Published:Updated:

`மது ஊற்றிக் கொடுத்து கணவன் செய்த கொடூரம்' -கேரள இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; சிக்கிய கும்பல்

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

தன் மனைவிக்கும் பலவந்தமாக மதுவை வாயில் ஊற்றி குடிக்க வைத்துள்ளார். அதன் பிறகு இரண்டு வயது மகனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார் பெண்ணின் கணவன்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் புதுக்குறிச்சி பகுதியில் 24 வயது இளம்பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவு தன் 4 வயது மகனுடன் ரோட்டோரம் அலங்கோலமாக கதறியபடி நின்றிருந்தார். காரில் வந்த இளைஞர்கள் சிலர் அவருக்கு உதவி செய்து கடினங்குளத்தில் உள்ள அவரது வீட்டில் சேர்த்தனர். மேலும், இதுபற்றி கடினங்குளம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியதுடன், தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீஸ் விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு கணவனால் ஏற்பட்ட துயரம் வெளியே வந்தது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், ``அந்த இளம்பெண்ணுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர். அவருக்கும் கணவனுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்புவரை இருவரும் பிரிந்து இருந்தனர். பின்னர் அவர்கள் சில மாதங்களாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்துவந்தனர்.

`அவளுக்கு நல்லநேரம்.. எனக்குக் கெட்டநேரம்!' -மனைவியைக் கொல்ல கூலிப்படையை அமர்த்திய கணவன்

அந்தப் பெண்ணின் கணவன் கடந்த வியாழக்கிழமை மாலை, கடற்கரைக்குப் போகலாம் என மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் பைக்கில் அழைத்துக்கொண்டு புதுக்குறிச்சி சென்றுள்ளார். அங்கு தன் நண்பரின் வீடு எனக் கூறி, ஒரு வீட்டில் குழந்தை மற்றும் மனைவியை அழைத்துச் சென்றார். அப்போது மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து அந்த வீட்டில் வைத்தே மது குடித்துள்ளார். தன் மனைவிக்கும் பலவந்தமாக மதுவை வாயில் ஊற்றி குடிக்க வைத்துள்ளார். அதன்பிறகு இரண்டு வயது மகனை அழைத்துக்கொண்டு வெளியே போய்விட்டார் பெண்ணின் கணவன்.

அந்தநேரத்தில் வீட்டில் இருந்த ஒருவர், அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து தன் 4 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது ஒருவர் அந்தப் பெண்ணிடம், `உன் புருஷன் அங்கு சிலருடன் பிரச்னை செய்கிறான். நான் உன்னை அங்கு அழைத்துப் போகிறேன்' எனக் கூறியுள்ளார். மேலும், சிலருடன் சேர்ந்து ஓர் ஆட்டோவில் ஏற்றி அந்தப் பெண்ணை மறைவான பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஏற்கெனவே பலவந்தமாக மது கொடுத்திருந்ததால் அந்தப் பெண் மயங்கிவிட்டார். சிறிது நேரத்தில் தன் மகனின் அழுகை சத்தம் கேட்டு அந்தப் பெண் கண்விழித்துள்ளார். தனது உடை அலங்கோலமாக இருப்பதையும், தன் அருகில் சிலர் இருப்பதையும் பார்த்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

அப்போது, அங்கிருந்தவர்கள் மீண்டும் அந்தப் பெண்ணிடம் அத்துமீற முயன்றபோது எப்படியோ தப்பி மகனையும் அழைத்துக்கொண்டு ரோட்டுக்கு வந்துள்ளார். அங்குவந்த காரை நிறுத்தி உதவிகேட்டு வீட்டுக்குப் போயிருக்கிறார். அதன் பிறகுதான் புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. பாலியல்ரீதியாக துன்புறுத்தியவர்களிடம் இருந்து அந்தப் பெண்ணின் கணவன் பணம் வாங்கியதை இளம்பெண் பார்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாது இதுபற்றி போலீஸில் புகார் கொடுக்கக்கூடாது என்றும் கணவன் மிரட்டியுள்ளார்.

இதுபற்றி வழக்கு பதிவு செய்து அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் மன்சூர், ராஜா, அக்பர்ஷா, மனோஜ், அர்ஷாத் என ஆறுபேரை கைது செய்துள்ளோம். மேலும், நெளஃபல் என்பவரை தேடி வருகிறோம்" என போலீஸார் தெரிவித்தனர்.

பணத்துக்காக கணவனே மனைவிக்கு ஏற்படுத்திய கொடூர சம்பவம் கேரள மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு