Published:Updated:

அண்ணா சமாதியில் அடிதடி அஞ்சலி!

அண்ணா சமாதியில் அடிதடி அஞ்சலி!

அண்ணா சமாதியில் அடிதடி அஞ்சலி!

அண்ணா சமாதியில் அடிதடி அஞ்சலி!

Published:Updated:
அண்ணா சமாதியில் அடிதடி அஞ்சலி!
##~##

'அண்ணா வழியில் அயராது உழைப்போம்! கண்ணியமாய் அண்ணல் சொன்னதை செய்வோம்! - பட்டி தொட்டி எங்கும் தி.மு.க. மேடைகளில் ஒலிக்கும்  பாடல் இது. அந்த உடன்பிறப்புகள்தான் அண்ணா சமாதியில் கடந்த 3-ம் தேதி சட்டையைப் பிடித்துக்கொண்டு 'கண்ணிய’த்தைக் காப்பாற்றினார்கள்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை நமது புகைப்படக்காரர் க்ளிக் செய்துகொண்டே இருந்தார். அப்போதும், கொஞ்சமும் கூச்சமோ தயக்கமோ இல்லாமல்,  சண்டை போட்டார்கள்!

தனது பிறந்த நாளை முன்னிட்டு கருணாநிதி, அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார். அவருக்கு முன்னதாக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் வந்து காத்திருந்தார். இதைத் தொடர்ந்து ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் வந்தனர். அவர்களுடன் கு.க.செல்வம் வந்தார். செல்வத்துக்கும் ஜெ.அன்பழகனுக்கும் எப்போதும் ஆகாது. 'கருணாநிதி மலர் வளையம் வைக்கும்போது, அருகில் செல்வம் இருந்து போட்டோவில் அவரும் இடம் பிடித்துவிட்டால், அவர் முக்கியமானவர் ஆகிவிடுவாரே!’ என்று நினைத்து பதற்றம் ஆனாராம் ஜெ.அன்பழகன். இடம் பிடிப்பதற்காக செல்வம் முன்னேற, அவரது முதுகில் லேசாக ஒரு கை பட்டது. தன்னை யாரோ அடிக்கிறார்கள் என்பதை உணர்ந்தவராக செல்வம் திரும்ப.... அங்கு கோபக் கண்களுடன் ஜெ.அன்பழகன் நின்றார். உடனே செல்வமும் ரியாக்ஷன் காட்டிக் கத்த ஆரம்பித்தார்.

அண்ணா சமாதியில் அடிதடி அஞ்சலி!

ஜெ.அன்பழகனை அவர் அடிக்கப் பாய.... சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்ளே புகுந்து தனது கனத்த உருவத்தால் செல்வத்தின் கைகளைப் பற்றிக் கொள்ள ரசாபாசம் தொடர்ந்தது!

பின்னால் வந்துகொண்டு இருந்த ஸ்டாலின் இதைத் தடுக்கப் பார்த்தார். அருகில் இருந்த பேராசிரியர் அன்பழகன், சாந்தப்படுத்த முயற்சித்தார். அதற்குள் கருணாநிதியும் வந்து சேர, கறுப்புப் பூனைப் படை வீரர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. யார் எதற்குக் கத்துகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. கருணாநிதியைப் பாதுகாக்க ஆரம்பித்தார்கள். அதற்குள், பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், சற்குணபாண்டியன் ஆகிய மூவரும் இந்த இருவரையும் கண்டிக்க ஆரம்பித்தனர். பொன்முடியும் நேருவும் 'எதுக்கடா வம்பு?’ என்று ஒதுங்கினர்.

அப்போது செல்வத்தைப் பார்த்து, 'யோவ் தள்ளி நில்லு’ என்று மீண்டும் சொன்னார் ஜெ.அன்பழகன். 'நான் எதுக்குப் போகணும்?’ என்று செல்வம் பதில் கொடுத்தார். 'தலைவர் வரும்போது, அவர் நிற்கிற இடத்தில் நிற்காதே’ என்று ஒரு குரல் வந்தது. 'நான் நிற்கக் கூடாதுனு சொல்ல நீங்கள் எல்லாம் தலைவர்கள் இல்லை...’ என்றார் செல்வம். 'தலைவர் முன்னாடியே இப்படி அசிங்கமாக நடக்கிறீங்களே?’ என்று சத்தம் போட்டார் பேராசிரியர் அன்பழகன். இவ்வளவு நடந்தும், கருணாநிதி பின்னால்தான் இருந்தார். ஸ்டாலின் இவர்களுக்கு அருகில் வந்த பிறகுதான் இருவரும் அமைதி ஆனார்கள்.

கருணாநிதி மலர்வளையம் வைத்தபோது ஜெ.அன்பழகனும் செல்வமும் இரண்டு பக்கமும் நின்றனர். இது எதுவுமே தெரியாதது மாதிரி மலர்வளையம் வைத்து விட்டுக் கிளம்பினார் கருணாநிதி!

தி.மு.க. புள்ளிகளிடம் பேசினோம். ''தி.நகர் பகுதியில்தான் செல்வத்துக்கு வீடு. அதே பகுதியில் இருந்த ஜெ.அன்பழகனுக்கு, அ.தி.மு.க-வில் இருந்து வந்த செல்வத்தின் வருகை பிடிக்கவில்லை. கட்சித் தேர்தலின் போது, வசதி படைத்த செல்வம் தனது ஆட்களைப் போட்டியிடவைத்தார். அவர்களை ஜெ.அன்பழகன் தரப்பு தோற்கடித்தது. ஆனாலும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு செல்வம் குறிவைத்துக் கோதாவில் குதித்தார். அப்போது தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த கிட்டு வழிவிட... ஜெ.அன்பழகன் அந்தப் பதவியில் உட்கார்ந்தார். செல்வத்துக்கு தலைமை செயற்குழு பதவி கொடுத்தார் தலைவர். இதன் பிறகு இரண்டு பேருக்கும் பனிப் போர்தான்...'' என்கின்றனர்.

அண்ணா சமாதியில் நடந்த விஷயத்தை வேறு கோணத்தில் சொல்கிறார்கள் இன்னொரு தரப்பினர். ''தலைவர் வந்தபோது, அவருக்காக வசதி ஏற்படுத்தித் தர ஜெ.அன்பழகன் முயன்றார். செல்வமும் அதற்கான முயற்சிகள் எடுத்தார். கூட்டத்தில் எப்படியோ அன்பழகனின் பேன்ட் மீது செல்வத்தின் கை பட்டுவிட்டது. இதில் அன்பழனின் பேன்ட் கழன்றுபோக, கோபத்தில் செல்வத்திடம் சண்டை போட்டார். மற்றபடி, கைகலப்பு எதுவும் நடக்கவில்லை. ஜெ.அன்பழகன் கல்லீரல் ஆபரேஷன் செய்துகொண்டவர். அப்படிப்பட்டவர் எப்படி சண்டை போடுவார்?'' என்றார்கள்.

செல்வத்திடம் பேசியபோது ''இது சின்ன விஷயம்... இட நெருக்கடி காரணமா, தெரியாமல் தள்ளப்பட்டேன். அவ்வளவுதான். எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை!'' என்று மட்டும் சொன்னார்.

இந்தப் படங்களைப் பாருங்கள்... அது சண்டையா இல்லையா எனப் புரியும்!

- எம்.பரக்கத் அலி, படங்கள்: என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism