Published:Updated:

மண்டபத்துக்கு ஜாஃபர்...

மகுடத்தில் கமிஷனர்!

மண்டபத்துக்கு ஜாஃபர்...

மகுடத்தில் கமிஷனர்!

Published:Updated:
##~##

சுர பலத்துடன் அ.தி.மு.க. ஜெயித்த அடுத்த கணமே, 'மண்டபத்துக்கு யார் டிரான்ஸ்ஃபர்?' என்ற கேள்விதான் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் எழுந்தது. சட்டென்று வந்த பதில், 'வேறு யார், உளவுத் துறையின் கூடுதல் டி.ஜி.பி. பதவியில் இருந்த ஜாஃபர் சேட்தான்!' 

ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள ஊரான மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரி பதவியில் ஜாஃபரை, கடந்த 18-ம் தேதி நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டார். சட்டவிரோதமாக டெலிபோன் ஒட்டுக்கேட்பு, அரசு விதிகளை மீறி தனது குடும்பத்தினர் பெயரில் திருவான்மியூர், முகப்பேர் ஆகிய இடங்களில் அரசு நிலங்களை விலைக்கு வாங்கியது போன்றவை ஜாஃபரின் இடமாற்றத்துக்கு பிரதானமாகச் சொல்லப்​பட்டாலும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போயஸ் கார்டனில் நடந்த சில நிகழ்வுகள் லீக் ஆனது, கட்சியின் முன்னணித் தலைவர்கள், எம்.எல்.ஏ-

மண்டபத்துக்கு ஜாஃபர்...

க்களை முகாம் மாறவைத்தது, தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி சிலரைக் கழற்றிவிட்டது, வேட்பாளர் பட்டியலில் தகிடுதத்தம், தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்த மிக்ஸி இலவசம்போன்ற விஷயங்​களை முன்கூட்டியே மோப்பம் பிடித்து கருணாநிதியிடம் சொல்லியது போன்றவை எல்லாம் ஜாஃபரின் ஒட்டுக்கேட்பு லீலைகள்தான் என்று தெரிந்ததும் கொதித்துவிட்டாராம் ஜெயலலிதா. இதன் பலன்தான் மண்டபம் முகாமின் சிறப்பு அதிகாரியாக ஜாஃபர் தூக்கி அடிக்கப்பட்டது.

இந்தப் பதவிக்கென்று நிறைய விசேஷங்கள் இருக்கின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரச்னைக்குரிய கைதிகளை, கடல் தாண்டி அந்தமான் தீவின் சிறையில் அடைப்பார்கள். அது மாதிரி, தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி அதிகாரத்தில் வரும்போது, முதலில் அவர்களுக்கு வேண்டாத ஐ.பி.எஸ். அதிகாரியை இந்த அகதிகள் சிறப்பு முகாமுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்துவிடுவார்கள்.

கடல் மார்க்கமாக இலங்கையில்இருந்து தமிழகத்துக்கு வரும் அகதிகளை மண்டபத்தில் உள்ள சிறப்பு முகாமில்தான் முதலில் தங்கவைப்பார்கள். சுமார் 3,000 பேர்இங்கு தங்கலாம். அவர்களிடம் பூர்வாங்க விசார​ணைகள் முடித்ததும், அகதி என்பதற்கான அடையாள அட்டை தருவார்கள். பிறகு, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள 117 முகாம்களுக்கு மாற்றப்படுவார்கள். இப்படி, சுமார் 70 ஆயிரம் அகதிகள் வரை தமிழகத்தில் இருப்பதாகத் தகவல். இப்படித் தஞ்சம் அடையும் அகதிகளுக்கு இடையில், வெளிநாட்டு உளவாளிகள், தீவிரவாதிகள்போன்றவர்களைக் கண்டுபிடிக்க ஸ்கேன் செய்வதுதான் சிறப்பு அதிகாரியின் முக்கியப் பணி. அதைத் தவிர, வெளியூர் முகாம்களுக்கு விசிட் போகலாம். ஆனால், தப்பித்தவறிக்கூட சென்னைக்கோ, ராமநாதபுரத்துக்கோகூட, மேலிடத்தின் அனுமதி இல்லாமல் போகக் கூடாது. போனால், நிச்சயம் உண்டு மெமோ. 'தமிழ்நாட்டில் ஈழப் பிரச்னை தலை எடுக்கவிடாமல் தடுத்ததில் ஜாஃபரின் பங்கு முக்கியமானது. அதற்கான தண்டனை இப்போது மண்டபம் முகாமில் கிடைக்கப்போகிறது’ என்றும் கமென்ட் அடிக்கிறார்கள்.

அகதிகள் முகாம் அருகே ஓடு வேய்ந்த ஒரு கட்டடம் உண்டு. முன்பு அங்கே சாதாரண எஸ்.ஐ. அந்தஸ்தில் இருப்பவர்​களே இருப்பார்கள். இப்​போதோ அங்கேதான், மிக உயர்ந்த கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை. இதைத் தவிர, அரசுக்கு சொந்தமான கலோனியல் பங்களா என்கிற கட்டடமும், முகாம் அருகே இருக்கிறது. பொதுப் பணித் துறைக்கு சொந்தமான இந்தக் கட்டடத்தில் மூன்று 'சூட்'டுகள் உண்டு. ஒன்று மட்டும் சுமார்... மற்றவை தேறாதவை. அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள், மந்திரிகள் இந்த ஏரியாவுக்கு விசிட் வரும்போது,

மண்டபத்துக்கு ஜாஃபர்...

இங்கே தங்கி இருக்கும் அதிகாரிகள் வெளியேறிவிட வேண்டும். எனவே, சிறப்பு அதிகாரியாக வருபவர்கள் யாரும் நிரந்தரமாக இந்த பங்களாவில் தங்குவது முடியாது. ஊருக்குள் எங்காவது வாடகைக்கு வீடு பிடித்தே இருக்க வேண்டிய சூழ்நிலை. கடற்கரையில் தினமும் காலை - மாலை வாக்கிங் போகலாம். மீன் உணவு ஃப்ரஷாகக் கிடைக்கும். இவையே ஆறுதலான விஷயங்கள்.

கடைசியாக, தி.மு.க. ஆட்சியின் ஐந்து வருடங்கள் கிறிஸ்டோபர் நெல்சன் இங்கே இருந்தார். 2001-ல் அ.தி.மு.க. ஜெயித்ததும், அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் கருணா நிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பங்கேற்ற போலீஸ் உயர் அதிகாரிகளில் நெல்சனும் ஒருவர். அந்தக் கோபத்தில் 2006-ல் தி.மு.க ஆட்சி வந்ததும் மண்டபத்துக்கு அவர் தூக்கியடிக்கப்பட்டார். வாடகைக்கு வீடு பிடித்து தங்கினார். அவர் தினமும் அமர வேண்டிய ஓட்டுக் கொட்டகையை இவரே சுண்ணாம்பு அடித்து செப்பனிட்டுத் தனி நபராக உட்கார்ந்து இருந்ததை, அவரது ஐ.பி.எஸ். நண்பர்கள் கேள்விப்பட்டு, மனம் நொந்துவிட்டார்கள். இரண்டு மாதங்கள் முன் நெல்சன் ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு முன்பு மண்டபத்தில் நியமிக்கப்பட்டவர்கள் - அலெக்ஸாண்டர், ஷியாம் சுந்தர், சரபீத் சிங்.

மணி மகுடத்தில் கமிஷனர்

உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யான ஜாஃபர் சேட், சென்னை போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன் மற்றும் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யான ராதாகிருஷ்ணன் மூவரும் கடந்த தி.மு.க. ஆட்சியின் மூன்று தூண்கள்! ஒரே கோஷ்டியாக அவர்கள் செயல்பட்டதாக, போலீஸில் ஒரு சாரர் முணுமுணுத்தனர். ஒரு கட்டத்​தில், அரசியல் சார்புடைய சில விவகாரங்களில் ஜாஃபர் சேட் சொல்ல, அதை செய்வதற்கு கமிஷனர் ராஜேந்திரன் யோசித்ததாகவும் அதனால், ஜாஃபர் டென்ஷன் ஆனதாகவும் சொல்கிறார்கள். 'இவர் சரிப்பட்டு வர மாட்டார்' என்பதைப் புரிந்துகொண்டு, ராஜேந்திரனின் நிழலாக வர்ணிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் சண்முகத்தை மாற்றி தனது கோபத்தைக் காட்டினாராம் ஜாஃபர். இதுபோலவே, ராதாகிருஷ்ணனும்கூட சில விஷயங்களில் முரண்டு பிடிக்க... அவரும்ஜாஃபருக்கு ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போய்விட்டாராம். இந்த விஷயங்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதலில் தெரியாததால், ராஜேந்திரனை முதலில் சிறைத் துறைக்கு தூக்கியடித்தார். முதல்வரிடம், சீனியர் அதிகாரிகள் பின்னணி விவரங்களை சொல்லிப் புரியவைத்ததும், ராஜேந்திரனை மணி மகுடம் சூட்டி, ஜாஃபர் இருந்த பதவியான உளவுத் துறை கூடுதல் டி.ஜிபி-யாக நியமித்தார்.

முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், இதே ராஜேந்திரன் உளவுத் துறையில் இருந்தவர். அல்-உம்மா இயக்கத்தின் முழுப் பரிமாணத்தைக் கண்டுபிடித்து, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்த பெருமைகொண்டவர். ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இன்னொரு கோஷ்டியினரோ, ''ஜாஃபர் விட்டுச்சென்ற தொலைபேசி ஒட்டுக்கேட்பை இவர் தொடர்வார். ராஜேந்திரன், கமிஷனராக இருந்த இரண்டரை வருட காலத்தில், மீடியா பிரமுகர்கள் மோதிக்கொண்ட விவகாரங்களில் ஓரவஞ்சனை செய்தார். தி.மு.க. வி.ஐ.பி-கள் மீது புகார் வந்தபோது, அவர்களுக்காக சட்டச் சலுகைகளைக் காட்டினார். இலங்கைப் பிரச்னையைவைத்துப் போராடியவர்கள் மீது, பாரபட்சம் காட்டினார். இதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று இருக்கிறோம். விரைவில் ராஜேந்திரனும் மாற்றப்படுவார்!'' என்கிறார்கள்.

இந்நிலையில், உளவுத்துறை டி.ஜி.பி-யாக ராமானுஜம் நியமிக்கப்பட்டு இருப்பது அடுத்து வரப்போகும் பரபரப்புகளுக்கு கட்டியம் கூறுகிறது!

- ஜூ.வி. கிரைம் டீம்

ஊழலைக் கிளற உமாசங்கர்?

1996-ம் ஆண்டு தி.மு.க. பதவி ஏற்றதும், அதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களைக் கண்டுபிடிக்க, ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசங்கரை நியமித்தனர். அமைச்சர்களும், சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அரசு ஃபைல்களில் தகிடுதத்தம் செய்ததை உமாசங்கர் கண்டுபிடித்தார். பலரும் ஊழல் வழக்குகளை சந்தித்தனர். 2001-ல் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்ததும், அவரை சேலத்தில் டம்மியான பதவியில் போட்டனர். 2006-ல் தி.மு.க. ஆட்சி வந்ததும், எல்காட் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். பிறகு, கேபிள் டி.வி. கார்ப்பரேஷனின் தலைமை அதிகாரியாக மாற்றப்பட்டார். அங்கு, அப்போதைய முதல்வர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் உரச நேர்ந்தது. அதனால்,  உமாசங்கர் மீது அரசு கோபம்கொண்டது. ஒரு கட்டத்தில், போலி சாதி சான்றிதழ், வருமானத்துக்கு மேல் சொத்து சேர்த்தார் என்றெல்லாம் குற்றம் சாட்டி, அவரை சஸ்பெண்ட் செய்தனர். அரசியல் கட்சிகள், தாழ்த்தப்பட்ட சமுதாய அமைப்புகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு எதிராகக் கிளம்ப... வேறு வழி இல்லாமல், சஸ்பெண்டை ரத்து செய்து, டான்சி நிறுவன நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இப்போது அ.தி.மு.க. ஆட்சி வந்துள்ள சூழ்நிலையில், 'முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களைக் கண்டுபிடிக்க உமாசங்கரையே நியமிக்கலாமே? என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு அட்வைஸர்கள் சிலர் ஐடியா கொடுத்து இருக்கிறார்களாம்.

உமாசங்கரிடம் நாம் கேட்டபோது, ''இயேசு கைவிடார் என்பது பைபிள் வார்த்தை. எனது வாழ்க்கையில் இக்கட்டான நேரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முதலிலேயே இயேசு என்னிடம் சொல்லிவிடுவார். என் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டிய தி.மு.க. ஆட்சியைப்பற்றி இயேசு என்னிடம், 'உன்னைத் தொடுகிறவன், என் கண்மணியைத் தொடுவதற்கு சமம். உன் தலையில் இருந்து முடியைக்கூட விழ நான் அனுமதிக்க மாட்டேன்'னு சொன்னார். அப்படித்தான் நடந்தது. கடந்த ஜூலை மாதத்தில், தி.மு.க. மோசமான தோல்வியை சந்திக்கும்னு இயேசு என்னிடம் தெரிவித்தார். மூணு என்கிற எண்ணையும் சைகையால் காட்டினார். அதை நான் மூணு ஸீட் என்று நினைத்தேன். ஆனால், தேர்தல் முடிவில் மூன்றாம் இடத்துக்கு தி.மு.க. தள்ளப்படும் என்பதைத்தான் ஜனவரி முதல் வாரத்தில் சொன்னார். நான் சஸ்பெண்டு ஆன சில நாட்களில், எனக்கு ஆதரவாக ஜெயலலிதா அறிக்கைவிட்டார். அப்போதே, அடுத்த சி.எம். ஆக அவரை கர்த்தர் நியமிச்சிட்டார்னு எனக்குத் தெரியும். ஜெயலலிதா மீது கர்த்தரின் கரம் இருக்கு. அதனால், அவரது ஆட்சிக்கும் ஆசீர்வாதங்கள் உண்டு'' என்றார் நம்பிக்கையுடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism