Published:Updated:

`வறுமைக்கு உதவி செய்து சிறார் வதை செய்த கொடூரம்!’- குமரியில் 4 முதியவர்கள், 2 சிறுவர்கள் கைது

ஜாபர்
ஜாபர்

சிறுமி உதவி கேட்கச் செல்லும் போது பணம் கொடுத்துள்ளனர். உதவி செய்ததைக் காரணம்காட்டி சிறுமியைச் சிறார் வதைக்கு ஆளாக்கியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் கொரோனா பாதிப்பால் தந்தை வேலையின்றித் தவித்த நிலையில், வீடுகளில் உதவி கேட்டுச் சென்ற எட்டு வயதுச் சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த 4 முதியவர்கள், 2 சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ``கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள கோழிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 8-வயது மகளுடன் தேங்காய்பட்டணத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் வேலை இன்றித் தவித்து வந்தார் அவர். இதனால் அவரது குடும்பம் வறுமையின் பிடியில் தவித்துள்ளது. இந்த நிலையில் அவரது 8-வயது மகள் அக்கம் பக்கத்தினரின் வீடுகளுக்கு உதவி கேட்டு அதன் மூலம் கிடைக்கும் பொருள்களை வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளார். அதன் மூலம் குடும்பமே பசியாறி வந்துள்ளது.

முகமது நூகு
முகமது நூகு

கடந்த 2 நாள்களுக்கு முன் அந்தச் சிறுமி தனது தந்தையிடம் சிலர் தன்னை கஷ்டப்படுத்துவதாகக் கூறியுள்ளார். தந்தை என்னவென்று மகளிடம் விவரமாகக் கேட்டபோது, தான் செல்லும் வீடுகளில் உள்ள சிலர் தனக்கு உதவி செய்வதாகவும் அதைப் பயன்படுத்தி தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த தந்தை ஊரில் உள்ள சிலரிடம் இதுகுறித்துக் கூறி கண்ணீர் வடித்துள்ளார். மேலும் தனது மகள் கூறிய புகாரை வீடியோவில் பதிவு செய்து, அதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் ஒப்படைத்து புகார் செய்தார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குளச்சல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. குளச்சல் மகளிர் போலீஸார் சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தினர். அதில் தேங்காய்பட்டணம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் முகமது நூகு (75), ஸ்டூடியோ நடத்தி வரும் சகாய தாசன் (52), ஜாகீர் உசேன்(53), அப்துல் ஜாபர் (66) மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 வயதான இரண்டு சிறுவர்கள் என 6 பேர் சிறுமி உதவி கேட்கச் செல்லும் போது பணம் கொடுத்துள்ளனர். உதவி செய்ததைக் காரணம்காட்டி சிறுமியைச் சிறார் வதைக்கு ஆளாக்கியதும் தெரியவந்தது.

சகாய தாசன்
சகாய தாசன்

குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் 6 பேர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ஆறு பேரும் கைது செய்யப்பட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முதியவர்கள் நால்வரை நாகர்கோவில் மாவட்டச் சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் இருவரையும் நெல்லையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்’’ இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. வறுமையைப் பயன்படுத்தி சிறுமியைச் சிறார் வதை செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்ட மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு