துகொண்ட சம்பவம் இது... இருவரும் இரவுப்பணி முடித்து 12 மணிவாக்கில் எதிரெதிர் திசையில் பைக்கில் கிளம்பியிருக்கிறார்கள். ஒருவர் ஜெமினி மேம்பாலத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, எதிரே ஒன்வேயில் சீறியபடி இரண்டு பைக்குகளில் பட்டாக்கத்தியுடன் வந்த ஒரு கும்பல், அவரது பைக்கை இடிப்பதுபோல உரசிச் சென்றிருக்கிறது. சுதாரித்தபடி நூலிழையில் தப்பினார் அவர். சில நிமிடங்களில் ஸ்பென்ஸரை தாண்டி சென்ற நண்பரிடமிருந்து அவருக்கு போன் வந்துள்ளது. “சார், பைக்குல வந்த ஒரு கும்பல், பட்டாக்கத்தியால என்ன உரசப் பார்த்தாங்க... வண்டியை வளைச்சு தப்பிச்சிட்டேன்” என்று பதறியுள்ளார். மேலும் அவரே, உடனடியாக இது குறித்து காவல்துறையின் 100 எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், ஒரு மணி நேரம் கழித்தே அவரது அலைபேசியைத் தொடர்புகொண்ட போலீஸார் ஒருவர், அந்த நபரிடம் என்ன, ஏது என்று விசாரித்திருக்கிறார். இதுதான் தலைநகர காவல்துறையின் பாதுகாப்பு லட்சணம்!

சரத்குமார்
சரத்குமார்

மேற்கண்ட ஓரிரு சம்பவங்களைவைத்து மட்டுமே இந்த முடிவுக்கு வந்துவிடவில்லை. சென்னையின் பல்வேறு இடங்களிலும் பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் வலம்வருகிறார்கள் ரெளடிகள். இவையெல்லாம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் அப்பட்டமான காட்சிகள்! ஏதோ லட்டு உருண்டைகள்போல சர்வ சாதாரணமாக ரெளடிகளின் கைகளில் உருள்கின்றன நாட்டு வெடிகுண்டுகள். ஏற்கெனவே பலமுறை எச்சரிக்கப்பட்டும், கைதுசெய்யப்பட்டும்கூட அரிவாளால் கேக் வெட்டப்படும் ரெளடிகளின் பிறந்தநாள் வைபவங்கள் ஜோராகத் தொடர்கின்றன. இப்போது ஏழு நாள்களில், ஐந்து கொலைகளில் வந்து சந்தி சிரிக்கிறது சென்னை காவல்துறையின் சட்டம், ஒழுங்கு! வரிசையாகச் சம்பவங்களைப் பார்ப்போம்...

முதல் பாராவில் படித்த கொலைச் சம்பவத்தில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றி, வினோத், சாம், பிரவீன், டைமன் பிரவீன், ஆனந்தகுமார், முத்து, சூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஆறு பிரிவுகளில் இவர்கள்மீது வழக்கு பதிவு செய்திருக்கும் போலீஸார் நம்மிடம், ``பழனீஸ்வரியின் மூத்த மகன் சரத்குமார், 8-ம் வகுப்பு படித்திருக்கிறான். வேலைக்கு எதுவும் செல்லாமல், அடிதடிச் சம்பவங்களில் ஈடுபட்டு மூன்று முறை சிறைக்குச் சென்ற சரத்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது. சில மாதங்களுக்கு முன் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை வெடிகுண்டு வீசி, வெட்டிய வழக்கிலும் சரத்குமார் மீது பகை உள்ளது. இந்தக் கொலை வழக்கில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த எட்டு பேரைக் கைது செய்திருக்கிறோம். இந்த வழக்கில் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியில் வந்த வளர்ந்துவரும் ரெளடி ஒருவனுக்கும் தொடர்பு இருந்துள்ளது. அவனையும் விரைவில் பிடித்துவிடுவோம்” என்றார்கள்.

7 நாள்கள்... 5 கொலைகள்... ரத்தத்தில் நனையும் தலைநகரம்!

எங்க ஏரியா... உள்ளே வராதே!

சென்னை ஆவடி, கோணாம்பேடு, ராஜம்மாள் நகரைச் சேர்ந்தவர் பழனி. அரசு பஸ் டிரைவரான இவரின் மூத்த மகன் கணேசன், தரமணியிலுள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளோமா மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். ஜூன் 15-ம் தேதி இரவு கோணாம்பேடைச் சேர்ந்த உமாபதி, யுவராஜ், விஷ்ணு, எஸ்.சந்தோஷ். கே.சந்தோஷ் ஆகியோர் பைக்கை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கணேசன், நண்பர்களுடன் பைக்கில் வந்திருக்கிறார். கணேசன் ஓட்டிவந்த பைக், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் மீது மோதியது. சாதாரணமாக ஆரம்பித்த வாக்குவாதம், கைகலப்பாகியிருக்கிறது. கோணாம்பேடு கும்பல், கொஞ்சமும் இரக்கம் இல்லாமல், அருகில் கிடந்த கட்டைகளை எடுத்து கணேசனை தலையிலும் நெஞ்சிலுமாக சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் நனைந்தபடி சரிந்த கணேசனைப் பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தும் பலனில்லை... பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின் பின்னணியை விசாரித்தால் ‘போதை’ விவகாரத்தைச் சொல்கிறார்கள் போலீஸார்.

கணேசன்
கணேசன்

“அன்றைய தினம் காலையில் ஆவடியிலுள்ள தனியார் கல்லூரி மைதானத்தில், கணேசனும் அவரின் நண்பர்களும் மது அருந்தியிருக்கின்றனர். அப்போது, உமாபதி தரப்பு, ‘ஏங்க ஏரியாவுல நீங்கள் எப்படி மது அருந்தலாம்?’ என்று கேட்டிருக்கின்றனர். அப்போதே லேசான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அன்றைய தினம் மாலையே திட்டமிட்டு, கணேசனை அந்தக் கும்பல் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளது. உமாபதியையும், அவரின் நண்பர்களையும் கைதுசெய்து ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்கிறார்கள் போலீஸார்.

அப்ரூவர் அச்சம்... போட்டுத்தள்ளிய ரெளடிகள்!

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவழகன் என்கிற கறுப்பு வடிவேல். ரௌடியான இவர்மீது சென்னை பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 20 நாள்களுக்கு முன்பு வடிவேலை தாம்பரம் போலீஸார் கைதுசெய்தனர். இங்குதான் வில்லங்கமே தொடங்கியது... சூளைமேட்டைச் சேர்ந்த ஸ்டீபன் என்கிற விநாயமூர்த்தி, வினோத்குமார் என்கிற காராமணி, நிர்மல், சந்துரு, பெரம்பூரைச் சேர்ந்த சாய், மேத்தா நகரைச் சேர்ந்த அப்பு ஆகியோர் கறுப்பு வடிவேலுடன் இணைந்து பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள். ஏற்கெனவே இவர்களுக்கு வடிவேலின் சில நடவடிக்கைகளில் ‘பிசுறு’ தட்டியிருக்கிறது. இதனால், எங்கே வடிவேல் அப்ரூவராக மாறி தங்களைப் பற்றியும் போலீஸாரிடம் போட்டுக் கொடுத்துவிடுவானோ என்று சந்தேகமடைந்த அந்தக் கும்பல் வடிவேலுக்கு ஸ்கெட்ச் போட்டது.

சில தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த வடிவேலுக்கும் லேசாகப் ‘பொறி’ தட்டவே... சுதாரித்தவர், தாம்பரத்திலிருக்கும் வீட்டுக்குப் போகாமல், ஷெனாய் நகரிலிருக்கும் தன் உறவினர் வீட்டுக்குச் சென்று பதுங்கினார். அதையும் மோப்பம் பிடித்துவிட்ட ஸ்டீபன் கும்பல், ஜூலை 15-ம் தேதி இரவு வடிவேல் தங்கியிருந்த பகுதிக்குச் சென்று, சத்தமாக ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டனர். அதைக் கேட்டு வெளியில் வந்த வடிவேலை ஓட ஓட விரட்டி, ஷெனாய் நகர் முத்தியப்பன் தெருவில், சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. சேத்துப்பட்டு போலீஸார் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்திருக்கின்றனர்.

மணிகண்டன் - முத்து
மணிகண்டன் - முத்து

கொலையின் விலை 40 ரூபாய்!

மாதவரம் 2-வது தெரு, உடையார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவரின் மகன் மணிகண்டன். இவருக்கு மகிமா என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை. ஜூன் 16-ம் தேதி பட்டப்பகலில் மணிகண்டனை அசால்ட்டாக கத்தியால் குத்தி, சாலையில் சாய்த்துவிட்டுச் சென்றார்கள் மர்ம நபர்கள். ஜடாமுனீஸ்வரன் கோயில் எதிரில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த மணிகண்டனை பதறியடித்துக்கொண்டு அவரின் அம்மா சாவித்திரியும், மனைவி மகிமாவும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் திக்கித் திணறியபடி பேசிய மணிகண்டன், “நான் முத்து, புகழ் மூணு பேரும் சரக்கடிச்சோம். மப்பு ஓவரா ஏறி வாக்குவாதம் ஏற்பட்டு, முத்துகிட்ட நான் கொடுத்த நாப்பது ரூவா கடனைத் திருப்பிக் கேட்டேன். அதுக்குப் போயி என்னைக் கத்தியால குத்திட்டு, கீழே தள்ளி கழுத்துலயே மாறி மாறி மிதிச்சான்’ என்று கதறியவரின் மூச்சு அப்படியே நின்றுபோனது. இந்த வழக்கில் முத்துவைக் கைது செய்துள்ளது போலீஸ். கொலைப் பட்டியல் முடியவில்லை, இன்னும் இருக்கிறது!

செங்கல்லால் அடித்தே கொலை!

சென்னை பட்டாபிராம், உழைப்பாளர் நகரைச் சேர்ந்தவர் சுகுணா. இவரின் மகன் பிரசாந்த்குமார், ஆட்டோமொபைல் படிப்பை முடித்துவிட்டு, வெல்டிங் வேலை செய்துவந்தார். அம்பேத்கர் நகரிலுள்ள ஒரு கும்பலுக்கும், பிரசாந்த்குமார் மற்றும் அவரின் நண்பர்களுக்கும் இடையே நடந்த தகராறு மீதான வழக்கு பட்டாபிராம் காவல் நிலையத்தில் உள்ளது. ஜூன் 14-ம் தேதி மாலை 4 மணியளவில் பிரசாந்த்குமார், அவரின் நண்பர்களை அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்த சிலர் சுற்றிவளைத்து செங்கல் மற்றும் தென்னை மட்டையால் கொடூரமாகத் தாக்கினார்கள். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பலியானார் பிரசாந்த்குமார். இந்த வழக்கில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அஜித், முகேஷ், வினோத், சாய் ஆதித்யா, ஜூலி ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

பிரசாந்த்குமார்
பிரசாந்த்குமார்

சென்னை மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே நடந்த ஐந்து கொலைச் சம்பவங்கள் இவை. எங்கே கோட்டைவிடுகிறது போலீஸ்? உயரதிகாரி ஒருவரிடம் கேட்டால், ``போலீஸாருக்கு வேலைச்சுமை கூடியிருக்கிறது. டாஸ்மாக் கடை பாதுகாப்புப் பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றால், ரோந்துப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா நோய்த் தொற்றால் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்டிருக் கின்றனர். குற்றங்களைத் தடுப்பது குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசித்துவருகிறோம். விரைவில் ரோந்துப் பணிகளை முடுக்கிவிட்டு, குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்” என்றார்.

மேற்கண்ட குற்றச் சம்பவங்கள் தனிநபர்களின் பகை, போதையில் கொலை, ரெளடிகளின் தொழில் போட்டி என வெவ்வெறு காரணங்களில் விரிந்தாலும், சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதில் காவல்துறையின் அக்கறையின்மை என்ற ஒற்றைப்புள்ளியில் வந்து நிற்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களைக் கண்காணிக்க சென்னை பெருநகர காவல்துறையில் உளவுத்துறை, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் ஹிஸ்டரி ரிக்கார்டில் இடம்பெற்றுள்ள பெரிய தாதா தொடங்கி வழிப்பறி ரெளடிகள் வரை கண்காணித்து, தினசரி ரிப்போர்ட் அளிக்க வேண்டும். இதைச் சரியாக செய்தாலே பெருமளவு குற்றச் சம்பவங்களைத் தடுத்துவிடலாம்.

பொதுவாகவே தி.மு.க ஆட்சியின்போது எதிர்க்கட்சியினர், “ரெளடிகள் பெருகிவிட்டனர்” என்று விமர்சிப்பார்கள். கடந்த காலங்களில் எப்படியோ... ஆனால், இந்தமுறை கொரோனா நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப்பணிகளில் தி.மு.க அதிக அக்கறையுடன் செயல்பட்டுவருகிறது. இதே அக்கறையை காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதல்வர் சட்டம், ஒழுங்கிலும் காட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism