Published:Updated:

'நகராட்சியா மாத்துங்க...'

'நகராட்சியா மாத்துங்க...'

'நகராட்சியா மாத்துங்க...'
பொதுமக்களோடு சேர்ந்து குரல் கொடுக்கும் ஊராட்சித் தலைவர்!
'நகராட்சியா மாத்துங்க...'
'நகராட்சியா மாத்துங்க...'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரடு முரடான சாலைகள்... அதன் மேல் அனாயா சமாக ஓடும் கழிவு நீர்க் கால்வாய்கள்... எங்கும் குவிந்திருக்கும் குப்பைகள்... இதுதான் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் நெற்குன்றத்தின் சாபக் காட்சிகள்!

'நகராட்சியா மாத்துங்க...'

இந்த சாபக் காட்சிகளை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தபோது, ஏரியாவாசிகள் சிலர் நம்மைச் சூழ்ந்து கொண்டு, 'யார் நீங்கள்? எதற்காக புகைப்படம்

எடுக்கிறீர்கள்?' என்றனர். வந்த காரணத்தைக் கூறியதும், ஊராட்சி நிர்வாகிகள் மீதான தங்கள் கோபத்தை வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.

''சாலை போடுவதற்காக 20 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அது எங்கே சென்றது என்றே தெரியவில்லை. என்ன செய்ய... சாலை போட்டுவிட்டதாகக் கணக்குக் காட்டிச் சுருட்டிவிட்டார்கள். கோயில் குளத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு பக்கம் மட்டும் சுவர் கட்டி, போர்டு மாட்டியுள்ளார்கள். சாலையை ஒட்டியுள்ள மற்றொரு பகுதி திறந்து கிடக்கிறது. அந்தப் பகுதியில் சாலையும் மோசமாக இருப்பதால், விபத்துகள் நடப்பதற்குள் அரசு ஏதாவது செய்ய வேண்டும். குப்பைகள் அகற்றப்படாததால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பன்றிக் காய்ச்சல் போன்று ஏதாவது ஒரு பிரச்னை வந்தால்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?' என கொந்தளித்தனர் நெற்குன்றத்தினர்.

அங்கிருந்து நகர்ந்து, நெற்குன்றம் சக்திநகர் பகுதிக்கு சென்றோம். தெருவுக்குள் நுழைய முடியாதபடி கால்வாய் நீர் தேங்கியிருந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த கலைவாணி மற்றும் விஜயலட்சுமி கூறுகையில்,

''நாங்க இங்க குடிவரும்போது இதுதான் நெற்குன்றத்தின் முக்கியத் தெரு. ஆனா... அதன் பிறகு இந்தத் தெருவை கண்டுக்குறதே இல்ல. கழிவுநீர் தேங்கித் தெருவே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிடுச்சு. நாங்களும் எவ்வளவோ மண்ணடிச்சு மேடு தூக்கிப் பாத்துட்டோம். ஆனா, கால்வாய் தண்ணி ஓட வழி வழியில்லாததால அங்கங்கே டெண்ட் அடிச்சு நின்னுடுது. கால்வாயை சரி பண்ணி, சிமென்ட் ரோடு போடுங்கன்னு எத்தனையோ தடவை கோரிக்கை வச்சிட்டோம். ஆனா, இது தார் சாலை... அதனால சிமென்ட் ரோடு போடமுடியாதுனு சொல்றாங்க. தேடிப் பாருங்க... இங்க தார் ரோடு எதுவும் இருக்கானு?'' எனக் கேட்கின்றனர்.

அந்தப் பகுதி வார்டு கவுன்சிலர் அஞ்சுகம் ரவியிடம் பேசினோம், 'நானும் பல முறை கூறிவிட்டேன். முடிந்த வரை ஊராட்சி ஊழியர்களை வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். கால்வாய் அமைத்து சாலை போடப் போராடுகிறேன். ஆனால், ஊராட்சியில் பணமில்லை என்று கூறுகிறார்கள். ஊராட்சித் தலைவர் சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாங்கள் பெரும்பான்மை தி.மு.க. கவுன்சிலர்கள். அரசிடம் பேசி தேவையான நலத்திட்டங்களைப் பெறுவோம் என்று அழைத்தாலும் தயங்கிக் கிடக்கிறார். என்ன செய்வது என்று தெரியவில்லை. என் அலுவலகம் வந்து பாருங்கள். அங்கேயும் இதே நிலைதான். ஓட்டுப் போட்ட மக்கள் எங்களைத் திட்டுகிறார்கள், என்ன செய்வது என்று புரியவில்லை!' என நம்மிடம் புலம்புகிறார் கவுன்சிலர்.

'நகராட்சியா மாத்துங்க...'

திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி பி.ஜே.பி. துணைத் தலைவரும், நெற்குன்றம் 2-வது வார்டு கவுன்சிலருமான எஸ். செல்வமோ... 'இங்கு சுடுகாடு வரைக்கும் எல்லாமே ஊழல்தான் சார். ஊராட்சித் தலைவரால எதையும் எதிர்க்க முடியலை. சாலைகள் சீரமைக்க, டிரைனேஜ் அமைக்க என்று ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்த முடியாத நிலைமையில இருக்கு. மக்களின் தாகத்தைத் தீர்க்க குடிநீர் வாரியத்துக்கு அளிக்கப்பட்ட நிலத்தைக் கூட, தங்களுடையதுனு சிலர் சொந்தம் கொண்டாடுறாங்க. ஊராட்சியால் இதைத் தடுக்க முடியலை!' என்றார்.

மக்களின் பல்வேறு குறைகள், குற்றச்சாட்டுகளைப் பற்றி நெற்குன்றம் முதல் நிலை ஊராட்சித் தலைவர் ப.மனோகரனிடம் கேட்கச் சென்றோம். அலுவலகத்தைப் பார்த்ததும், அதிர்ச்சியாக இருந்தது. இதுதான் ஊராட்சி அலுவலகமா என்று ஒன்றுக்கு இரண்டு முறை அங்கிருந் தவர்களிடம் கேட்டுவிட்டு... உள்ளே சென்றோம். அந்த அளவுக்குப் பாழடைந்து, அரைகுறைக் கட்டடமாக இருந்தது அலுவலகம். உள்ளே சென்றபோது, இலவச கலர் டி.வி. வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார் மனோகரன்.

அவரிடம் மக்களின் நிலைமையைச் சொன்னோம்.

''ஒரு ஊராட்சி என்றால் 2,000 அல்லது 3,000 பேர் என்று மக்கள் தொகை இருக்கும். ஆனால், நெற்குன்றம் முதல் நிலை ஊராட்சியில், ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பேருக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்குப் போதுமான நிதி இல்லை. எங்களுக்கு அரசு அளிக்கும் நிதி போதுமானதாக இல்லை. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்குக் கூட சம்பளம் கொடுக்க முடியாத கேவலமான நிலையில் இருக்கிறோம். இதை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம். அரசும் விரைவில் தரம் உயர்த்துவதாக உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் பகுதியில் சாலை அமைக்க, 36 கோடியில் பாதாள சாக்கடை அமைக்க, 19.17 கோடியில் குடிநீர் தொட்டி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பேரூராட்சி அல்லது நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டால்தான் இந்த நிதியைச் செலவிட முடியும். குடிநீர் வடிகால் வாரியத் துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் உள்ளது...'' என ஊராட்சித் தலைவரும் மக்களோடு மக்களாகச் சேர்ந்து புலம்ப ஆரம்பித்தார்.

''முதல் நிலை ஊராட்சியாக இருக்கும் நெற்குன்றத்தை நகராட்சியாக அல்லது குறைந்த பட்சம் பேரூராட்சியாக வாவது தரம் உயர்த்தினால்... மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும்!'' என்பது இந்தப் பகுதிவாசிகளின் கோரிக்கை.

ஆக... 'உள்ளாட்சியில் நல்லாட்சி' என்ற வாசகம் நெற்குன் றத்தைப் பொறுத்தவரை வெறும் சொற்குன்றம்தானா?

- பா.பிரவீன் குமார்