Published:Updated:

''டி.சி-யிடம் எதிர்த்துப் பேசுறியா?''

ஹோட்டலில் போலீஸ் களேபரம்

''டி.சி-யிடம் எதிர்த்துப் பேசுறியா?''

ஹோட்டலில் போலீஸ் களேபரம்

Published:Updated:
##~##

சென்னை, தி.நகரில் இருக்கும் 'சாகித்யன்’  மூன்று நட்சத்திர ஹோட்டல். கடந்த 21-ம் தேதி இரவு 11.40 மணிக்கு தி.நகர் துணை கமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீஸார்கள் அதற்குள் நுழைந்து அடிதடியில் ஈடுபடவே பெரும் பிரச்னை வெடித்துள்ளது. 

தடியடியால் பாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையா​ளரின் மகன் ஆதித்யாவிடம் பேசினோம். ''அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் ஹோட்டல் பாரில் கூட்டம் அதிகம் இருந்தது. வாடிக்கையாளர்களை 11 மணிக்கு வெளியே அனுப்பிவிட்டு பணியாளர்கள் பாருக்குள் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள். அப்பாவைப் பார்ப்பதற்காகவும், பார் பணிகளை மேற்பார்வை செய்யவும் அங்கு நான் சென்று இருந்தேன். அப்போது திபுதிபுவென 10-க்கும் மேற்பட்ட போலீஸார் உள்ளே புகுந்தார்கள். 'பார் நேரம் முடிந்துவிட்டது’ என்று சொன்ன பணியாளரைத் தள்ளிவிட்டு உள்ளே புகுந்த போலீஸார் எடுத்த எடுப்பிலேயே, 'டேய், ஒழுங்கா ஸ்டேஷனுக்கு வா... வந்து ஜீப்புல ஏறு’ என்றார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''டி.சி-யிடம் எதிர்த்துப் பேசுறியா?''

என்ன காரணம் என்று கேட்டதும் போலீஸ் எஸ்.ஐ. ஒருவர், 'டி.சி-யிடமே எதிர்த்துப் பேசுறியா?’ என்று கேட்டுக் கொண்டே லத்தியால் என்னை அடித்தார். தொடர்ந்து, டி.சி. திருநாவுக்கரசு, இரண்டு கைகளாலும் லத்தியை பிடித்தபடி என் பின்பக்கத்தில் ஓங்கி விளாசி​னார். வலியால் துடித்துப்போன நான் அவரிடம் திரும்பி, 'ஸ்டேஷனுக்கு கூப்பிட்டீர்கள். வருகிறேன்.பின் ஏன் அடிக்கிறீர்கள்’ என்று கேட்டேன். அதற்கும் லத்தியாலேயே என்னை அடித்தார்கள். தொடர்ந்து ஏழெட்டு போலீஸார்கள் லத்தியால் அடித்துக்கொண்டே என்னை ஜீப்பில் ஏற்றினார்கள்.

''டி.சி-யிடம் எதிர்த்துப் பேசுறியா?''

நான் பொறியியல் படிப்பு முடித்து இருக்கிறேன். இந்த ஆண்டு எம்.பி.ஏ. படிக்க இங்கிலாந்து செல்ல இருக்கிறேன். ஆனால், என்னை ஏதோ கீழ்த்தரமான ரவுடியைப் போல போலீஸார் அடித்து ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று விடிய, விடிய வைத்து இருந்தார்கள். போலீஸாரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக என் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளார்கள்...'' என்றார் பரிதாபமாக.

ஹோட்டல் உரிமையாளரும் ஆதித்யாவின் தந்தையு​​மான விஜயகுமார், ''கடந்த 10 ஆண்டுகளாக

''டி.சி-யிடம் எதிர்த்துப் பேசுறியா?''

இந்த ஹோட்டலை நடத்துகிறேன். சுற்றுவட்டார ஸ்டேஷன்​களில் இருந்து ஹோட்டலுக்கு போன் போட்டுப் பேசும் போலீஸார், 'அதிகாரி வந்து இருக்கிறார்... ரூம் வேண்டும்’ என்று கேட்பார்கள். இலவசமாக ரூம் கொடுக்க முடியாது என்று மறுத்துவிடுவேன். அதேபோன்று அடிக்கடி மாமூல் கேட்டு தொந்தரவு செய்வார்கள். அதற்கும், ஹோட்டலில் வந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்... மாமூல் தரமுடியாது என்று சொல்லி​விடுவேன்.

நான் எதற்காக போலீஸாருக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும். இந்த ஹோட்டல் கௌரவம் மிக்க கார்ப்பரேட் நபர்கள் மற்றும் வெளிநாட்டினர் மட்டுமே வந்து செல்வது. இதன் கணக்கு, வழக்குகள் வெளிப்படையாக, நேர்மையாக இருக்கின்றன. நாங்கள் நீண்டகாலமாக போலீஸாருக்கு இலவசமாக எதுவும் செய்யவில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி செய்துள்ளார்கள்...'' என்றார் கொதிப்புடன்!

இந்த சம்பவம் குறித்து தி.நகர் துணைக் கமிஷனர் திருநாவுக்கரசுவிடம் கேட்டோம். ''சம்பவ நாளைக்கு மூன்று நாட்கள் முன்புதான் வெளியூரில் இருந்து வந்து, நான் அப்பகுதி துணைக் கமிஷனராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். இதனால், எனக்கும் அந்த ஹோட்டல் நிர்வாகத்துக்கும் முன் விரோதம் என்ற வாதம் அடிபட்டு போய்விடுகிறது.

சம்பவத்தன்று, போலீஸ் எஸ்.ஐ. சங்கரன் அப்பகுதியில் ரோந்து சென்றார்.  இரவு 11.30 மணியை தாண்டியும் ஹோட்டலுக்குள் இருந்து பயங்கர இரைச்சலும் ஆடல், பாடல் சத்தமும் ரோட்டுக்குக் கேட்டது.  பாருக்குள் சென்று எஸ்.ஐ. பார்த்த போது நூற்றுக்கணக்கான இளம் பெண்களும் இளைஞர்களும் அருவெறுக்கத்தக்க வகையில் கட்டிப் பிடித்தபடியே சத்தம் போட்டுக் கொண்டு ஆடிக் கொண்டு இருந்தார்கள்.

அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், விதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் அவர்கள் கூத்தடித்துக் கொண்டிருந்ததால், எஸ்.ஐ. சத்தம் போட்டார். ஆனால், ஆதித்யா மற்றும் அவருடன் இருந்த சுமார் 20 பேர் அவரைத் தகாத முறையில் பேசி விரட்டினார்கள். இதைத் தொடர்ந்துதான் நான் போலீஸாருடன் அங்கு செல்ல வேண்டி வந்தது. எங்களையும் உள்ளே விடாமல் கேட்டை மூடிய பணியாளர்கள், உள்ளே கூத்தடித்துக் கொண்டு இருந்தவர்​களை வேறுவழியாக அனுப்பினார்கள். நாங்கள் உள்ளே சென்ற போது, என்னிடம் அந்தப் பையன் முரட்டுத்த​னமாகப் பேசினான். அதனால்தான் அவனை அடிக்க வேண்டியதாகிவிட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப சமயோசி​தமாக செயல்பட்டோம் அவ்வளவுதான்...'' என்றார்.

நள்ளிரவு விவகாரத்தில் முழு உண்மையும் வெளியே வரட்டும்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்

படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism