திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கீரனூர் ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிராஜா. 57 வயது விவசாயியான இவர், தீப்பக்காடு வனப்பகுதி அருகே உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருடைய விளைநிலத்தில் 6 மயில்கள் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக நேற்று (17.01.2022) திருவண்ணாமலை வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள், காசிராஜாவின் நிலத்தில் பார்வையிட்டபோது 5 பெண் மயில்கள் மற்றும் 1 ஆண் மயில் உயிரிழந்து கிடப்பதை கண்டுள்ளனர். மயில்களின் உடல்களை மீட்ட வனத்துறையினர் அந்த மயில்களை பரிசோதித்த போது, அவை விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் காசிராஜாவிடம் விசாரித்தபோது, ``எலிகள், மயில்கள் மற்றும் பறவைகள் என் விளைநிலத்தில் உள்ள பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தன. பயிரை காப்பாற்றுவதற்காக விஷம் கலந்த உணவுப் பயிர்களை நான் வைத்தேன். அதை அந்த மயில்கள் உண்டு இறந்துவிட்டன" என்று தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து காசிராஜாவை கைது செய்த வனத்துறை அதிகாரிகள், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.