Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாதிகளும் சோனாலிகளும் காப்பாற்றப் பட வேண்டாமா?

                                                                                         

 

 

சுவாதியின் ரத்தக்கறை சமுதாயத்தில் மறைவதற்குள் அடுத்தடுத்து பெண்களின் ரத்தத்தால் இந்த மண் கறை பட்டுகொண்டேயிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது சுற்றி இருப்பவர்கள் தடுக்கும் மனநிலையில்கூட இல்லாமல் உணர்ச்சிகளற்ற களிமண்ணாய் மாறிவிடுவதற்கு என்ன காரணம்? மாணவ சக்தி, எதையும் சாதிக்கும் சக்தியாக நினைக்கும் சமுதாயத்தில், மாணவர்கள் கூடியிருந்த கல்லூரியில் ஒரு பெண் அடித்துக்கொள்ளப்பட்ட போது, மற்ற மாணவர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தது ஏன்? என்று நமக்குள் எழும் பல சந்தேகங்களுக்கு தன் பார்வையை முன் வைக்கிறார் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த திவ்யா...

"இதுவரை எத்தனையோ சம்பவங்கள் இதுபோன்று நிகழ்ந்துவிட்டது. ஒவ்வொரு சூழலிலும் பலியானவர்களின் உடன் இருந்தவர்கள், தாக்க வந்தவரிடம் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் கைகட்டி வேடிக்கை பார்த்தது, பல உயிர்ப் பலிக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கு. எல்லாரும் ஒன்றுகூடி செயல்பட்டு இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என சம்பவம் நடந்தபிறகுதான் பேசுகிறார்களே தவிர, நடக்கும்போது யாரும் செயல்படாமல் அமைதியாய் வேடிக்கை பார்த்து, தங்களின் ஒரு நிமிட தயக்கத்திற்கு ஒரு உயிரை விலையாக்கி விடுகிறார்கள்.

 

தாக்கப்படுவது நம் அம்மாவாகவோ, தங்கையாகவோ இருந்தால், இப்படி கைகட்டி பார்த்துக்கொண்டு இருந்திருப்போமா? காப்பாற்ற முயற்சி எடுக்காததற்கு காரணம் பயம் மட்டும்தான் என நான் நினைக்கவில்லை. இயந்திரமாக்கப்பட்டது உலகம் மட்டும் இல்லை, நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட மனித மனமும்தான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஊரில் வாழும் அனைவரையும் சாதி மத வேறுபாடு இல்லாமல், ஒருவரை ஒருவர் உறவுமுறை வைத்துக்கூப்பிடும் வழக்கம் இருந்தது. அவர்களுக்கு ஒரு அசம்பாவிதம் நிகழும்போது, நம் சொந்தம் என்ற நினைப்பில் நம்மை அறியாமலே அவர்களைக் காப்பாற்றுவார்கள். ஆனால் நாகரிகம் என்ற பெயரில் அந்தப் பழக்கம் புதைக்கப்பட்டு உணர்வுகளும் அழிக்கப்பட்டது. அதுதான் யாருக்கோ நடக்கிற பிரச்னைக்கு நான் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும் என சுயநலமாக யோசிக்க வைக்கிறது.

பொதுவாக நாம் ஓடி, ஆடி விளையாடும்போது நம் உடல் பலம் நமக்கு ஓரளவேனும் தெரியும். மேலும் உடலும் மூளையும் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கும். ஆனால் இன்று மொபைலே உலகம் என்று ஆனதால் நம்  உடல் வலிமை நமக்கே தெரிவது இல்லை, அதனால் எதிரில் இருப்பவர் தன்னை விட வலிமையானவர், அதனால் அவர் தன்னைத்  தாக்ககூடும், அவரை எதிர்க்க தன்னால் முடியாது என்ற பயமும் சைகாலஜிகலாக ஏற்படுவது இயல்பு.

முன்பு எல்லாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு காலதாமதமாக நிறுவனத்திற்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ சென்றால் நிச்சயம் நம் மனிதநேயத்திற்கான பாராட்டு கிடைத்தது. ஆனால் இன்று நாம் உதவி செய்தால்கூட, உன் வேலையை நீ பார் என்று சொல்லும் அளவுக்கு, மனித நேயம் மறக்கப்பட்ட சூழல் வந்துவிட்டது. எந்த ஒரு பிரச்சணையிலும் ஏன்? ஏதற்கு? என்று கேள்வி கேட்பவர்களையும், போராட்டங்கள் நடத்துபவர்களையும் இந்தச் சமுதாயத்தாலும், அரசியல்வாதிகளாலும் தீவிரவாதிகளாகதான் பார்க்கிறார்கள். சாதரணமாக எந்தப் பெண்ணுக்கு எந்தச் சம்பவம் நடந்தாலும், அதன் அரசியல் பின்னணிகளை மூடி மறைக்க காதல் என்று காரணம் காட்டி, தட்டிக் கேட்க நினைக்கும் மக்களின் மனதையும் கட்டிப்போட்டு விடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களில் நாம் என்ன தவறு செய்தோம் அல்லது செயல்படாமல் இருந்தோம் எனப் பாடம் கற்றுக்கொள்வதே சரியானதாக இருக்கும்.

காதல் என்பதை உறவு என்று பார்க்காமல் உணர்வு என்று பார்த்தாலே எத்தனையோ சுவாதிகளும், சோனாலிகளும் காப்பாற்றப்படுவார்கள்".

 

 

 சு.சூர்யா கோமதி. வீடியோ-:நந்தக்குமார்
 
                                                                                                                                                                                                                              

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement