Published:Updated:

பெருச்சாளிகள் பீதியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்!

பெருச்சாளிகள் பீதியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்!
பெருச்சாளிகள் பீதியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்!

பெருச்சாளிகள் பீதியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்!

சென்னையில் உள்ள கிரிமினல்கள், குற்றவாளிகளையெல்லாம் பிடிக்க அசால்டாக போலீஸாருக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து 'டீல்' செய்கிற சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது பெருச்சாளிகள் கூட்டம். அதனை விரட்டுவது எப்படி என வழி தெரியாமல் சிண்டை பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள போலீஸார் என தகவல் வர, என்னதான் நடக்கிறது என விசாரித்தோம்.

நவீன ஆயுதங்களுடன் 'கமாண்டோக்கள்' சூழ எப்போதுமே உயர் பாதுகாப்பு வளையத்தினுள்தான் கட்டடம் அமைந்த நாளிலிருந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இயங்கி வருகிறது.  நிர்வாக வசதிக்கென சென்னை புறநகருக்கு என்று தனி போலீஸ் கமிஷனர் அலுவலகம்  கடந்த ஆண்டுகளில் செயல்பட்டு வந்தது.

பின்னர் புறநகர் சென்னை, சென்னை காவல் நிலையங்களுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டது. முன்னதாக போலீஸ் கமிஷனர் அலுவலகம்,  11.10.2013- ல் எழும்பூரிலிருந்து வேப்பேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. கட்டடம் புதிதாக உருவாக்கம் பெற்று இடம் மாறினாலும், மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டதால், கோப்புகளை, "ஒழுகாத" அறைகளாக தேடித்தேடி கொண்டு சென்று வைத்து பாதுகாப்பு கொடுத்து வந்தனர் போலீசார்.

அதே சமயம் ஒழுகல் பற்றி யாரும் மேலிடத்துக்கு தகவல் கொடுத்து நிரந்தரத் தீர்வுக்கு முயலவில்லை என்று கூறப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால்,   "அட்டைப்பெட்டி(?!) ஆபீசுலதான் இருக்கேன், பழைய சி.பி.ஓ. ஆபீசுக்கு சாயங்காலம் நாலு மணிக்கு வரணும்.. அங்கே பார்க்கலாமா?''  என்று கேலியாக புது பில்டிங்கை குறிப்பிட்டுப்  பேசுவதை  இங்கே அடிக்கடிகேட்கலாம்.

பெருச்சாளிகள் பீதியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்!

புறநகர் பகுதிகளான தாம்பரம், அம்பத்தூர், மாங்காடு, மணலி, எண்ணூர் என்று பல ஏரியாக்களும் இந்த சூழலில்தான் மெட்ரோ சென்னை கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது சென்னையை புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் மழை வெள்ள இந்த ஒழுகல் துயரத்திற்கிடையேதான்,
கமிஷனர் அலுவலகத்தை எலிகளின் தொல்லையும் பாடாய் படுத்தி, தங்களை மல்லுக்கட்ட வைப்பதாக போலீஸாரிடையே புலம்பல்கள் எழுந்துள்ளன.  அதிலும், அவைகளைப் பிடிக்க ஆயுதப்படை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று வருகிற தகவல் உச்சகட்ட சோகம்தான்.

"சார் என்னதான் நடக்கிறது கமிஷனர் ஆபீஸில்?"  என்று காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

"நுழைவாயிலில் மனிதர்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்துதான் உள்ளே அனுப்புகிறோம்.. உள்ளே இருக்கும் கேண்டீனில் டெட்டால் போட்டு, ஒவ்வொரு உணவு இடைவேளையின் போதும் சுத்தம் செய்யச் சொல்லி உத்தரவிட்டு,  அப்படியே ஊழியர்களும் செய்கிறார்கள். எல்லா விஷயமும் பார்த்துப் பார்த்து கவனத்துடன்தான் செய்து வருகிறோம். இந்த எலி கடிக்கும் மேட்டரை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். விரைவில் அவைகளை ஒழிக்கும் பணிகள் முடுக்கி விடப்படும் " என்றார் அவர்.

பெருச்சாளிகள் பீதியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்!

பிரமாண்ட கட்டடத்தை உருவாக்கும் பில்டர்களிடம் பேசியபோது,  "இந்த இடம் முன்னர் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அலுவலகமாக செயல்பட்டு வந்தபோது ஒரு காடு போல இருந்தது. அதை சுத்தம் செய்து புதர்களை அகற்றி, தேவையற்ற மரங்களையும் வெட்டித்தான் அடித்தளமே போடப்பட்டது. அப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஸ்திவார பூமியில் பூச்சிகளை அழிக்கும் மருந்துகளைத்  தெளித்துதான் மிகவும் கவனத்துடன்  'கடைக்கால்' எழுப்பி இருப்பார்கள். அதனால், இங்கிருந்து எலிகள் வர வாய்ப்பே இல்லை " என்று அடித்துச் சொல்கின்றனர்.

என்ன செய்யலாம் ? - எலிகள் பற்றியும், கட்டுமானம் பற்றியும் 'தெளிந்த' ஞானமுள்ள நண்பரிடம் கேட்டோம்.

"கமிஷனர் அலுவலத்தை சுற்றியுள்ள  வெளிப்புறப் பகுதிகள்  (காம்பவுண்ட் தாண்டி) இன்னும் புதர்போல்தான் உள்ளது. பொதுவாக எலிகள் பல கிலோ மீட்டர் தூரம் வரையில் உணவுக்காக டிராவல் ஆகும். இங்கேயும் அந்த 'டிராவல் ' விஷயம்தான் நடந்திருக்கிறது.

மற்றபடி எலிகள் இங்கே வர வாய்ப்பே இல்லை. மேலும் தங்களுக்கு தேவையான உணவுகளை மழைக் காலங்களில் முன்கூட்டியே அவை  சேகரித்து வைத்துக் கொண்டு 'வளை' க்குள்ளேயே தங்கிவிடும். குளிரும், மழையும் எலிகளுக்கு தாங்காது. இந்த நேரத்தில்  கொசு மருந்து புகையைப் போல வெளிப்படும் மயக்க புகையூட்டியை வளைக்குள் செலுத்தினால், எலிகள் மொத்தமும் வெளியே வந்து விடும்.

விஷம் வைக்கக் கூடாது. எவ்வளவு கொடிய விஷம் என்றாலும், விஷத்தை தின்னும் எலிகள் வளையை விட்டு வெளியேறி கொஞ்சம் தண்ணீரை நக்கி விட்டால் அதன் பின்னர் சாகாது" என்கிறார் அட்வைசாக.

134 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 128- குற்றப்பிரிவு கா.நி. , 64 போக்குவரத்து கா.நி. , 35 மகளிர் கா.நி. , மண்டலத்துக்கு மூன்று என 12 துணை கமிஷனர்கள், 'விங்' எனப்படும் பல்வேறு பிரிவில் வருகிற 12 துணை கமிஷனர்கள் வந்து போகும் (பணியாற்றும்) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், எலி விவகாரம் உண்மையிலேயே  கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

பயிற்சிக்காக சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், அயல்நாடு பயணமாக கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் சென்றிருந்தார். அவர் சென்னைக்கு  இன்று திரும்புகிற நேரத்தில் "எலி விவகாரம்" மழை, வெள்ள பாதிப்புகளையும் தாண்டி புயலாக உருவெடுத்துள்ளது.

ந.பா.சேதுராமன்

 

அடுத்த கட்டுரைக்கு