Published:Updated:

மின்வெட்டுக்கு எதிராக கொந்தளித்த கோவை!

மாசத்துக்கு 70 கோடி நஷ்டம்னா வருஷத்துக்கு எவ்வளவு?

மின்வெட்டுக்கு எதிராக கொந்தளித்த கோவை!

மாசத்துக்கு 70 கோடி நஷ்டம்னா வருஷத்துக்கு எவ்வளவு?

Published:Updated:
##~##

மின் வெட்டுப் பிரச்னையில் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளானது கோவை மாவட்டம். காரணம், மைக்ரோவில் துவங்கி மேக்ரோ வரை ரகம் ரகமாக நிரம்பி வழியும் தொழிற்​சாலைகள். மின் வெட்டை மையப்படுத்தி, பல முறை இங்கே போராட்டங்கள் நடைபெற்று இருந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற போராட்டம், தமிழகம் முழுக்கவே அனல் கிளப்பியது! 

கோவை மாவட்டத்தின் 38 தொழில் அமைப்புகள் ஒன்றாக இணைந்து கடந்த 5-ம் தேதி மெகா ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில், தொழில் அமைப்புகளைத் தாண்டி, விவசாயிகளும், பல்வேறு குடியிருப்போர் சங்கத்தினரும், தன்னார்வ அமைப்புகளும் கலந்துகொள்ளவே, மிரண்டது கோவை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மின்வெட்டுக்கு எதிராக கொந்தளித்த கோவை!

தமிழ்நாடு ஊரக மற்றும் குறுந்தொழில் முனை​வோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவரான ஜேம்ஸ், ''கோவையில் சுமார் 32 ஆயிரம் குறுந்தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றை நம்பி குறைஞ்சது நான்கு லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இந்தத் தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் என்பது அடிப்படையான அத்தியாவசியத் தேவை. கடந்த மூன்றரை வருடங்களாக, தினமும் இரண்டு மணி நேரம் அறிவிப்புடனும், அறிவிப்பு இல்லாமல் சுமார் மூன்று மணி நேரமும் என கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் மின் வெட்டு அமலில் உள்ளது! வேலை பரபரப்பாக நடக்கும் காலை நேரத்திலேயே மின் வெட்டு தொடங்குவதால், படிப்படியாகத் தொழில் முடக்கம் ஆகிவிட்டது. வேலை கொடுக்கும் பெரிய நிறுவனங்கள், சரியான நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாத காரணத்தால் ஆர்டர்களை ரத்து செய்துவிட்டார்கள். தொடர்ந்து வேலை இல்லாததால் தாக்குப்பிடிக்க முடியாத தொழிலாளிகள், கூலி வேலைகளுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். இதனால், கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 25 சதவிகித குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.

மின்சாரம் இல்லாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் மட்டும், ஒரு மாதத்துக்கு சுமார்

மின்வெட்டுக்கு எதிராக கொந்தளித்த கோவை!

70 கோடி இழப்பு. அப்படி என்றால், இந்த மூன்றரை வருடங்களில் எத்தனை கோடிகள் இழப்பு என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஜெனரேட்டர் வாங்கி டீசல் ஊற்றி ஓட்டலாம் என்று நினைத்தாலும், அந்தப் பயன்பாட்டுக்கும் கட்டணம் வசூல் பண்ணுவேன் என்கிறார்கள். இப்படி அடி மேல் அடி விழுந்தால், நாங்கள் என்னதான் செய்வது? இனியும் பொறுக்கவே முடியாது என்ற நிலையில்தான் அடுத்த கட்டப் போராட்டத்தில் இறங்கினோம்.

மின்வெட்டுக்கு எதிராக கொந்தளித்த கோவை!

'தமிழ்நாடு முழுமைக்கும் சமமான மின் வெட்டை அறிவிக்கணும், புதிய மின் உற்பத்தித் திட்டங்களை அறிவிக்கணும்’னு கூக்குரல் கொடுத்துக் கதறி, பல நூறு போராட்டங்களை நடத்திவிட்டோம். ஆனாலும், பலன் இல்லை. இத்தனை நாட்களாக மின் வெட்டு இல்லாத சென்னையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். நாடெங்கும் மின் வெட்டு என்றால், பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்கு மட்டும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் மின்சாரம் வழங்கப்படுவது எப்படி? தமிழ் மக்களைவிட பன்னாட்டுத் தொழிற்சாலைகள் முக்கியமா? என்ன ஒரு கேவலமான போக்கு! அதனால்தான் இந்த மெகா கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்... பலன் கிடைக்கும் வரை போராடுவோம்!'' என்றார் கோபமாக.

போராட்டம், ஆர்ப்பாட்டங்களை இதுவரை கண்டு​கொள்ளாத மிகப் பெரும் நிறுவனங்களும் இதில் குடும்பம் குடும்பமாகக் கலந்துகொண்டது, மின் வெட்டுப் பிரச்னையின் வீரியத்தைக் காட்டியது. ''உணவு, உடை, இருப்பிடம் மட்டும்தான் அடிப்படை அல்ல. இந்தக் காலத்தில் மின்சாரமும் அடிப்படைத் தேவைதான். இதைப் பூரணமாக நிறைவேற்றித் தராதது, அரசின் அநீதி. பள்ளி இறுதித் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு நேரங்களில் நொந்தேபோனார்கள். இப்போது செமஸ்டர் நேரங்களில் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறோம். ஒட்டுமொத்த சமுதாய ஆரோக்கியத்தையும் சிதைக்கும் மின் வெட்டு காரணமாக, நமது மாநிலம் பல படிகள் பின்னோக்கி இறங்கிவிட்டதாக சமீபத்திய ஆய்வில் சொல்லி இருக்கிறார்கள். அரசின் கையாலாகாத்தனத்தை நினைத்து இளைஞர்கள் வெட்கப்படுகிறோம்...'' என்கிறார், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டிய அஜீத்.

மின் வெட்டுப் பிரச்னையை மையப்படுத்தி கோவையில் கிளம்பிய பொறியை அணைப்பதற்கு, மின்சார வாரியம் தரப்பில் முயற்சிகள் நடந்தன.

மே 3-ம் தேதி தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் சி.பி.சிங், போராட்டக் குழு உறுப்பி​னர்களை சந்தித்து சமாதானம் பேச வந்து, தோல்வியைத் தழுவினார். சி.பி.சிங்கிடம் பேசியபோது, ''தமிழகத்தின் மின் தேவை 12 ஆயிரம் மெகவாட். ஆனால், நமது உற்பத்தித் திறன் 10 ஆயிரத்து 124 மெகாவாட் மட்டுமே. அதிலும் இந்தக் கோடையில் 7 ஆயிரம் மெகாவாட் மட்டும்தான் உற்பத்தி செய்ய முடிகிறது. அணைகளில் நீர் மட்டம் குறைந்து​விட்டதால், நீர் மின் உற்பத்தியிலும் பாதிப்பு. காற்றாலைகளால் நிலையான மின் உற்பத்தி இல்லை. மின் தடை அதிகரிக்க இன்னொரு காரணம், குறுகிய காலத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சிதான். புதிய மின் உற்பத்தி நிலையங்​களை ஏற்படுத்துவதும், விரைவில் நடக்கிற விஷயம் இல்லை. பல்வேறு கட்டங்களைத் தாண்டி உற்பத்தியைத் தொடங்க, ஆறு வருடங்களாவது ஆகும். மின்சார வாரியத்துக்கு இவ்வளவு பிரச்​னைகள் இருக்கிறது என்பதை யாருமே புரிந்துகொள்வது இல்லை!'' என்றார் பொறுப்​பாக!

- எஸ்.ஷக்தி

படங்கள்: வி.ராஜேஷ்,

வெ.பாலாஜி