Published:Updated:

திருச்சி: `ரூ.20 லட்சம் மதிப்பிலான அபின் கடத்தல்; 6 பேர் கைது!’ - சிக்கிய மருத்துவர்

போதைப் பொருளை கடத்தியவர்கள்
போதைப் பொருளை கடத்தியவர்கள்

இப்போதைப் பொருள்களைப் பணபலம் படைத்தவர்கள்தான் அதிகமாகப் பயன்படுத்துவார்கள். இந்த வகையான போதைப் பொருள் இங்கு எப்படி வந்தது.

திருச்சியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான அபினை (போதைப் பொருள்) காரில் கடத்திய மருத்துவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `அபின் விலை உயர்ந்த போதைப்பொருள். இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது’ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அபின்
அபின்

திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி-க்கு திருச்சியில் போதைப் பொருள்களான அபின் கடத்துவதாக ரகசியத் தகவல் வந்ததைத் தொடர்ந்து இரண்டு நாள்களாக மறைமுகமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் மன்னார் புரம் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியில் வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தபோது, அந்த காரில் அபின் என்ற போதைப்பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து காரிலிருந்த அபினை போலீஸார் கைப்பற்றி இரண்டு பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருச்சியைச் சேர்ந்த சரவணன், ஜெயப்பிரகாஷ் என்பது தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூரைச் சேர்ந்த சித்தா மருத்துவர் மோகன்பாபு, மெக்கானிக் அடைக்கலம் உட்பட நான்கு பேரையும் நேற்று இரவு பிடித்து திருச்சிக்கு அழைத்துவந்து விசாரித்து வருகிறார்கள்.

போதைப் பொருளை கடத்திய கார்
போதைப் பொருளை கடத்திய கார்

அவர்கள் அளித்த தகவலின் படி மேலும் இரண்டு பேரையும் போதைப் பொருள்களைக் கடத்திய கார் உள்ளிட்ட பறிமுதல் செய்து விசாரணை செய்துவருகின்றனர். போலீஸார் போதைப் பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி காமராஜ் இன்ஸ்பெக்டர் பால்சாமி இன்ஸ்பெக்டர் கலைவாணி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``போதைப் பொருளைக் கடத்த பெரிய டீம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனா நேரத்தில் போலீஸாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று சர்வ சாதாரணமாகக் கையாண்டிருக்கிறார்கள். திருச்சியை மையமாக வைத்து பெரம்பலூர், கரூர், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள்களைக் கடத்துவதாகத் தகவல் வந்தது.

போதை பொருளை கடத்தியவர்கள்
போதை பொருளை கடத்தியவர்கள்

அதனைத்தொடர்ந்து இரண்டு நாள்களாகத் திருச்சி உள்ளிட்ட சில பகுதிகளில் மறைமுகமாக விசாரித்துவந்தோம். இந்நிலையில் பெரம்பலூர் மருத்துவர் ஒருவரின் காரில் அபின் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த காரை பறிமுதல் செய்ததிருக்கிறோம். மூன்று கிலோவுக்கு குறையாமல் இருக்கும். அதன் மதிப்பு 20 லட்சம் வரை போகும். இப்போதைப் பொருள்களைப் பணபலம் படைத்தவர்கள்தான் அதிகமாகப் பயன்படுத்துவார்கள். இந்த வகையான போதைப் பொருள் இங்கு எப்படி வந்தது. இங்கு யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். முதல்கட்டமாக ஆறு பேரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். இப்போதுதான் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம் பிறகு பேசுகிறோம்” என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு