Published:Updated:

மஞ்சள் கடத்தல்: ரூட்டை மாற்றும் கும்பல் - தேங்காய்ப்பட்டணத்தில் சிக்கிய 6 டன்!

மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்ட படகு
மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்ட படகு

ராமேஸ்வரம் கடலோரக் காவல் துறையினரின் கண்காணிப்பு அதிகரித்திருப்பதால், கன்னியாகுமரி மாவட்டக் கடல் பகுதி வழியாக மஞ்சளைக் கடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தின், இரையுமன்துறை படகு இறங்குதளத்தில் லட்சத்தீவு பதிவு எண்கொண்ட விசைப்படகு ஒன்று கடந்த 8-ம் தேதி முதல் நின்றுகொண்டிருந்தது. மற்ற படகுகளுடன் கூட்டமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த விசைப்படகில் மஞ்சள் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கைக்குக் கடத்தப்படவிருப்பதாகவும் நித்திரவிளை போலீஸாருக்கு ரகசியத் தகவல் சென்றிருக்கிறது. இதையடுத்து இரையுமன்துறை இறங்குதளத்துக்குச் சென்ற நித்திரவிளை போலீஸார் அந்தப் படகை சோதனை செய்தனர். படகின் உள்ளே மீன்கள் பிடித்து வைக்கும் சேமிப்பு கிடங்குக்குள் சுமார் 125 சாக்கு மூட்டைகளில் சுமார் ஆறு டன் எடையுடைய மஞ்சள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் மஞ்சள் மூட்டைகளைப் பறிமுதல் செய்ததுடன், படகையும் கஸ்டடியில் எடுத்தனர். மேலும், படகின் உரிமையாளர் யார் என்ற விசாரணையில் இறங்கினர்.

ஸ்டோரேஜ் பகுதியில் பதுக்கிய மஞ்சள்
ஸ்டோரேஜ் பகுதியில் பதுக்கிய மஞ்சள்

விசாரணையில் அந்த விசைப்படகு வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த ஜோபு என்பவருக்குச் சொந்தமானது என்றும், அவர் அந்தப் படகை லட்சத்தீவு பகுதியைச் சேர்ந்த அன்வர் என்பவருக்கு விற்பனை செய்துவிட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. மேலும், ஜோபுவும் அன்வரும் சேர்ந்து ஒப்பந்த அடிப்படையில் அந்தப் படகை இயக்கிவருவதும் தெரியவந்தது. ஜோபு தலைமறைவான நிலையில், அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

இலங்கை கடற்படையினரிடம் சிக்கிய 5 டன் மஞ்சள்! - கொரோனா அச்சத்தால் விடுவிக்கப்பட்ட கடத்தல்காரர்கள்

இந்தநிலையில் மஞ்சள், இலங்கைக்குக் கடத்தப்படவிருந்ததாகத் தகவல் வெளியானதால், இது குறித்து கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். கொரோனா நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி மஞ்சளில் இருப்பதாகவும், இதனால் இலங்கையில் மக்கள் அதிக அளவு மஞ்சளைப் பயன்படுத்திவருதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கு ஒரு கிலோ மஞ்சள் இரண்டாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மஞ்சள் மூட்டைகள்
மஞ்சள் மூட்டைகள்

தமிழகத்தில் ஒரு கிலோ மஞ்சள் சுமார் 120 ரூபாய்க்கு கிடைப்பதால், அதை ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்திவந்தனர். அங்கு போலீஸ், கடலோரக் காவல் துறையினரின் கண்காணிப்பு அதிகரித்திருப்பதால் கன்னியாகுமரி மாவட்டக் கடல் பகுதி வழியாக மஞ்சளைக் கடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், மஞ்சள் மூட்டைகளைப் பதுக்கி படகில் கொண்டு சென்றதைக் கண்ட சிலர் போலீஸுக்குத் தகவல் அளித்ததால், இப்போது கடத்தல் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், குமரி கடற்கரைப் பகுதிகளில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு