ஆவணத்தை பெற 40000 லஞ்சம்; ஊழியரை கையும் பணமுமாக பிடித்தது லஞ்ச ஒழிப்புத்துறை | Anti corruption dept arrests staff while he receive money

வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (13/11/2015)

கடைசி தொடர்பு:17:47 (13/11/2015)

ஆவணத்தை பெற 40000 லஞ்சம்; ஊழியரை கையும் பணமுமாக பிடித்தது லஞ்ச ஒழிப்புத்துறை

மதுரை; முத்திரை தாள் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த ஆவணத்தை தருவதற்கு 40000 லஞ்சம் பெற்ற அலுவலக ஊழியரை லஞ்ச ஒழிப்புத் துறை கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தின் கீழ் இயங்கிவருகிறது முத்திரைத்தாள் அலுவலகம். இங்கு கருப்பாயூரணியை சேர்ந்த உதவியாளர் கலிலுள் ரகுமான் என்பவர் பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் கோச்சடை பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவர் தனது மருமகள் கார்குழலியின் பெயரில் 60 சென்ட் நன்செய் நிலத்தை கடந்த மார்ச் மாதம் வாங்கியுள்ளார்.

அதற்கான பத்திரத்தை பதிவு செய்த கதிரேசன் அதை கேட்டிருக்கிறார். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் தந்தால் தருவதாக கலில்முகமது சொன்னதாக தெரிகிறது. பிறகு பேரம் பேசி 67ஆயிரம் ரூபாய்க்கு முடித்து முன் பணமாக ரூபாய் 40000 கொண்டுவரச் சொல்லி இருக்கிறார்.

இதனை கதிரேசன் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகளிடம் புகாராக தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி 40000 ரூபாயை கதிரேசனிடம் கொடுக்க சொல்லி இருக்கின்றனர். அதன்படி பத்திரப்பதிவு அலுவலகம் சென்ற கதிரேசன், பணத்தை கலிலுள் ரகுமானிடம் தந்தார். உடனடியாக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கலிலுள் ரகுமானை பிடித்தனர்.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி ஜான் கிளமெண்ட் தலைமையிலான குழு அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை செய்துவருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் அந்த அலுவலகத்தில் நுழைந்தவுடன் நம்முன் தென்படுபவை லஞ்ச ஒழிப்புக்கு எதிரான வாசகங்கள்தான்.

- சே.சின்னத்துரை

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்