Published:Updated:

3-வது மாடி; 6 வயதுச் சிறுமி; புதருக்குள் சடலம்! - கதறிய தந்தை; சந்தேக வளையத்தில் சித்தி

சென்னை சேலையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் 6 வயதுச் சிறுமி தலையில் பலத்த காயங்களுடன் இறந்த சம்பவத்தில் சிறுமியின் சித்தியிடம் விசாரணை நடந்துவருகிறது.

சிறுமி ராகவி
சிறுமி ராகவி

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் குடியிருப்பவர் பார்த்திபன். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரின் 2-வது மனைவி சூர்யகலா. இந்தத் தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். பார்த்திபனின் முதல் மனைவிக்கு ராகவி (6) என்ற மகள் உள்ளார். அவரையும் சூர்யகலாதான் கவனித்துவந்தார்.

apartment
apartment

இந்தநிலையில், நேற்று மாலை பார்த்திபனுக்கு போன் செய்த சூர்யகலா, ராகவியைக் காணவில்லை என்று பதற்றத்துடன் கூறியுள்ளார். இதனால் அவசரமாக வீடு திரும்பிய பார்த்திபன் ராகவியைத் தேடினார். அவருடன் சேர்ந்து சூர்யகலாவும் தேடியுள்ளார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் ராகவி கிடைக்கவில்லை. இதனால் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்குப் பார்த்திபன் சென்று பார்த்துள்ளார். அப்போது அடுக்குமாடியின் கீழ்ப்பகுதியில புதராகக் காட்சியளிக்கும் இடத்தில் ராகவி அணிந்திருந்த உடை தெரிந்தது. இதனால் மாடியிலிருந்து கீழே இறங்கிய பார்த்திபன் அங்கு சென்றார். அப்போது தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ராகவி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார்.

உடனே அவரைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் பார்த்திபன். ராகவியைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதனால் பார்த்திபன் கதறி அழுதார். அப்போது சூர்யகலாவும் அழுதார். மாடியிலிருந்து ராகவி கீழே விழுந்திருக்கலாம் எனப் பார்த்திபன் கருதினார். ராகவி இறந்த தகவல் சேலையூர் காவல் நிலையத்துக்குத் தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு வந்த சேலையூர் உதவி கமிஷனர் சகாதேவன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீஸார் ராகவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராகவி சடலமாகக் கிடந்த இடம், மொட்டை மாடி ஆகியவற்றை போலீஸார் ஆய்வு செய்தனர்.

police enquiry
police enquiry

இதையடுத்து ராகவி தொடர்பாக சூர்யகலாவிடம் போலீஸார் விசாரித்தனர். மேல் விசாரணைக்காக சூர்யகலாவை இன்று காலை காவல் நிலையத்துக்குப் போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது ராகவி தொடர்பான கேள்விகளை சூர்யகலாவிடம் போலீஸார் கேட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகவி மரணத்தில் போலீஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையிலேயே சூர்யகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது.

நேற்று மாலை வரை சிறுமி ராகவி, 3 வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து இறந்ததாகத்தான் செய்தி வெளியானது. ஆனால், ராகவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் போலீஸார் தெரிவித்ததோடு பார்த்திபனின் 2 வது மனைவியான சூர்யகலாவிடம் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யகலா கூறும் தகவலின் அடிப்படையில் ராகவி வழக்கின் சட்டப் பிரிவை மாற்ற போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

  ராகவி சடலமாகக் கிடந்த இடம்
ராகவி சடலமாகக் கிடந்த இடம்

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். ``சிறுமி ராகவி, 1-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் அவரின் சடலம், புதரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. தலையில் மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மாடியிலிருந்து தவறி விழுந்திருந்தால் கை, கால்கள் மற்றும் உடலில் மற்ற இடங்களிலும் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதான் ராகவி மரணத்தில் எங்களுக்கு எழுந்துள்ள முதல் சந்தேகம். மேலும் மாடியிலிருந்து ராகவி தவறிவிழ வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், மொட்டை மாடி மற்றும் மாடிப்படிக்குச் செல்லும் இடங்களில் பாதுகாப்புக்குத் தேவையான தடுப்புகள் உள்ளன. இதனால்தான் ராகவி மரணம் குறித்து அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திவருகிறோம். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்துவருகிறோம்.

ராகவியை கடைசியாக எப்போது பார்த்தீர்கள் என்ற கேள்வியை சூர்யகலாவிடம் கேட்டபோது அவர் கூறிய பதில் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திபனிடமும் ராகவி மற்றும் அவரின் குடும்ப வாழ்க்கை குறித்தும் விசாரித்து வருகிறோம். இதுவரை சூர்யகலா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.