'பத்ரா' பத்திரம்... இம்சித்த மாணவர்களை பெற்றோர்களே சரணடையச் செய்தனர்!


வீட்டு மாடியிலிருந்து 'பத்ரா' என்ற நாயைத் தூக்கி எறிந்து விளையாடி கொடுமைப்படுத்திய அரக்கக் குணம் கொண்டவர்களைக் கைது செய்ய, போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திவந்த நிலையில் இன்று அவர்களது பெற்றோர்களே அவர்களை காவல்துறைவசம் ஒப்படைத்ததையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் வெளியான ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவர் தன் வீட்டு மாடியில் இருந்து நாய் ஒன்றைத் தூக்கி எறிவது போலவும், அது ஸ்லோ-மோஷனில் கீழே சென்று விழுவது போலவும் இருக்கும்  வீடியோ வைரலானது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் மனம் பதை பதைத்தார்கள். இதனையடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் மட்டுமில்லாது பொதுமக்களும் கடுமையாக கொந்தளிக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் கடும் கண்டனமும் விமர்சனங்களும் எழுந்தன. விலங்குகள் நல ஆர்வலர்கள், " நாயைத் தூக்கி எறிந்து கொல்ல முயன்றவர்கள் மனித நேயம் அற்றவர்கள். அவர்களுக்குக் கடுமையான தண்டனைக் கொடுக்கவேண்டும்"  என்று வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில்தான் நாயை துன்புறுத்திய அவர்கள் இருவரையும், அவர்களது பெற்றோர் இன்று காவல்துறை வசம் ஒப்படைத்தனர். மருத்துவ மாணவர்களான இவர்களில் நாயைத்  துாக்கி எறிந்தவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த கவுதம் சுதர்ஸன், அதை வீடியோவாக எடுத்தவர் நெல்லையைச் சேர்ந்த ஆஷிஷ் பால் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

கைது செய்யப்பட்ட இருவரையும் ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் கொண்டுசென்றனர்.

இது தொடர்பாக போலீஸிடம் புகார் அளித்த விலங்குகள் நல ஆர்வலர்களில் ஒருவரான ஆண்டனி ரூபினிடம் பேசினோம்.

ஆண்டனி ரூபி" எனக்கு இந்த வீடியோவை நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். அதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, இது தொடர்பான தகவல் கிடைத்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு சொல்லி இருந்தோம். அதன்படி ஃபேஸ்புக்கில் இருந்து பலர் அந்த வீடியோவில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்களை எங்களுக்கு அனுப்பி இருந்தனர். அதன்படி அந்த வீடியோவில்,  நாயைத் தூக்கி எறிந்தது கெளதம் சுதர்ஷன், அதை வீடியோவில் பதிவு செய்தது ஆஷிஷ் பால் என்கிற இரு நபர்கள் என்பது தெரியவந்தது. அதோடு அவர்கள் இருவரும் சென்னை  மாதா மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, குன்றத்தூர் காவல் நிலையத்தில் இவர்கள் மீது இ.பி.கோ. 428,429 மற்றும் மிருகவதைத்  தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்  பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் படிக்கும் கல்லூரியிலும் புகார் அளித்தோம்.  அந்த நாய் தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது.  பின்காலில் அடிபட்டு இருப்பதால் நாய் நடப்பதில் சிரமம் இருக்கிறது. மற்றபடி நாய் ஆரோக்கியமான நிலையில் இருக்கிறது. நன்றியுள்ள பிராணியான நாய்களை சித்ரவதை செய்வதற்கு எப்படித்தான் மனது வருகிறதோ...? இதுபோல் விலங்குகளை கொடுமைப்படுத்துபவர்களைத்  தண்டிக்க சட்டங்கள் இன்னமும் கடுமையாக்கப்பட வேண்டும்" என்றார்.

கடந்த 2 நாட்களாக பரபரப்பு ஏற்படுத்திய நாய் துன்புறுத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டது, விலங்குகள் நல ஆர்வலர்களின் கோபத்தை தணித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!