Published:Updated:

`புதுச்சேரி முதல்வர் சொன்ன தகவல்!' - தி.மலையில் சிக்கிய 62,550 கிலோ கஞ்சா

கஞ்சா விற்பனை செய்தவர்களைக் கைது செய்த போலீஸ்
கஞ்சா விற்பனை செய்தவர்களைக் கைது செய்த போலீஸ்

திருவண்ணாமலை நகரக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், காவல் துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 62,550 கிலோ `கஞ்சா’ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்த 34 பேரை, குண்டுக்கட்டாக தூக்கியுள்ளது போலீஸ்.

பிப்ரவரி 19-ம் தேதி, புதுச்சேரியில் நடந்த விழா ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி, ``புதுவை மாநில இளைஞர்கள் சீரழிந்து போவதற்குக் காரணம், திருவண்ணாமலையிலிருந்து ரயில் மூலம் `கஞ்சா’ கடத்தி வந்து விற்பனை செய்வதுதான். இதுகுறித்து தமிழகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தும், தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தமிழக காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாகவே பார்க்கப்பட்டது.

திருவண்ணாமலையில்  கஞ்சா விற்பனை செய்த பெண்
திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்த பெண்

இந்த நிலையில், சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனை செய்பவர்களைக் கைது செய்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட, திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் திருவண்ணாமலை நகர் முழுவதும் சந்து சந்தாக அதிரடி சோதனை நடத்தினர் போலீஸார். இந்தச் சோதனையில், 62,550 கிலோ `கஞ்சா’ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம், ``திருவண்ணாமலையில் பல ஆண்டுகளாகக் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கிரிவலப்பாதையில் இருக்கும் சாதுக்கள் அதிக அளவில் கஞ்சா புகைப்பார்கள். அதனால், அதை யாரும் கண்டுகொள்வது இல்லை. ஆனால், தற்போது நடுத்தர இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என அதிக அளவில் கஞ்சாவைப் புகைக்கிறனர். அண்டை மாநிலமான ஆந்திரா, பெங்களூரு மாநிலங்களிலிருந்தே சப்ளை ஆகிறது. மிக முக்கியமாகப் பவுர்ணமி நாளில் திருப்பதியிலிருந்து வரும் ரயில் மூலமாகவே கஞ்சா திருவண்ணாமலைக்கு வருகிறது” என்றனர்.

கஞ்சா
கஞ்சா

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில், `1.1.2020 முதல் 12.3.2020 வரையிலான காலகட்டத்தில் இதுவரை திருவண்ணாமலை நகரக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததற்கு, 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய 34 பேரைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளோம்.

அவர்களிடமிருந்து மொத்தம் 62.550 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வண்டிமேட்டுத் தெருவைச் சிறந்த சுபாஷினி என்ற பெண்ணை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளோம். மேலும், கஞ்சா கடத்தி வருதல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு