Published:Updated:

கஞ்சா வழக்கில் கைதானவர் கொலைக் குற்றவாளியா?

கஞ்சா படலத்தின் முதல் தொடக்கம் குடமுருட்டி சேகர்...

கஞ்சா வழக்கில் கைதானவர் கொலைக் குற்றவாளியா?

கஞ்சா படலத்தின் முதல் தொடக்கம் குடமுருட்டி சேகர்...

Published:Updated:
##~##

ஜெயலலிதா ஆட்சி என்றா​லே, வரிசைக்கட்டி வரும் கஞ்சா வழக்குகள்தான் ஞாபகத்​துக்கு வரும். மதுரை ஷெரீனா, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மேல் பாய்ந்த வழக்குகள் அதற்கு உதாரணம். இதோ... மூன்றாவது முறையாக முதல்வர் நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்து உள்ள நிலையில், முதல் போணி.

 திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரான குடமுருட்டி சேகர், காரில் கஞ்சா கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்​கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸார் வட்டாரம் இப்படித்தான் விவரிக்கிறது... ''திருச்சி - கரூர் பை-பாஸ் ரோட்டில் காரில் கஞ்சா, மதுபாட்டில்கள் கடத்தப்​படுவதாக கோட்டை போலீஸா​ருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் சில போலீஸார் கரூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள சோதனைச் சாவடி எண் 7-ல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதிக்க முயன்றனர். காரில் தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் மற்றும் சிலர் இருந்தனர். காரை நிறுத்தியதும், 'என் காரையே தடுத்து நிறுத்துறீங்களா?’ என்றவாறு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  சட்டென்று கத்தியை

கஞ்சா வழக்கில் கைதானவர் கொலைக் குற்றவாளியா?

எடுத்து சப் இன்ஸ்பெக்டர் மணிமாறனின் கழுத்தில் குத்திக் கொல்ல முயன்றார். சுதாரித்துக்கொண்ட மணிமாறன் தடுத்ததால், அவர் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதை அடுத்து குடமுருட்டி சேகரைக் கைது செய்தனர். காரில் இருந்த 1.600 கிலோ  கஞ்சாவும், 15 குவாட்டர் புதுச்சேரி மது பாட்டில்களையும் கைப்பற்றினர். காரில் உடன் வந்த உறவினர் செல்வேந்திரன், டிரைவர் விஸ்வநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மூன்று பேர் மீதும் கொலை முயற்சி உட்பட ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது!'' என்று சொல்கிறார்கள்.

இது குறித்து ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. கைது நடந்த 30-ம் தேதி நள்ளிரவு நேரத்தில், நாம் திருவானைக்கா ஏரியாவில் இருந்தோம். ஆறுக்கும் மேற்பட்ட காவல் துறை வாகனங்கள் புயலாக அந்த ஏரியா வழியாகப் பாய்ந்து சென்றன. என்னவோ விவகாரம் என்பதைப் புரிந்துகொண்டதும், நமக்குத் தெரிந்த காவல் துறை அதிகாரிகளின் மொபைல்களைத் தொடர்பு கொண்டோம். அனைத்து எண்களும் 'சுவிட்ச் ஆஃப்’ என்றே பதில் வந்தது. உடனே வாகனங்கள் சென்ற அதே பாதையில் நாம் பயணப்பட்டோம். வாகனங்கள் ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றபோது, சென்​னைக்கு ரயிலில் சென்று கொண்டு இருந்த குடமுருட்டி சேகரை போலீஸார் கைதுசெய்து அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்தது. சில நிமிடங்களில், காரில் கஞ்சா கடத்த முயன்றதாக அவரை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.  

குடமுருட்டி சேகரும் லேசுபட்ட மனிதர் அல்ல... அமைச்சராக கே.என்.நேரு இருந்தபோது, அவரது பெயரைச் சொல்லி, திருச்சியைக் கிடுகிடுக்கவைத்தவர். இவர் தன் ஆதரவாளர்களுக்காக போலீஸ் ஸ்டேஷன் சென்று கட்டப் பஞ்சாயத்து செய்வது வழக்கம். ஒருமுறை இவர் சொன்னதைச் செய்ய

கஞ்சா வழக்கில் கைதானவர் கொலைக் குற்றவாளியா?

மறுத்த இன்ஸ்பெக்டர் ஒருவரது நெற்றியில் ஆள்காட்டி விரலைவைத்து, துப்பாக்கியால் 'சுட்டுவிடுவேன்’ என்பதுபோல் மிரட்டியதாக போலீஸ் வட்டாரத்தில் இன்றும் சொல்வார்கள்.

ஜீயபுரம் பகுதியில் உட்கட்சித் தகராறில் கட்சிக்காரர் ஒருவரது காரை, சேகரின் தம்பி குடமுருட்டி ஆறுமுகம் மற்றும் அவரது கோஷ்டியினர் அடித்து நொறுக்கியதாக போலீஸ் ஸ்டேஷன் வரையில் புகார் சென்றது. இறுதியில் தி.மு.க. மேல்மட்ட சிபாரிசு காரணமாக, பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டது.

இரவு நேரத்தில், ஆங்கிலப் பத்திரிகை அலுவலகம் ஒன்றின் வாசலில் நின்று கொண்டு 'நம்பர் ஒன்’ அடித்த  இவரது தம்பி ஆறுமுகத்தை, அலுவலக ஊழியர்கள் தட்டிக்கேட்க... ''என்னையே கேள்விக் கேட்கிறீங்களா?'' என்று அலுவலகத்தில் நுழைந்து அதகளம் பண்ணியதாகக் குற்றசாட்டு உண்டு.

கஞ்சா வழக்கில் கைதானவர் கொலைக் குற்றவாளியா?

'எனக்கு இந்த திருச்சியே பாத்ரூம்தான்’ என்று பிரகடனம் செய்ததாகவும் சொல்வார்கள். விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரையில் போக... அங்கு வந்த குடமுருட்டி சேகர் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தாராம். பின்னர் அந்த விவகாரம் சாதாரண வழக்காக முடிந்தது.

குடமுருட்டி சேகர் ஆரம்ப காலத்தில் மாட்டு வண்டிகளுக்கு ஸீட் ஒட்டும் வேலையைப் பார்த்து வந்தார். பின்னர் மலைக்கோட்டை வாசலில் செருப்பு பாதுகாக்கும் கான்ட்ராக்ட், மாநகராட்சிக் கட்டணக் கழிப்பறை கான்ட்ராக்ட் எடுத்து முன்னேறினார். தி.மு.க. மேல்மட்டப் பிரமுகர்களுக்கு நெருக்கம் என்ற கோதாவில், கட்டப்​பஞ்சாயத்து, நிலம் அபகரித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக இவர் மீது கோட்டை, ஜீயபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில் அடுக்கடுக்கான புகார்கள் வந்தும், அரசியல் செல்வாக்குக் காரணமாக அந்தப் புகார்கள் கிடப்பில் போடப்பட்டன.

திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான துரைராஜ், அவரது டிரைவரும் வையம் பட்டி அருகே காரில் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் அவரது சகோதரர் தங்கவேல் விஷம் குடித்த நிலையில் இறந்துகிடந்த வழக்கு இரண்டையும் விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார், அந்தக் கொலைகளில் குடமுருட்டி சேகருக்கு தொடர்பு இருக்கலாம் என பலமாக சந்தேகப்படுகின்றனர். கொலை நடந்த நாளில், கொலை நடந்த ஏரியாவைச் சுற்றி குடமுருட்டி சேகரின் நடமாட்டம் இருந்த தாக, அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் கண்டுபிடித்ததாகவும் சொல்கிறார்கள்.  அதனால் சேகரையும், அவரது சகோதரர்களையும் பலமுறை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தனர்.

குடமுருட்டி சேகரைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாம் கட்சித் தலைவரான கருணாநிதி அறியாதது அல்ல. அறிவாலயத்தில் நடந்த திருச்சி மாவட்ட நிர்வாகி கள் கூட்டத்தில், ''மாவட்டச் செயலாளர் நேருவுக்கு நெருக்கம் என்பதை வைத்துக்கொண்டு அவர் செய்யும் காரியங்கள் கட்சிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை!'' என்று பகிரங்கமாகவே கண்டித்தார்.

தி.மு.க. மாவட்டச் செயலாளரான கே.என்.நேருவிடம் குடமுருட்டி கைதுபற்றி கேட்டபோது, ''எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கைக்கும் இடம் கொடுக்காமல், தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்வதாக அந்த அம்மையார் சொன்னார். ஆனால், சேகர் மீது

கஞ்சா கேஸ் போட்டு சிறையில் போட்டதன் மூலம் பழி வாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டார். அன்றைய தினம் தனது மகனை லயோலா கல்லூரியில் சேர்ப்பதற்காக ரயிலில் புறப்பட்டார். அவரை ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனில் வழிமறித்த போலீஸார், 'உங்களை ஒரு விசாரணை தொடர்பாக அழைத்துச் செல்கிறோம்’ என்று சொல்லி அழைத்து இருக்கிறார்கள். அவர் பயணம் செய்த டிக்கெட்டையும் வாங்கி வைத்துக்கொண்டனர். வெளியே வந்த பின்னர்தான் கூட்டமாக போலீஸார் இருப்பதைப் பார்த்து, ஏதோ வில்லங்கமாக நடக்கிறது என்பது சேகருக்குப் புரிந்து இருக்கிறது. இன்னொரு கோச்சில் பயணம் செய்த சேகரின் டிரைவரையும் அழைத்து வந்தவர்கள், சேகரின் வீட்டுக்குச் சென்று அவரது காரையும் எடுத்து வந்திருக்கிறார்கள். அதனைத் தடுத்த சேகரின் மச்சினன் செல்வேந்திரனைப் பிடித்து வந்து, மூவர் மீதும் ஜோடனையாக வழக்குப் பதிவு செய்துவிட்டனர். எதற்காக இப்படிப் பொய் வழக்கு தொடர்ந்தார்கள் என்பதுதான் புரியவில்லை. எல்லாவற்றையும் சட்டப்படி சந்திப்போம்!'' என்றார்.

'கைதுக்குக் காரணமே, துரைராஜ் கொலை வழக்குத் தொடர்பான முக்கிய வாக்குமூலம் வாங்குவதற்காகவே’ என்று விவரமானவர்கள் சொல்கிறார்கள். ''துரைராஜ் கொலை வழக்குத் தொடர்பாக குடமுருட்டி சேகரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் திரும்பத் திரும்ப விசாரிக்கக் காரணம்... கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தைத் தொடர்புபடுத்தி வாக்குமூலம் வாங்குவதற்காகத்தான். இதுவரை குடமுருட்டி சேகர் அதற்குப் பிடிகொடுக்கவில்லை. கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கைதானதால் அவ்வளவு எளிதாக ஜாமீனில் வெளியே வர முடியாது. எனவே, சிறைக்குள் வைத்தே சேகரிடம் வாக்குமூலம் வாங்கும் வேலைகள் நடக்கும். அவரையும் அவருக்குப் பின்னால் இருப்பவர்களையும் வசமாக சட்டத்தில் சிக்க வைக்கும் வேலைகளை நுணுக்கமாக வகுத்துக் கொண்டிருக்கிறது போலீஸ். உரிய வாக்குமூலத்தைக்  கொடுக்க குடமுருட்டி சேகர் ஒத்துழைப்பு தராவிட்டால் அடுக்கடுக்காக பல வழக்குகள் அவர் மீது பாயும்!'' என்கிறார்கள்.

அடுத்த இலக்கு - நேருவின் தம்பி ராமஜெயமாக இருக்கலாம் என்கிறது திருச்சி போலீஸ்!

- ஆர்.லோகநாதன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

''கைது செய்ய ஆதாரம் இருக்கா?''

கைது நடந்த 30-ம் தேதி காலை கே.என்.நேருவின் அலுவலகத்துக்குச் சென்றிருந்த நாம், அங்கு வந்திருந்த குடமுருட்டி சேகரிடம் சில நிமிடங்கள் தனியாக பேசினோம். துரைராஜ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக பேச்சு வந்தபோது, ''அந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் கம்பரசம்பேட்டைக்கு ஒருமுறை பிளான் அப்ரூவல் தொடர்பா துரைராஜ் வந்திருக்கார். அவ்வளவுதான். அவர் கொலை நடந்த அன்று, வையம்பட்டி ஏரியாவில் என்னோட செல்போன் சிக்னல் காட்டினதா சொல்லி சி.பி.சி.ஐ.டி. போலீஸ்காரங்க விசாரிக்கிறாங்க. வருஷா வருஷம் என் மனைவி பழநிக்கு பாத யாத்திரை போறது வழக்கம். நானும் சில சமயம் போவேன். யாத்திரை போறவங்களுக்கு நானே சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து, என் மேற்பார்வையில் சமையல் செஞ்சு போடுவேன். அதுக்காகத்தான் நான் அன்றைய தினம் திண்டுக்கல் ரோடு வழியாக போனேன். வரும்போது துரைராஜ் கார் எரிஞ்ச நிலையில இருந்ததையும் பார்த்தேன். இதை சி.பி.சி.ஐ.டி-யோட விசாரணையில் தெளிவா சொன்ன பிறகும் திரும்பத் திரும்ப கூப்பிட்டு விசாரிக்கிறாங்க.

காலையில விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி வரச் சொல்லுவாங்க. போய் நின்னா... மதியம் வரைக்கும் காக்கவெச்சு, சாப்பிட்டு வரச் சொல்வாங்க. போயிட்டு வந்தா... சாயந்திரமா டீ குடிச்சுட்டு வரச் சொல்வாங்க. அப்புறமா இருட்டுற நேரத்துல போயிட்டு நாளைக்கு வாங்கன்னு சொல்வாங்க. நானும் ஸ்கூல் பிள்ளை கணக்கா எத்தனை நாளைக்குதாங்க சும்மா சும்மா போயிட்டு வர்றது?'' என்று அலுத்துக்கொண்டவர், ''இதுக்குப் பதிலா என்னை அரெஸ்ட் பண்ணி உள்ளே வைச்சுட்டாகூட நிம்மதியா இருந்துடுவேன். ஆனா, அதுக்கான ஆதாரம் அவங்ககிட்ட இருக்கணுமே?'' என்று கேள்வி எழுப்பினார்.

அன்று இரவே 'கஞ்சா’ ஆதாரத்தைக் கண்டுபிடித்துவிட்டது போலீஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism