
##~## |
'இலங்கை அரசால் பாதுகாப்பான பகுதி’ என்று அறிவிக்கப்பட்டதாகப் பொய் சொல்லி, அப்பாவி மக்களைக் கொன்றொழித்த சிங்கள ராணுவத்தின் காட்டு தர்பார் அங்கு இருந்த மருத்துவமனைகளையும் விட்டுவைக்கவில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நொந்துபோன நோயாளிகள்!
போரில் கை, கால்களை இழந்தவர்கள்... உடல் முழுவதும் எரிந்துபோனவர்கள்... முகம் சிதைந்து உருக்குலைந்தவர்கள் போன்ற எண்ணற்றவர்களால், மருத்துவமனைகள் ஏற்கெனவே நிரம்பி வழிந்தன. பச்சிளம் குழந்தைகளும், பெண்களும் நரக வேதனையில் தவித்தனர்! மருத்துவமனைகளில் போதிய இட வசதியும் இல்லை; மருத்துவர்களும் இல்லை. எங்கு பார்த்தாலும் கட்டுக்கடங்காத கூட்டம்; மரண ஓலம்... படுக்கைகள், நோயாளிகளால் நிறைந்துவிட்டன. குண்டுக் காயங்களுடன் பலர் மேஜைகளுக்கு அடியிலும், நடைபாதையிலும், தரையிலும் கிடத்தப்பட்டனர். மருத்துவமனைக்கு வெளியே மரங்களின் அடியிலும் நோயாளிகள்... உயிருக்குப் போராடியவர்களுக்குக்கூட, மரக் கிளைகளில் தொங்கவிடப்பட்ட குளூக்கோஸ் பாட்டில்கள் மூலம் சிகிச்சை நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் வர, நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறியது மருத்துவமனை நிர்வாகம்.

அடுத்தடுத்து, மருந்துகளும் உபகரணங்களும் தீர... இருப்பதைக்கொண்டே வைத்தியம் செய்தனர் மருத்துவர்கள். உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு கொடுக்க மயக்க மருந்து இல்லை. வேறு வழியின்றி, வலியால் துடிதுடிக்க அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அத்தியாவசிய உபகரணங்கள் இல்லாததால், மாமிசம் வெட்டும் கத்தி மூலமாக சிதைந்த உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டன. துண்டிக்கப்பட்ட கைகள், கால்கள், உடல் உறுப்புகள் அனைத்தும் குவியலாகக்கிடந்தன.
பீரங்கித் தாக்குதலால் பாதிக்கப்பட்டு ரத்தம் பீறிட்டு வழிய வருபவர்களுக்கு, சேலை, வேட்டி எனக் கையில் கிடைத்த பழைய துணிகளால் கட்டுப் போட்டனர். உறவுகள் இன்றித் தனியாக இருந்தவர்களுக்கு, இன்னும் கொடுமை. சிங்கள ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால்

காயமடைந்தவர்களுக்கு, ரத்தத்தின் தேவை அதிகரித்தது. ஆனால், ரத்த தானம் செய்ய ஆள் இல்லை; இருந்தவர்களும் சாப்பிடப் போதிய உணவு கிடைக்காமல் சோர்ந்துகிடந்தனர். என்ன செய்வது? காயமடைந்து ரத்தம் பீறிட்ட நிலையில் வந்த மக்களின் ரத்தமே தனித்தனியே பிளாஸ்டிக் பைகளில் பிடிக்கப்பட்டது. பின்னர், அதையே துணி மூலம் வடிகட்டி மறுபடியும் அவர்களுக்கு செலுத்தப்பட்ட கொடுமைகளும் நிகழ்ந்தன!
உச்சக்கட்ட கொடுமை!
இந்த சோகத்துக்கு மத்தியில், மருத்துவமனைகளும் சிங்கள ராணுவத்தால் தாக்கப்பட்டன. 2009 ஜனவரி 24-ம் தேதி, உடையார்குண்டு மருத்துவமனை மீது இரண்டு நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடந்தது. ஏற்கெனவே, அங்கு நிரம்பிக்கிடந்த மக்கள் நிலைகுலைந்து தவித்தனர். பலர் உயிரிழந்தனர்.
இலங்கையின் சுதந்திர தினமான பிப்ரவரி 4-ல் கொண்டாட்டம் களை கட்டி இருந்த வேளையில், புலிகள் வசம் இருந்த புதுக்குடியிருப்பு நகரைக் கைப்பற்ற சிங்கள ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. அந்த சமயத்தில், தொடர்ந்து ஒன்பது நாட்களாக அங்கு இருந்த மருத்துவமனையைக் குறிவைத்துத் தாக்கியது. இதில் மருத்துவ ஊழியர்கள் உள்பட பலர் கொல்லப்பட்டனர். செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த இருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தத் திட்டமிட்ட தாக்குதல்பற்றி இலங்கை அரசிடம் அவர்கள் புகார் செய்தனர். ராணுவ அமைச்சகமோ, 'புதுக்குடியிருப்பு நகரில் மருத்துவமனையே கிடையாது’ என்று பொய் சொல்லியது. புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகளும் சின்னாபின்னமாகின.
நந்திக்கடல் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான பொன்னம்பலம் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இதன் ஒரு பகுதியில் காயமடைந்த புலிகள் சிகிச்சை பெற்றனர். இதை அறிந்த சிங்கள ராணுவம், அதன் மீது ஏவுகணை வீச... அந்த மருத்துவமனை இடிந்து நொறுங்கியது.
புதுக்குடி யிருப்பைக் கைப் பற்ற, சிங்கள ராணுவம் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டபோதிலும், கடல் புலிகள் அதை முறியடித்தனர். இரு தரப்பிலும் இந்த மோதல் நடந்த அனந்தபுரம், இரணாபாலை, தேவிபுரம் பகுதி மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி கடற்கரை ஓரத்தை நோக்கி ஓடினார்கள். அவர்கள் கடைசியாக இருந்த வசிப்பிடம் அது மட்டுமே.
உணவும் குடிநீரும் கிடைக்காமல், குழந்தைகள், முதியவர்கள் திண்டாடினர். ஒரு நேரம் மட்டும் கஞ்சி கிடைத்தாலே, அதிர்ஷ்டம்தான். பால் பவுடர் வாங்க மக்கள் கால் கடுக்க வரிசையில் காத்து நிற்க... அங்கும் அவர்கள் மீது வான் வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. திடீரென விழுந்த குண்டுகளால் எறும்புகளைப்போல் சிதறி விழுந்தனர் மக்கள். எங்கும் மரண ஓலங்கள் பீறிட்டன. பல இடங்களில் நடந்த இந்தத் தாக்குதல்களில் பலியானவர்களின் உடல்கள் பதுங்கு குழிகளில் போட்டு மூடப்பட்டன. அவர்களின் மரணங்கள் குறித்த கணக்குகள்கூட பதிவு செய்யப்படவில்லை.
- துயரங்கள் தொடரும்...
தமிழில்: ஆண்டனிராஜ்