Published:Updated:

`110 காஸ்ட்லி மொபைல்கள்; ஆஃபரில் சேல்ஸ்!' -பிரபல செல்போன் கடையைப் பதறவைத்த 6 ஊழியர்கள்

சென்னையில் பிரபல செல்போன் கடையில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 11 செல்போன்களுக்கு பணம் கொடுக்காமல் நூதன முறையில் ஏமாற்றிய சாந்தகுமார் மற்றும் அவரின் கூட்டாளிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசடி வழக்கில் சிக்கிய சாந்தகுமார்
மோசடி வழக்கில் சிக்கிய சாந்தகுமார்

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பிரபலமான செல்போன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் எனத் தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. விலை உயர்ந்த செல்போன்களை வாடிக்கையாளர்கள் லோன் மூலமாகவும் வாங்குவதற்கு இந்தக் கடையில் வசதி உள்ளது. இங்கு லோன் கொடுப்பதுபோல கொடுத்து அதை ரத்து செய்து 17 லட்சம் ரூபாயை சிலர் ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மயிலாப்பூர் ரயில் நிலையம்
மயிலாப்பூர் ரயில் நிலையம்

மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசினோம். ``அடையாறு பகுதியில் உள்ள பிரபலமான ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் மார்சின் ஜோசப் என்பவர், எங்களிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், `எங்கள் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சாந்தகுமார் மற்றும் 5 பேர் சேர்ந்து 17 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சேகர் சிங் தலைமையிலான போலீஸார் சம்பந்தப்பட்ட செல்போன் கடைக்குச் சென்று விசாரித்தனர். அப்போது அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``செல்போன்களை வாங்குபவர்களுக்கு 10 நிமிடத்தில் லோன் வசதி செய்து கொடுக்கப்படும் என்ற விளம்பரத்தை அந்த செல்போன் கடை கொடுத்திருந்தது. இதற்காக லோன் வசதியை செய்து கொடுக்கும் நிறுவனம் சார்பில் சம்பந்தப்பட்ட செல்போன் கடையில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதையொட்டி, ஒரு கடைக்கு ஒருவர் வீதம் பணியாற்றிவருகின்றனர். மயிலாப்பூர் கடையில் சாந்தகுமார் என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பணியாற்றிவந்துள்ளார். இந்தநிலையில் செல்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சாந்தகுமார் லோன் வசதி செய்து கொடுத்துள்ளார். அப்போது வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பான் கார்டு, ஆதார் கார்டு, சம்பளச் சான்று உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு நூதனமான முறையில் தான் பணியாற்றும் நிறுவனத்தையும் செல்போன் கடையையும் அவர் ஏமாற்றியுள்ளார்.

மோசடி
மோசடி

வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஆவணங்களின் அடிப்படையில் லோனுக்கு ஏற்பாடு செய்யும் சாந்தகுமார், அதன்பிறகு ஏமாற்று வேலையைக் காட்டுவார். செல்போனை வாங்கிவிட்டு கடையைவிட்டு வாடிக்கையாளர்கள் சென்ற பிறகு, லோன் தொகை ரத்தாகிவிட்ட தகவலை கடையில் உள்ளவர்களிடம் கூறுவார். ஆனால், இந்தத் தகவல் கடையின் கேஷியருக்குத் தெரிவிக்க மாட்டார். இதற்குச் செல்போன் கடையில் வேலைபார்க்கும் சிலரும் சாந்தகுமாருக்கு உதவியாக இருந்துள்ளனர். இப்படியே சாந்தகுமார் 13 விலை உயர்ந்த செல்போன்களுக்குரிய தொகையை ஏமாற்றிவந்துள்ளார். சாந்தகுமாரின் மோசடி வேலைகளைக் கண்டறிந்ததும் அவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டனர்.

சாந்தகுமாருக்குப் பதிலாக மற்ற சில ஊழியர்களும் இதே மோசடியைத் தொடர்ந்துள்ளனர். சாந்தகுமார் ஸ்டைலிலேயே இந்த மோசடி தொடர்ந்துள்ளது. அதிலும், ஒருபடி மேலே போய், தெரிந்தவர்களுக்கு மட்டும் லோன் மூலம் செல்போன்களைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். உதாரணத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை 50,000 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். இதில் கடையின் ஊழியர்களும் லோன் வசதியைக் கொடுக்கும் ஊழியர்களும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர்.

ஆடம்பர வாழ்க்கை; விலையுயர்ந்த கார்கள்! - கேரள வங்கிகளில் நூதன மோசடி செய்த தாய் - மகன்

சம்பந்தப்பட்ட செல்போன் கடையின் நிர்வாகம், கணக்கு வழக்குகளைப் பார்த்தபோதுதான் இந்த மோசடி குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது. தற்போது லோன் கொடுக்கும் நிறுவனம், சம்பந்தப்பட்ட செல்போன் கடைக்கு 110 செல்போன்களுக்கு 17 லட்சம் ரூபாயை செட்டில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், லோன் கொடுக்கும் நிறுவனமோ, நாங்கள் அப்ரூவலே கொடுக்காமல் எப்படி செல்போன்களை விற்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. அதன்பிறகு நடந்த விசாரணையில்தான் சாந்தகுமார் டீம் செய்த மொத்த மோசடி வேலைகளும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் சாந்தகுமார் உள்பட 6 பேர் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதில், சாந்தகுமாரை மட்டும் கைது செய்துள்ளோம். மற்றவர்களைத் தேடிவருகிறோம்" என்கின்றனர் விரிவாக.