Election bannerElection banner
Published:Updated:

தெலங்கானா: `நாகதோஷம் நீங்க நரபலி!' - ஜோதிடர் பேச்சைக் கேட்டு பச்சிளம் குழந்தையைக் கொன்ற தாய்

மாந்திரீக பூஜை
மாந்திரீக பூஜை ( Representational Image )

கடந்த சில மாதங்களுக்கு  முன் ஆந்திராவில் இரண்டு மகள்களைச் சொந்தப் பெற்றோரே மூடநம்பிக்கை காரணமாக கொலை செய்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள், தெலங்கானாவை அலறவைத்திருக்கிறது பச்சிளம் குழந்தையின் நரபலி சம்பவம்.

தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டத்தை அடுத்த மேகலாபட்டிதண்டா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. விவசாயம் செய்துவரும் கிருஷ்ணாவின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். மனைவி இறந்த சில மாதங்களில் கிருஷ்ணாவுக்கும், அதே பகுதியில் கணவரை இழந்து வாழும் புஜ்ஜி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில், கிருஷ்ணா கடந்த வருடம் புஜ்ஜியைத் திருமணம் செய்துகொண்டார்.

கிருஷ்ணா - புஜ்ஜி தம்பதிக்குக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததிலிருந்து தம்பதிக்கு இடையே சண்டை சச்சரவுகள் நிலவிவருவதாகக் கூறப்படுகிறது. ஆன்மிகத்திலும், மாந்திரீகத்திலும் அதிக நாட்டம்கொண்ட கிருஷ்ணாவின் மனைவி புஜ்ஜி, குடும்பத்தில் நிலவிவரும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் ஜோதிடர் ஒருவரை அணுகி முறையிட்டிருக்கிறார். அப்போது புஜ்ஜியிடம் ஜோதிடர் அவருக்கு நாகதோஷம் இருப்பதாகவும், பச்சிளம் குழந்தையைக் காளி தேவிக்கு நரபலி கொடுத்து அர்ப்பணித்தால் குடும்பத்தில் நிலவிவரும் அனைத்துப் பிரச்னைகளும் விலகிவிடும் என்றும் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

நரபலி
நரபலி
representational image

ஜோதிடரைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பியதிலிருந்து புஜ்ஜி குழந்தையை நரபலி கொடுப்பது குறித்த சிந்தனையில் ஆழ்ந்திருந்திருக்கிறார். இது தொடர்பாக புஜ்ஜி தனக்கிருக்கும் நாகதோஷம் நீங்குவதற்குத் தேவையான பரிகாரங்களை யூ-டியூப்-பில் தேடியிருக்கிறார். அதில் ஜோதிடர் கூறியதுபோலவே நரபலி பரிகாரம் குறித்துப் பல பதிவுகள் இருந்ததாகவும், அதைப் பார்த்து உறுதி செய்த புஜ்ஜி தன் ஆறு மாத கைக்குழந்தையைக் நரபலி கொடுக்கத் துணிந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தன்று, புஜ்ஜியின் கணவர் கிருஷ்ணா வெளியூருக்குச் சென்றிருக்கிறார். அதேபோல் அவர்களுடன் வீட்டில் தங்கியிருந்த புஜ்ஜியின் தாயும் வெளியே சென்றிருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட புஜ்ஜி நரபலி செய்ய முடிவெடுத்தார். பூஜைக்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்த புஜ்ஜி மஞ்சள், குங்குமமிட்டு ஆறு மாத பச்சிளம் குழந்தையின் கழுத்தைக் கத்தியால் அறுத்து நரபலி கொடுத்திருக்கிறார். குழந்தையைக் கொன்றுவிட்டதால் தன்னுடைய பாவங்களும் பிரச்னைகளும் நிவர்த்தியடைந்துவிட்டதாக நம்பிய புஜ்ஜி, தன் தோழிக்குத் தொலைபேசி வாயிலாக நடந்ததைத் தெரிவித்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த புஜ்ஜியின் தோழி அவரின் கணவர் மற்றும் தாய்க்கு விவரத்தைக் கூறியிருக்கிறார்.

கொலை
கொலை
Representational Image

அதிர்ச்சியில் உறைந்துபோன புஜ்ஜியின் கணவர் கிருஷ்ணா, காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு குழந்தையைப் பூஜை அறையில் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு புஜ்ஜி அங்குமிங்கும் பித்துப் பிடித்ததுபோல் உலவிக்கொண்டிருந்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையை நரபலி கொடுத்த புஜ்ஜியைக் கைதுசெய்து, ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் அக்கம்பக்கத்தினரிடத்தில் விசாரித்ததில், புஜ்ஜி கடந்த சில மாதங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும், நரபலி கொடுக்கப்பட்ட ஆறு மாதப் பச்சிளம் குழந்தைக்குப் பெயர்கூட இன்னும் வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர். பிறந்த ஆறு மாத காலத்திலேயே தன் குழந்தை இறந்துபோன சம்பவம் கிருஷ்ணாவின் மனதை நொறுக்கிப்போட்டிருக்கிறது. கிருஷ்ணாவின் மனைவி புஜ்ஜியைக் கைதுசெய்து விசாரித்துவரும் காவல்துறையினர், கிருஷ்ணாவுக்கு மன நல ஆலோசனை வழங்கி ஆறுதல் கூறி அனுப்பியிருக்கின்றனர்.

ஆந்திராவில் சமீபத்தில் நரபலி கொடுக்கப்பட்ட இளம் பெண்கள்
ஆந்திராவில் சமீபத்தில் நரபலி கொடுக்கப்பட்ட இளம் பெண்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் இரண்டு மகள்களைச் சொந்தப் பெற்றோரே மூடநம்பிக்கையின் பெயரில் கொலை செய்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள் மீண்டும் அண்டை மாநிலமான தெலங்கானாவை அலறவைத்திருக்கிறது இந்த நரபலி சம்பவம். மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்தும், அமானுஷ்ய சிந்தனைகளிலிருந்தும் இந்தக்காலத்துப் பெற்றோர்கள் விடுபட்டால் மட்டுமே சமூகத்தில் இத்தகைய நரபலி சம்பவங்கள் நிகழாமல் நம்மால் தடுக்க முடியும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு