`ஊரடங்கு காலத்தில் அதிகரித்த உடும்பு வேட்டை!' -குமரி வனத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த 6 பேர்

குமரி மாவட்ட வனத்தில் வேட்டையாடியதாக கடந்த 20 நாள்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பூப்பாண்டி வனச் சரகத்துக்குட்பட்ட பணக்குடி வனப்பகுதியில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலகத்திற்குத் தகவல் சென்றது. அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன் வழிகாட்டுதல்படி வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணக்குடி வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், பணக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து (38) மற்றும் சகாயஜோஸ் மைக்கேல் ராஜா (32) ஆகியோர் சந்தேகத்திற்கு இடமாக தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் புளியன்விளை அருகே நின்றிருந்தனர். அவர்களை சோதனை செய்தபோது வன விலங்குப் பட்டியலில் தடை செய்யப்பட்ட அட்டவணை 1-ல் இடம் பெற்றுள்ள உடும்பை வேட்டையாடி விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பைக் மற்றும் உடும்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கொரோனா லாக்டெளன் தொடங்கியதிலிருந்து குமரி வனப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வன உயிரினங்களை வேட்டையாடுவது அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி கன்னியாகுமரியை அடுத்த அச்சன்குளம் பகுதியில் மீன் பிடித்ததாக ஒருவருக்கு அபராதம் விதித்தனர்.
அந்தச் சமயத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த சிவக்குமாரைப் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவரது மொபைல் போனை சோதித்தபோது அரசால் அட்டவணைப்படுத்தப்பட்ட மலைப்பாம்பு, மரநாய், உடும்பு போன்ற விலங்குகளை வேட்டையாடிய புகைப்படங்களும் அவற்றை சமைத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இருந்தன.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் வேட்டையில் ஈடுபட்டதாக தினேஷ் தாவீது என்பவர் கைது செய்யப்பட்டார். அவர்களுடன் வேட்டையில் ஈடுபட்டிருந்த பரமேஷ், சங்கர் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். அவர்களை கடந்த 6-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
இதுபோன்று கடந்த மாதம் 31-ம் தேதி தோவாளை அருகே உள்ள கோழிக்கோட்டு பொத்தையில் அதிகாலை நேரத்தில் வேட்டையில் ஈடுபட்ட அருள் வினிஸ்டன், மைக்கேல்ராஜ் கனகரவி, டென்னிஸ் ராஜா ஆகியோரை வனத்துறையினர் பிடித்தனர். அவர்களிடம் வேட்டையாடப்பட்ட உயிரினங்கள் எதுவும் இல்லை. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு தலா 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

குமரி வனப்பகுதியில் தொடர்ச்சியாக உயிரினங்களை வேட்டையாடுவதற்கான காரணம் குறித்து பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன் கூறுகையில், "பணக்குடி பகுதிகளில் வேட்டையாடும் நபர்கள் அதிகமாக உள்ளனர். வனத்துறை ஊழியர்கள் ரோந்து செல்வதால் வேட்டையாடும் நோக்கில் வனத்திற்குள் செல்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. இப்போது ஊரடங்கு காரணமாக சிலர் வேட்டைக்குச் செல்வதும், அவர்களை கைதுசெய்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கிறது" என்றார்.