Published:Updated:

`பிரச்னைகளைத் தாண்டி படிக்க வந்தால்?!' -மாணவிகளிடம் பாலியல் சீண்டல் குறித்து நீதிபதி வேதனை

நாகராஜன், புகழேந்தி, பாலியல் சீண்டல்
நாகராஜன், புகழேந்தி, பாலியல் சீண்டல்

இந்த பிரச்னைகளைத் தாண்டி மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்தால் ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். இது வேதனை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

செங்கல்பட்டு அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர்கள் குற்றவாளிகள் எனக் கடந்த 21-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் அவர்களுக்கான தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

`பிரச்னைகளைத் தாண்டி படிக்க வந்தால்?!' -மாணவிகளிடம் பாலியல் சீண்டல் குறித்து நீதிபதி வேதனை

செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியர் நாகராஜன் என்பவரும், இயற்பியல் ஆசிரியர் புகழேந்தி என்பவரும் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகக் 2013-ல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும், இந்திய மாணவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நாகராஜ் என்பவர் அதே பள்ளியில் 30 வருடங்களாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். மேலும் நல்லாசிரியர் விருது பெற்றவர். இயற்பியல் ஆசிரியர் புகழேந்தியும் மாணவர்கள் மத்தியில் பிரபலமானவர். இதனால் ஆசிரியர்களுக்கு ஆதரவாக உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த புகழ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அவருடைய மகளுக்காக நீதிமன்ற படியேறினார்.

இந்திய மாணவர் சங்கப் போராட்டம்
இந்திய மாணவர் சங்கப் போராட்டம்

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் 2018-ல் ஆசிரியர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் புகழ். வழக்கை விசாரணை செய்த நீதிபதி வேல்முருகன் இரண்டு ஆசிரியர்களும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து இன்று அவர்களுக்குத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

பெண் குழந்தைகளுக்கு அவர்களின் குடும்பத்தினர்களிடையே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, சிறிய வயதிலேயே அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். இந்த பிரச்னைகளைத் தாண்டி மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்தால் ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். இது வேதனை அளிக்கக் கூடியதாக இருக்கிறது” என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

நல்லாசிரியர் விருது பெற்ற நாகராஜன் என்ற ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.24,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அதுபோல் ஆசிரியர் புகழேந்திக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 4,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவர்களை உடனடியாக சிறையில் அடைக்க நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு