Published:Updated:

மரியம்பிச்சை மரணத்தில் தீராத சில மர்மங்கள்!

இடைத்தேர்தல் காரணமா?

மரியம்பிச்சை மரணத்தில் தீராத சில மர்மங்கள்!

இடைத்தேர்தல் காரணமா?

Published:Updated:
##~##

மைச்சர் மரியம்பிச்சை மரணத்தில்,காரை ஓட்டிய ஆனந்தன் மற்றும் விபத்து நடந்த பிறகும் நிற்காமல் சென்ற லாரியின் மீதும்தான் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சந்தேகப்பட்டது. லாரியைப் பற்றிய தகவலை ஆனந்தன் சரியாக சொல்லாத காரணத்தால், சந்தேகக் கண்ணோடு பார்த்தனர். ஒரு வேளை மரியம்பிச்சை மரணம், கொலையாக இருக்கும் பட்சத்தில், ஆனந்தனுக்கும் பங்கு இருக்கும் என்ற கோணத்திலேயே விசாரித்தனர். ''அமைச்சர் என்னிடம், 'பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சரியான நேரத்துக்குப் போகவேண்டும். பகல் 11 மணிக்குள் சென்னையைச் சென்றடைய வேண்டும்’ என்று சொன்னதால், வேகமாகக் கார் ஓட்டினேன். அமைச்சர் அருகில் இருந்ததால், சற்று பதற்றமாகவும் இருந்தது. லாரியை ஓவர்டேக் செய்ய முயன்றபோது, அந்த லாரி வலது பக்கம் திடீரென திரும்பியது. பிரேக் போட்டும் கார் நிற்காமல், லாரியின் வலது பக்கம் மோதிவிட்டது!'' என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னார். அதனால் இந்த விவகாரத்தில் மேற் கொண்டு செல்லமுடியவில்லை. 

இந்நிலையில் லாரி பிடிபட்டது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார், ''விபத்து நடந்த இடத்துக்கு முன்னதாக சமயபுரத்தில் ஒரு டோல்கேட்டும், விபத்து நடந்த இடத்தைத் தாண்டி திருமாந்துறையில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரியம்பிச்சை மரணத்தில் தீராத சில மர்மங்கள்!

ஒரு டோல்கேட்டும் உள்ளன. அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து 8.30 மணி வரையில் 800 லாரிகள் கடந்து சென்றது தெரிய வந்தது. அதில் 124 லாரிகள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவை. ஆந்திரா அல்லது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு லாரி கறுப்பு தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்தது என்று பார்த்தவர்கள் சொல்ல... அந்த லாரிகளை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்தோம். அதில் நான்கு லாரிகள் கேரளாவையும் எட்டு லாரிகள் ஆந்திராவையும் சேர்ந்தவை. அந்த நம்பர்களை வைத்து முகவரியைக் கண்டுபிடித்து, அந்தந்த மாநிலங்களில் விசாரணையை முடுக்கினோம்.

ஆந்திரப் பதிவு எண் கொண்ட ஒரு லாரி, விஜயவாடா அருகேயுள்ள தாடிகடப்பா என்ற ஊரைச் சேர்ந்த ஷேக் இமாம் சாகிப் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிய வர... அந்த முகவரியில் விசாரித்தோம். அப்போது, லாரி அஸ்ஸாம் போய்விட்டதாகச் சொன்னார்கள். அந்த லாரியை ஓட்டிய டிரைவர் ரஹமத்துல்லாவை ஆந்திர போலீஸின் உதவியோடு கிருஷ்ணா மாவட்டம் கனியாத்தூர் என்ற கிராமத்தில் மடக்கினோம். அவரும் உடனடியாக உண்மையை ஒப்புக்கொண்டார். அஸ்ஸாம் சென்ற லாரியை மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் அருகே, கடக்பூர் என்ற ஊரில் எங்கள் டீம் மடக்கிப் பிடித்தது. அதனை சென்னைக்கு கொண்டு வருகிறோம்!'' என்று சொன்னார்கள்.

சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட டிரைவர் ரஹமத்துல்லா, ''லாரியின் உரிமையாளர் எனது அக்கா கணவர்தான். நானும் அவரும் மாறி, மாறி லாரியை ஓட்டுவோம். 22-ம் தேதி இரவு 8 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஜிப்சத்தை ஏற்றிக்கொண்டு லாரியில் புறப்பட்டேன். அதனை கடப்பா அருகேயுள்ள கம்பல்மடுகு என்ற இடத்தில் அமைந்திருக்கும் டால்மியா சிமென்ட் கம்பெனியில் இறக்க வேண்டும். 23-ம் தேதி அதிகாலை திருச்சியில் சற்றுநேரம் ஓய்வெடுத்துவிட்டுப் புறப்பட்டேன். சமயபுரம் டோல்கேட்டைத் தாண்டிய நேரத்தில் என்னுடைய லாரிக்கு முன்புறமாக சென்ற லாரியை முந்திச் செல்வதற்காக என்னுடைய லாரியை வலதுபுறம் திருப்பினேன். அப்போது என்னுடைய லாரியின் பின்புறம் ஏதோ இடிப்பதுபோல பயங்கர சத்தம். சற்றுதூரம் சென்றதும் லாரியை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தேன். ஒரு கார் என்னுடைய லாரியில் இடித்திருப்பது தெரிய வந்தது. கூட்டமாக இருந்தது. என்னுடைய லாரியில் இன்டிகேட்டர் மட்டுமே சேதமடைந்து இருந்தது.

அதனால் பெரிய விபத்தாக இருக்காது என நினைத்து தொடர்ந்து சென்றேன். அடுத்து வந்த சோதனைச் சாவடியில் யாரும் எனது லாரியை நிறுத்த வில்லை. அதனால் பெரிய விபத்து இல்லை என்று நினைத்துவிட்டேன். உளுந்தூர்பேட்டை வழியாக சேலம்- ஆத்தூர் சென்று சித்தூர் ரூட் பிடித்து டால்மியா சிமென்ட் பேக்டரியில் சரக்கை டெலிவரி செய்தேன். லாரியில் சேதமான இன்டிகேட்டரை கழற்றிவிட்டு புதிதாக வாங்கி மாட்டினேன். எனது அக்கா கணவர் வீட்டுக்குச் சென்று லாரியை ஒப்படைத்தேன். அவரிடம் விபத்துப் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. கிரானைட் பவுடரை ஏற்றிக்கொண்டு அஸ்ஸாம் செல்ல வேண்டி இருந்ததால், அவரும் உடனடி யாக புறப்பட்டுவிட்டார். நானும் எனது சொந்த ஊருக்கு வந்துவிட்டேன்.

மறுநாள் டி.வி-யில் செய்தி பார்த்தபோதுதான், எனது லாரியின் பின்பக்கம் மோதியது அமைச்சரின் கார் என்றும் அதில் அமைச்சர் மரணமடைந்து விட்டார் என்பதும் தெரிய வந்தது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனது மனைவியிடம் கூட சொல்லவில்லை. இந்நிலையில் போலீஸார் என்னைத் தேடி சொந்த ஊருக்கே வந்ததும், மறைக்காமல் உண்மையைச் சொல்லிவிட்டேன்!'' என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறாராம்.

அமைச்சர் மரியம்பிச்சையின் அகால மரணத்துக்குக் காரணமான லாரியைப் பற்றிய மர்மத்துக்கு விடை கிடைத்துவிட்டது. ஆனால், அமைச்சரின் காரைத் தொடர்ந்து எஸ்கார்டு போலீஸார் வராதது ஏன்? லாரியைப் பற்றி உடனடியாக தகவல் தெரிவித்து மடக்கி பிடிக்காதது ஏன்? போன்ற கேள்விகள் இன்னமும் மர்மமாகவே இருக்கின்றன. இன்னொருபுறம், இங்கு இடைத்தேர்தல் நடந்து முடியும்வரை இந்த விவகாரத்தின் சூடு குறைந்துவிடாமல் அ.தி.மு.க. பார்த்துக்கொள்ளும் என்றும் சொல்கிறார்கள்.

'மரணம்'கூட அரசியலில் சில சமயம் மூலதனம் தானே..?!

- ஆர்.லோகநாதன்

படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism