Published:Updated:

அனல் பறக்கும் அனல் மின்நிலைய விவகாரங்கள்

ஆம்பளைங்களைத் தனியாய் பிரிச்சு அடிச்சாங்க!

அனல் பறக்கும் அனல் மின்நிலைய விவகாரங்கள்

ஆம்பளைங்களைத் தனியாய் பிரிச்சு அடிச்சாங்க!

Published:Updated:

நாகை மாவட்டக் கடலோர கிராமங்கள் இப்போது அனலாகக் கனன்றுகொண்டு இருக்கின்றன! 

ஏற்கெனவே மூன்று தனியார் அனல் மின் நிலையங்கள் அந்தப் பகுதியில் இயங்கி  வரும்

##~##
சூழலில், மேலும் ஒன்பது நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். இதை எதிர்த்து ஏரியா மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். பேச்சுவார்த்தைகள் முடியும் முன்னரே, ஒரு நிறுவனம் தன் கட்டுமானத்தைத் தொடங்கியது, பொதுமக்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.

தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் எருக்கட்டாஞ்சேரி கிராமத்தில், 830 ஏக்கரில் அனல் மின் நிலையம் தொடங்க, செட்டிநாடு குழுமம் அனுமதி வாங்கி இருக்கிறது. இது மாதிரி அனுமதி வழங்கும்போது, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள், அந்த நிறுவனம் உருவாவதற்குத் தடங்கல் சொல்லக் கூடாது என்ற விதியைப் பின்பற்ற வேண்டும். இதற்காக கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்துவார்கள். இது தொடர்பாக, இரண்டு முறை கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. தங்கள் கடுமையான எதிர்ப்பை கிராம மக்கள் பதிவு செய்தார்கள். அதனால், எந்த ஒரு முடிவும் எட்டப்​படாத சூழல் நிலவியது. மக்கள் ஏற்காவிட்டால் என்ன, நாம் கட்டுமான வேலையைக் கவனிப்போம் என்று நிறுவனங்கள் களத்தில் இறங்கின.

அனல் பறக்கும் அனல் மின்நிலைய விவகாரங்கள்

கடந்த 16-ம் தேதி, சுற்றுச் சுவர் கட்டும் வேலையைத் தொடங்கியது செட்டிநாடு நிறுவனம். உடனே ஆவேச​மான கிராம மக்கள், ஒன்று கூடி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தரங்கம்பாடி தாசில்தார் சூரியமூர்த்தியிடம் சென்று முறையிட்டனர். அவரும் மக்களுடன்சேர்ந்து, சுவர்

அனல் பறக்கும் அனல் மின்நிலைய விவகாரங்கள்

கட்டும் இடத்தைப் பார்வையிடப் போனார். மக்கள் கூட்டமாக வருவதை அறிந்ததும், கட்டுமானத் தொழி​லாளர்கள் ஓடிவிட்டார்கள்.  கிராம மக்கள், அந்தச் சுவரை சில இடங்களில் தகர்த்துவிட்டுத் திரும்பினர். அதன்பிறகு போலீஸ் ஆட்டம் ஆரம்பமானது.

எருக்கட்டாஞ்சேரி மக்களை சந்தித்தோம். ''போலீஸ்​காரர்கள் ஊருக்குள் புகுந்ததும், ஆம்பிளைங்களை எல்லாம் தனியாகப் பிரித்து அடித்து வேனில் ஏற்றினார்கள். 'எவன்டா அவன், நாட்டாமை செல்வம்?’ என்று கேட்டுக் கேட்டே எல்லாரையும் அடித்தார்கள். ஊருக்குள் அடித்தது போதாது என்று போலீஸ் ஸ்டேஷனில் வைத்தும் அடித்துத் துவைத்து இருக்கிறார்கள்!'' என்று கண்ணீர்விட்டார் மல்லிகா.

கனகம்மாள் என்ற மூதாட்டி, ''காலங்காலமா நாங்க பொழச்ச மண்ணு இது. திடீர்னு வந்து அதைக் கட்டப்போறோம், இதைக் கட்டப்போறோம்னு சொன்னா, நாங்க எங்க போறது? இது நாங்க வாழுற பூமி. தடுக்கப்போன எங்க ஜனங்க, இப்போ போலீஸ்கிட்ட அடி வாங்கி ஜெயில்ல கெடக்காங்க, இதைக் கேட்க யாருமே இல்லையா?'' என்று கதறினார்.

காத்தான்சாவடியைச் சேர்ந்த தனசீலன், சந்தோஷ் என்ற இரு வாலிபர்களை, கை, கால்களைக் கட்டி இழுத்துச் சென்றதாம் போலீஸ். இதற்கு நியாயம் கேட்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன எருக்கட்டாஞ்சேரி நாட்டாமை செல்வமும் கைது செய்யப்பட்டார்.  அவரையும் பலமாகத் தாக்கி இருக்கிறது போலீஸ். கைது செய்யப்பட்ட 14 பேரையுமே மிருகத்தனமாகத் தாக்கியுள்ளார்கள்.

இந்தப் பிரச்னைகளுக்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள், மக்கள். அதாவது அனல் மின் நிலையத்துக்கு அனுமதி வாங்கிய நிலையிலேயே, எதிர்ப்பு தெரிவித்தது ஒரு கட்சி. ஆனால், அவர்களை அந்த நிறுவனம்  அழைத்துப் பேச,  அவர்கள் ஒதுங்கிக்​கொண்டார்கள். 'தன்னை மட்டும் கவனிக்கவில்லையே...’ என்று 'ஏங்கிய’ இன்னொரு கட்சிப் பிரமுகர் ஒருவர்​தான் இத்தனை பெரிய பிரச்னைக்குக் காரணம் என்​கிறார்கள்.

நடந்த சம்பவங்கள் குறித்து பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் பேசினோம். ''கான்ட்ராக்டர் யோவான் கொடுத்த புகாரின் அடிப்​படையில்தான், 14 பேரைக் கைது செய்து உள்ளோம். ஆனால், நாங்கள் யாரையும் அடிக்கவில்லை. நீதி​மன்றத்தில் ஆஜர்படுத்திய நேரத்திலேயே, நாங்கள் அடித்திருந்தால் அங்கே சொல்லி இருப்பார்களே...'' என்றார்.

- கரு.முத்து