Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கணவர் இறந்தார்...குழந்தையோடு கால்வாயில் குதித்த தாய்:எண்ணூர் சோகம்!

ற்கொலை எண்ணம் கொண்டவர் காதுகளில், " நீ இனி வாழ்வதில் அர்த்தமே இல்லை... ஆமாம், அர்த்தமே இல்லை... நீ, தற்கொலை செய்து கொள்வதுதான் ஒரே தீர்வு ! உடனே ஏதாவது செய், சீக்கிரம் செய்... செய்... " என்ற வார்த்தைகள், காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த வியாதிக்கு ‘ஹாலுசினேசன்’ (Hallucination) என்றும் பெயர் வைத்துள்ளனர். தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றால், தற்கொலை எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விடலாம்.

பூமிப்பந்தில் வாழ்கிற உயிரினங்களில் ஆறறிவு கொண்டவன், மனிதன் தான். பகுத்தறிவு பேசுவதும், இறை நம்பிக்கை கொள்வதும், கொள்ளையடித்து வாழ்வதும், கர்ணனாகவும், கருமியாகவும் உலாவருவதும் அவரவர் எண்ணத்தின் வெளிப்பாடுதான்.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்தவர். மீண்டும் அவரால் சினிமாவில் ஜொலிக்க முடியாது போனாலும் அவர் துவண்டு விடவில்லை. நடிகர்களுக்கான ஆடை அணிகலன், மேக்கப் மற்றும் ஏற்றுமதி வணிகம் என்று தன்னுடைய பயணத்தை வேறு பாதையில், முன்பை விட வேகமாக செலுத்த ஆரம்பித்து விட்டார்.

ஸ்டார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கான்சரால் தாக்குண்ட பின்னரும் அந்த நோயைக் கடந்து வென்றார். மீண்டும் வந்தார். முன்பை விட அதிக எனர்ஜியுடன் பந்துகளை மைதானத்துக்கு வெளியே தூக்கி அடித்தார்.

இந்தியிலும், தமிழிலும் ஒரே நேரத்தில் கலக்கிய பிரபல நடிகை மனீஷா கொய்ராலாவும் கான்சரில் இருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டவரே.

இப்படி வாழ்க்கையில் பலர் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி வந்தவர்களே. சோர்ந்து, தோற்று நின்றவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தோல்வியை துரத்தி வென்ற வெற்றியாளர்களை பின்பற்றினால் தற்கொலை எண்ணங்களை தூக்கி எறிந்து வெற்றி காணலாம். 

ஒரு தாய், தன் குழந்தையுடன் இன்று மேற்கொண்ட தற்கொலை முயற்சியில் குழந்தை மட்டும் பரிதாபமாக இறக்க, தாய் மயக்க நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை அயன்புரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விஜய், கடந்த 23-ம் தேதி  திடீர் மயக்கம் காரணமாக அரசு ராஜீவ்காந்தி பொதுமருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார். அவருடன் மருத்துவமனையில் மனைவி பத்மபிரியாவும், ஐந்து வயது குழந்தை தருணும் இருந்துள்ளனர்.

நேற்று முன்தினம் விஜய் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் உடல் அயன்புரத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப் பட்டது.

அவரது இறுதிச் சடங்குகள் நேற்று (31.8.2016) அயன்புரம் இடுகாட்டில் நடந்து முடிந்து விட்டது. குழந்தை தருணுடன் , இன்று காலை, வீட்டிலிருந்து வெளியே வந்த பத்மபிரியா, அயன்புரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எண்ணூர் சென்றுள்ளார்.
எண்ணூரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் மேற்பாலத்தில் நின்றபடி குழந்தை தருணை கால்வாயில் வீசிவிட்டு பத்மபிரியாவும் அதில் குதித்தார். 

பத்மபிரியா, கால்வாயில் குதிப்பதைப் பார்த்த பொதுமக்களில் சிலர் கால்வாயில் குதித்து, அவரை மீட்டனர். பின்னர், அவரை ஆம்புலன்சில் ஏற்றி அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கால்வாயின் சேற்றுப் பகுதியில் குழந்தை தருணின், தலை மோதிக் கொண்டதால் தருணை உயிரோடு மீட்க முடியவில்லை.குழந்தை உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்று கேட்கும் நிலைக்கு பத்மபிரியாவுக்கு இன்னும் நினைவுதிரும்பவில்லை. 

நம்முடைய தற்கொலை முயற்சியில் இன்னொரு உயிரையும் சேர்த்துக் கொள்வதென்பது, நாம் செய்யும் பெரும் துரோகம். இதய நோயைப் பின்தள்ளிவிட்டு, 2020-ம் ஆண்டுகளின் துவக்கத்தில் முதலிடத்துக்கு வரப்போவது மன அழுத்த நோய்தான் என்று உலகச் சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு, அச்சமூட்டுவதாக உள்ளது.


பத்மபிரியா போன்ற அபலைகளின் வாழ்வில் வசந்தம் வீச அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- ந.பா.சேதுராமன் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement