Published:Updated:

கஞ்சா கடத்தியதாக நாகை மீனவர்கள் 2 பேர் கைது!

Vikatan Correspondent
கஞ்சா கடத்தியதாக நாகை மீனவர்கள் 2 பேர் கைது!
கஞ்சா கடத்தியதாக நாகை மீனவர்கள் 2 பேர் கைது!

கஞ்சா கடத்தியதாக கூறி நாகை மீனவர்கள் இரண்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
 

கஞ்சா கடத்தியதாக நாகை மீனவர்கள் 2 பேர் கைது!

சமீப காலமாக தமிழக கடலோர பகுதிகளில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. கேரளா மற்றும் தேனி பகுதிகளில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்படுவது அதிகரித்து வருகிறது.

தமிழக கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை, கடலோர காவல் படை, சுங்கதுறை மட்டுமல்லாமல் தமிழ்நாடு கடற்கரை பாதுகாப்பு குழும போலீசார், க்யூ பிரிவு, போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு என பல்வேறு அமைப்புகளும் போட்டி போட்டு கொண்டு பேட்டி கொடுக்கின்றனர்.
 

கஞ்சா கடத்தியதாக நாகை மீனவர்கள் 2 பேர் கைது!

ஆனால் கடல் பகுதிகளில் நடக்கும் ஊடுருவல் சம்பவங்களை மட்டும் இவர்களால் தடுக்க முடியவில்லை. கடந்த வாரம் சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரணடைந்த இலங்கை தமிழர் மோகன்தாஸ் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில், இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான் மன்னார் பகுதியில் இருந்து கள்ளத்தனமாக தனுஷ்கோடிக்கு வந்ததாகவும், அங்கிருந்து பாம்பன் சென்று பின்னர் சென்னைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

பல்வேறு பாதுகாப்பு வளையங்களை மீறி இலங்கையில் இருந்து ஒருவர் கள்ளத்தனமாக தமிழகத்திற்கு எளிதாக வந்திருப்பது எல்லை பாதுகாப்பு பணியினை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

கடல் பாதுகாப்பு பணியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை எடுத்து காட்டும் வகையில் மற்றொரு கடத்தல் சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது. நாகபட்டினம் பகுதியில் இருந்து சென்ற ஒரு நாட்டுப்படகை கஞ்சாவுடன் இலங்கை கடற்படையினர் பிடித்துள்ளனர். டி.என்.06&எம்.ஓ.1610 என்ற பதிவு எண்ணை கொண்ட நாட்டுப்படகில் இருந்து 6.5 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பிடித்துள்ளனர். இது தொடர்பாக அந்த படகில் இருந்த நாட்டுப்படகு மீனவர்கள் இருவரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கடற்படையினரின் விசாரணைக்கு பின் மீனவர்களும் அவர்களிடம் இருந்த கஞ்சாவும் பருத்திதுறை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-இரா.மோகன்