Published:Updated:

சூனியமா வைக்கிறீர்கள்!- 6 முதியவர்களின் பற்களைக் கொடூரமாக உடைத்த கிராம மக்கள்

ஒடிசாவில், சூனியம் வைத்ததாகக் கூறி 6 முதியவர்களைக் கிராம மக்களே துன்புறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

ஊர்மக்களால் தாக்கப்பட்ட முதியவர்
ஊர்மக்களால் தாக்கப்பட்ட முதியவர் ( ani )

ஒடிசா மாநிலம் கோபாபூர் கிராமத்தில், கடந்த 6 மாதங்களில் 3 பேர் உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்தனர். மேலும் 7 பேர், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவருகின்றனர். யாரோ சூனியம் வைத்ததால், நம் ஊரில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதாகக் கிராம மக்கள் கருதினர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தான் சூனியம் வைத்திருக்க வேண்டும் எனச் சந்தேகித்தனர்.

Representation Image
Representation Image

இதையடுத்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் சூனியம் வைத்ததாகக் கருதியவர்களின் வீட்டுக்குச் சென்றனர். கற்களைக்கொண்டு அந்த வீட்டின்மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த 6 ஆண்களை வீட்டுக்கு வெளியே இழுத்துவந்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். சாலையில் கிடந்த கற்களைக்கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். ஆத்திரம் தீராத அந்தக் கும்பல், அந்த நபர்களின் பற்களைக் கற்களால் அடித்தும் கம்பிகளைக் கொண்டும் பிடுங்கியுள்ளனர்.

டீக்கு பணம் கேட்டாலும் கொலை... பைக்கை மெதுவாக ஓட்டச் சொன்னாலும் கொலை!

இந்தக் கொடூரத்தை அத்துடன் நிறுத்திக்கொள்ளாத கும்பல், மனித கழிவுகளை உண்பதற்குக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு உதவிசெய்யக்கூட யாரும் முன்வரவில்லை. இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட காவல்துறையினர், அந்த கிராமத்திற்கு விரைந்தனர். அந்தக் கும்பலிடமிருந்து 6 ஆண்களையும் மீட்டனர். தாக்குதலுக்கு உள்ளான 6 பேரும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவுசெய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 22 பெண்கள் உட்பட 29 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Police
Police

இதுதொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “இந்தச் சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதுவரைக்கும் 20-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளோம். அந்தக் கிராமத்திலிருந்த ஆண்கள் சிலர் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கிராமத்தைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்'' என்றனர்.