வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (08/02/2016)

கடைசி தொடர்பு:17:03 (08/02/2016)

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு அமோக விற்பனை! (பரபரப்பு வீடியோ)

புதுச்சேரி: புதுச்சேரியில்,  தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுக்களின் விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெறுவதை அம்பலப்படுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரியில் கடந்த 2009 முதல் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், ஆட்டோ ஸ்டேண்டுகள் போன்ற மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஏகப்பட்ட கிளைகளுடன் இந்த  லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஆன்லைன் லாட்டரி என்று சொல்லப்படும் இது,  கேரளா லாட்டரியை மையமாக வைத்து இயங்குகின்றது.

சமூக விரோதிகள், அரசியல் பலம் உள்ளவர்கள் மற்றும் காவல்துறையினரின் ஆசீர்வாதத்தோடு இதனை குடிசைத் தொழிலாக செய்து வருகிறார்கள். இந்த மையங்களுக்கு சென்று ஏதாவது ஒரு மூன்று இலக்க எண்ணை பணம் செலுத்தி வாங்கிவிட வேண்டும். பின்னர் கேரளா அரசின் லாட்டரி முடிவுகள் வரும்போது அதில் நீங்கள் வாங்கிய கடைசி மூன்று எண் இருந்தால் அதற்கு பரிசு. இந்த லாட்டரி சீட்டுக்களின் விலை முப்பது ரூபாய் தொடங்கி அறுநூறு ரூபாய் வரை விற்கப்படுகிறது. பெரும்பாலும் இவைகளில் பரிசு விழுவதில்லை. எப்போதாவது ஒரு முறை ஆயிரம் ரூபாய் விழும். அந்த சபலத்தில் இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக அதற்கே செலவு செய்துவிடுகிறார்கள். காலை ஏழு மணியிலுருந்து இரவு பத்து மணி வரை படு பிசியாக இயங்குகிறது இந்த மையங்கள்.

இதில் இணைக்கப்பட்டிருக்கும் வீடியோ,  புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில்,  கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையா சிலைக்கு பின்புறம் இருக்கும் அருந்ததிபுரத்தில் நேற்று எடுக்கப்பட்டது. உள்ளே சென்று வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போதே,  வெளியே உள்ள அவரது நண்பர்கள் காவல்துறையின் அவசர அழைப்பு 100-க்கு போன் செய்கிறார்கள். அடுத்த சில விநாடிகளில் இவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மையம் இழுத்து சாத்தப்படுகிறது. அந்த அளவிற்கு இவர்களுடன் சேர்ந்து காவல்துறை கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுகிறது.


அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பலமுறை இதற்குக் கண்டனம் தெரிவித்தும் ஆளுங்கட்சியின் ஆதரவோடும் காவல்துறையின் வழிகாட்டுதலோடு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பதிவு செய்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுச்சேரி தலைவருமான ஸ்ரீதரிடம் பேசினோம்.

“புதுச்சேரியில் சுமார் முந்நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இப்படியான தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மையங்கள் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாளும் அப்பாவி ஏழை மக்களை ஆசை காட்டி பல லட்சங்களை இந்தக் கொள்ளைக் கும்பல் சுருட்டிக் கொண்டிருக்கிறது. இவைகளை ஆதாரத்தோடு பலமுறை காவல்துறையிடம் சொல்லியும் எந்தப் பயனும் இல்லை. புகாரி தெரிவித்த அன்று ஒரு நாள் மட்டும் மூடுவார்கள். மறுநாள் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும். இதற்காக புதுச்சேரி காவல்துறை ஐ.ஜி அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் கூட நடத்தியும் இவர்கள் மீது நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு வாரத்திற்கு சுமார் இருபதாயிரம் இவர்கள் கொடுத்துவிடுகிறார்கள். அதனால் அவர்களே இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள்” என்றார்.

சில தினங்களுக்கு முன்பு,  பிரான்சுக்கான இந்தியத் தூதரிடமே போக்குவரத்து காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கிய விவகாரம்,  புதுச்சேரி காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி அரசு விழித்துக்கொள்ளவேண்டிய தருணமிது!

- ஜெ. முருகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்