Published:Updated:

குடும்பத்தில் திடீர் மரணங்கள்!- 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவை பதறவைத்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

கேரளாவில் ஒரே குடும்பத்தில் தொடர்ச்சியாக 6 மரணங்கள் நடந்துள்ளன. இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கேரள மரணங்கள்
கேரள மரணங்கள் ( Mathrubhumi )

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தாமரசேரி (Thamarassery) பகுதியைச் சேர்ந்தவர் ரோஜோ. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்துவருகிறார். ரோஜோவின் குடும்பத்தில் கடந்த சில வருடங்களாகத் தொடர் திடீர் மரணங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. இரண்டு, மூன்று மரணங்களின்போது இது வெறும் சாதாரண விஷயம் என நினைத்த ரோஜோவுக்கு அடுத்தடுத்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Death
Death

இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு கோழிக்கோடு காவல்நிலையத்தில் தொடர் மரணங்கள் தொடர்பாகப் புகார் அளித்துள்ளார் ரோஜோ. மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தொடர் மரணங்கள்!

ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய அன்னமா கடந்த 2002-ம் ஆண்டு உயிரிழந்தார். இவர் ரோஜோவின் தாய். அன்னமாவில் இருந்துதான் தொடர் மரணங்கள் தொடங்கியது. இவரையடுத்து, 2008-ம் ஆண்டு ரோஜோவின் தந்தை தாமஸ் உயிரிழந்தார். பின்னர் ரோஜோவின் சகோதரர் ராய் 2011-ம் ஆண்டு இறந்துள்ளார். ஒரே வீட்டில் உள்ள அனைவரும் அடுத்தடுத்து இறந்துள்ளனர். அப்போது, இந்த மரணங்கள் இயற்கையாக நடந்துவிட்டது என அனைவரும் நினைத்திருந்தனர்.

Kerala Death case
Kerala Death case
Mathrubhumi

ஆனால், அதன் பிறகும் மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாக இருந்தது. ரோஜோவின் மாமா மேத்தீவ் 2014-ம் ஆண்டு இறந்துள்ளார். இதையடுத்து, ரோஜோவின் நெருங்கிய உறவினர் ஃபிலி மற்றும் அவரது இரண்டு வயது மகள் ஆகிய இருவரும் 2016-ம் ஆண்டு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். ஃபிலி இறப்பின்போது தான் ரோஜோவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிரவைக்கும் பிரேதப் பரிசோதனை!

சுமார் மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த இந்த விசாரணையில் தற்போதுதான் இறந்தவர்களின் உடலைத் தோண்டி பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்துள்ளது. அதற்குள் இந்த வழக்கு காவல்துறை குற்றவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு இரண்டு தேவாலயத்துக்கு அருகில் புதைக்கப்பட்ட அனைவரது உடல்களும் தோண்டி வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் அதில் நடந்த பரிசோதனையில் இறந்த 6 பேரின் உடலில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இயற்கையாக இறந்தனர் என்று நினைத்த நிலையில், தற்போது அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Kerala Death case
Kerala Death case
Mathrubhumi

தற்போது அனைவரது உடல் மாதிரிகளும் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் நடந்த காவலர்களின் விசாரணையில் உயிரிழந்த அனைவரும் அதற்கு முன்னதாக ஏதோ ஒரு உணவை உண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ரோஜோவின் குடும்பத்தில் உள்ள யாரோ சிலரே உணவில் விஷம் கலந்து இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 14 வருடங்களாக நடந்த தொடர் கொலைக்கு தற்போது ஒரு முடிவு கிடைக்கவுள்ளதால் கேரளாவில் இந்த விவகாரம் அதிக கவனம் பெற்றுள்ளது.

சொத்துகாக நடந்த கொலை?

ரோஜோவின் சகோதரர் ராய்யும், உறவினர் ஃபிலியும் இறந்த பிறகு ராய்யின் மனைவி ஜோலி, ஃபிலியின் கணவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். மேலும் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தில் எந்த மரணமும் நிகழவில்லை. இவை அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் மொத்தக் கவனமும் ராய்யின் மனைவி ஜோலி மற்றும் ஃபிலியின் கணவர் மீது திரும்புகிறது. இவர்கள்தான் சொத்துக்கு ஆசைப்பட்டு மொத்த குடும்பத்தையும் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Murder
Murder

மேலும், சொத்துக்காக ரோஜோவே தன் குடும்பத்தினரைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ரோஜோ, ஜோலி மற்றும் அவரின் கணவர் ஆகிய மூன்று பேரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். விசாரணையின் முடிவில்தான் உண்மையான குற்றவாளி யார் எனத் தெரியவரும் எனக் காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. திகிலூட்டும் சினிமா கதை போல் நடந்த இந்தத் தொடர் மரணங்கள் கேரளாவை அதிரவைத்துள்ளது.