சுவாதி கொலை வழக்கு: புதிய வீடியோ காட்சியும் காவல்துறையின் விளக்கமும்! | Swathi murder case: New video and the explanation of Chennai Police

வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (01/07/2016)

கடைசி தொடர்பு:20:08 (01/07/2016)

சுவாதி கொலை வழக்கு: புதிய வீடியோ காட்சியும் காவல்துறையின் விளக்கமும்!

சுவாதியைக் கொலை செய்த குற்றவாளி  குறித்து தினமும் புதுப்புது தகவல்கள் பரவி வருகின்றன. சுவாதி கொலை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியின் அடிப்படையில், கொலையாளி நடந்து செல்வது போன்று போலீஸார் முதலில் படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போது குற்றவாளி மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதாக இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி, இந்த விவகாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படாத நிலையில், உண்மை  நிலை என்ன என்பது குறித்து சென்னை காவல்துறை கூடுதல் கமிஷனர் சங்கரிடம் விசாரித்தோம்.

அவரிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் இங்கே...

சுவாதி கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் உள்ளதா?

குற்றவாளியை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். இந்தச் சம்பவம் குறித்து நூற்றுக்கணக்கானோரிடம்           விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. தனிப்படை போலீசார் சென்னை மட்டுமல்லாமல், பிறமாவட்டங்களிலும், வெளி  மாநிலங்களிலும் கொலையாளியைத் தேடி வருகிறார்கள்.இதற்காக அங்கே முகாமிட்டுள்ளார்கள். வெகு விரைவில் குற்றவாளியைப் பிடித்துவிட்டோம் என்ற நல்ல செய்தியை சொல்கிறோம்.

கொலையாளி மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது போல வீடியோ வெளியாகி உள்ளதே... அது உண்மையா?

கொலையாளிக்கும் தற்போது பரவி வரும் வீடியோவில் பைக்கில் செல்லும் நபருக்கும் தொடர்பில்லை என்று கருதுகிறோம். நானும் அந்த சிசிடிவி வீடியோவைப் பார்த்தேன். அதில் வரும் நபர் கொலைக்குத் தொடர்புள்ள நபர் போல தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில்தான் பெரிதுபடுத்தி பரப்பப்படுகிறது. எனவே எப்படி பரவியது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

 

சுவாதி கெளரவக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் செய்திகள் பரவி வருகிறதே.... அதை எப்படி பார்க்கிறீர்கள்?

கெளரவக் கொலையாக இருக்குமா என்பது குறித்து இப்போதைக்குச் சொல்லமுடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை என்றுதான் கருதுகிறோம். ஆனால் கொலையாளியைப் பிடிக்கும் வரை எந்த உறுதியான முடிவிற்கும் வர இயலாது. இந்த விஷயத்தில் ஊடகங்களும்,சமூக வலைதளத்தில் இயங்குவோரும்  எதையும் பெரிதுபடுத்தி தகவல்களை வெளியிடவேண்டாம். அது வழக்கு விசாரணைக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிடும். எனவே பொதுமக்களும் ஊடகங்களும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும்.


நா.பா.சேதுராமன்    
                            

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்