Published:Updated:

கத்தி முனையில் பூசாரி குடும்பம்; 100 பவுன் நகைக் கொள்ளை! -திண்டுக்கல் அதிர்ச்சி

பிடிபட்ட கொள்ளையர்கள்
பிடிபட்ட கொள்ளையர்கள்

குடும்பத்தினர் முன்னிலையில் அந்தக் கும்பல் வீட்டுக்குள் உள்ள பீரோவை உடைத்து 100 பவுன் நகை மற்றும் 35 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்தது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே சுக்காம்பட்டியில் உள்ள சிவன் கோயில் பூசாரியாக இருப்பவர் துரை ஆதித்தன் (60). கூடவே, இங்குள்ள பகுதியில் திருவேங்கட மலைச்சாமி சித்தர் ஆலயம் என்ற கோயிலைக் கட்டி அதை நிர்வகித்து வருகிறார். இவரைப் பார்ப்பதற்குக் கோயிலுக்கும் வீட்டுக்கும் பலரும் வந்து செல்வதுண்டு என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், துரை ஆதித்தனைப் பார்க்க வேண்டும் என்று கூறி மதிய நேரத்தில் அவரின் வீட்டுக்கு 7 பேர் வந்துள்ளனர். துரை ஆதித்தனின் மனைவி, வீட்டுக்கு வந்தவர்களை அமர வைத்துள்ளார். அப்போது துரை ஆதித்தன், மனைவி, மகன், மகள், மருமகன் உள்ளிட்டோரும் இருந்துள்ளனர்.

கத்தி முனையில் பூசாரி குடும்பம்; 100 பவுன் நகைக் கொள்ளை! -திண்டுக்கல் அதிர்ச்சி

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த 7 பேரும் கத்தியை எடுத்து பூசாரி குடும்பத்தினர் கழுத்தில் வைத்து மிரட்டியவாறு கதவு, ஜன்னல்களைப் பூட்டியுள்ளனர். சத்தம் வெளியே கேட்காத வகையில் கத்தியால் மிரட்டியபடி, அனைவரின் கை மற்றும் வாய் பகுதியிலும் கட்டுப் போட்டனர்.

மேலும், சத்தம் ஏதும் வந்தால், அனைவரையும் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து, குடும்பத்தினர் முன்னிலையில் அந்தக் கும்பல் வீட்டுக்குள் உள்ள பீரோவை உடைத்து 100 பவுன் நகை மற்றும் 35 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு, அவர்களை வீட்டுக்குள் வைத்து, வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

இதுபற்றி தகவலறிந்த திண்டுக்கல் எஸ்.பி சக்திவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமரா ஆதாரங்களை ஆய்வு செய்தபோது 7 பேர் கும்பல் கொள்ளையடித்த பொருள்களுடன் காரில் தப்பித்துச் செல்வது தெரியவந்தது. இதற்கிடையே, கொள்ளையர்களின் கார் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சென்றுகொண்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், கொட்டாம்பட்டி போலீஸார் ஜீப்பில் கொள்ளையர்களை விரட்டிச் சென்றுள்ளனர்.

ஆனாலும், பிடிக்க முடியவில்லை. கார் புதுக்கோட்டை எல்லைக்குட்பட்ட பொன்னமராவதி பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, புதுக்கோட்டை எஸ்.பி அருண்சக்திகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே, மாவட்ட எஸ்.பி தலைமையில் பொன்னமராவதி போலீஸார் கொள்ளையர்களைப் பிடிக்கத் தயார் நிலையில் இருந்தனர்.

தச்சம்பட்டி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார் நிற்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கொள்ளையர்களின் கார் நிற்பதைக் கண்டறிந்த போலீஸார் அருகே சென்றபோது, காரில் இருந்த கொள்ளையர்கள் கதவைத் திறந்து ஓட்டம் பிடித்துள்ளனர். அவர்களை விடாமல் துரத்திய பொன்னமராவதி போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் துரத்திச் சென்று 5 பேரையும் மடக்கிப் பிடித்தனர். சினிமா பாணியில் போலீஸார் கொள்ளையர்களை விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிக்கிய கொள்ளையன்
சிக்கிய கொள்ளையன்

விசாரணையில், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்டதாக அஜித் (20), சந்தோஷ் (23), கல்யாண சுந்தரம் (34), செல்லப்பாண்டி (24), கலைஞானம் (27) என 5 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கார், 54 பவுன் நகை, 507 கிராம் வெள்ளி, 35 லட்சம் ரொக்கப்பணம், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ``பிடிபட்ட கொள்ளையர்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். அந்தக் கும்பலில் தப்பித்து ஓடியவர்களைத் தேடி வருகிறோம்" என்றனர்.

கோயில் பூசாரியின் வீட்டில் பட்டப்பகலில் நடந்த கொள்ளைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த போலீஸாருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு