Published:Updated:

`மாமா, அம்மாவின் கழுத்தை நெரித்தார்!'- 2 மாதத்துக்குப் பிறகு அதிர்ச்சி கொடுத்த 6 வயது சிறுவன்

இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்த பெண் ஒருவர், `கொலை செய்யப்பட்டார்' என அவரின் 6 வயது மகன் மூலம் தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.

Representational Image
Representational Image

கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகில் உள்ள சின்னயனபால்யா (Chinnayanapalya) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரின் மனைவி சுமலதா (24) என்பவர் கார்மென்ட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தத் தம்பதிக்குக் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 6 வயதில் மகன் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி சுமலதா திடீரென உயிரிழந்துள்ளார்.

சுமலதா
சுமலதா

அவருக்கு ஏற்கெனவே உடல்நலம் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்துள்ளன. அதன் காரணமாகவே அவர் இறந்திருப்பார் எனக் குடும்பத்தினர் நினைத்துள்ளனர். இந்த நிலையில், `சுமலதா இயற்கையாக உயிரிழக்கவில்லை, அது கொலை' எனத் தற்போது தெரியவந்துள்ளது. அண்மையில், தேவராஜ் தன் மகனிடம் சாதாரணமாக சுமலதா குறித்துப் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது தன் தாயின் இறப்பு தொடர்பாக 6 வயது மகன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தேவராஜ், உடனடியாக அனெகல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தன் தாயின் இறப்பு குறித்து தந்தையிடம் கூறியவற்றைக் காவலர்களிடமும் கூறியுள்ளான் சிறுவன். அதில், `அன்று எங்கள் வீட்டுக்கு வெங்கடேஷ் மாமா வந்தார். அம்மாவும் மாமாவும் ரூமுக்குள் சென்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மாமா அம்மாவை தலையில் அடித்தார். நான் அதைப் பார்த்தேன், பின்னர் சேலையால் அம்மாவின் கழுத்தை நெரித்தார். அம்மா கீழே விழுந்ததும் அவர் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்' எனத் தெரிவித்துள்ளான்.

Representational Image
Representational Image

சிறுவனின் வாக்குமூலத்தை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாகப் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். இதுபற்றிப் பேசியுள்ள போலீஸார், ``தேவராஜ் தன் மனைவியின் இறப்பு தொடர்பாகப் புகார் அளித்து, தன் மகனைச் சாட்சியத்துக்கும் அழைத்துவந்தார். இதையடுத்தே இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்த பெண், கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது. பின்னர் அதுதொடர்பாக அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், வெங்கடேஷுக்கும் சுமலதாவுக்கும் திருமணத்துக்குப் பிறகு நட்பு இருந்தது தெரியவந்தது.

Vikatan

மேலும், தன் மனைவி இறப்புக்குப் பிறகு வெங்கடேஷ் ஊரில் இல்லை என தேவராஜும் கூறினார், இதை அடிப்படையாக வைத்து தலைமறைவாக இருந்த வெங்கடேஷை நாங்கள் கைது செய்தோம். சுமலதாவைக் கொலை செய்ததை வெங்கடேஷ் ஒப்புக்கொண்டார்.

அவர் போலீஸாரிடம் கூறுகையில், `நானும் சுமலதாவும் திருமணத்துக்கு பிறகு நெருங்கிப் பழகி வந்தோம். ஒருகட்டத்தில் எங்கள் நட்பை முறித்துக்கொள்ளலாம் என அவர் கூறினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால் எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

சம்பவம் நடந்த நாளன்று, எங்கள் உறவு தொடர்பாக வீட்டில் கூறிவிடுவேன் என சுமலதா என்னை மிரட்டினார். அதில் கடுப்பான நான் அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டேன். அவசரத்தில் அருகிலிருந்த சுமலதாவின் மகனைக் கவனிக்கவில்லை' எனக் கூறியிருக்கிறார்.

``வெங்கடேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மொத்த வழக்கும் 6 வயது சிறுவனின் வாக்குமூலத்திலேயே அடங்கியுள்ளது. இந்தக் கொலைக்கு அவன் ஒருவனே சாட்சி. தன் தாய் மரணம் தொடர்பாகச் சிறுவனிடம் மீண்டும் மீண்டும் கேட்பது வருத்தமாக உள்ளது, இருந்தாலும் எங்களுக்கு வேறு வழியில்லை” எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.