Published:Updated:

நர்ஸுகள் அறையில் அடைப்பு; போலீஸ் மீது தாக்குதல்! - கேரள மனநலக் காப்பகத்திலிருந்து தப்பிய 7 பேர்

இரண்டு நர்ஸ்களைத் தாக்கி அறையில் பூட்டி வைத்துள்ளனர். சத்தம் கேட்டு அங்கு சென்ற போலீஸைத் தாக்கி அவரிடம் இருந்த சாவியைப் பயன்படுத்தி தப்பிவிட்டனர்.

Representational Image
Representational Image ( Pixabay )

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மனநலக் காப்பகத்திலிருந்து நேற்று இரவு ஆறு கைதிகள், ஒரு மன நோயாளி என ஏழுபேர் தப்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலக் காப்பகத்தில் இரவு உணவுக்காக செல்லில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களைத் திறந்து விடுவது வழக்கம். நேற்று இரவு 7.50 மணியளவில் இரவு உணவு சாப்பிடுவதற்காக செல்லிலிருந்து நோயாளிகளைப் பணியாளர்கள் வெளியே திறந்து விட்டுள்ளனர்.

7 பேர் தப்பியது குறித்து விவரிக்கும் மனநலக் காப்பக ஊழியர்
7 பேர் தப்பியது குறித்து விவரிக்கும் மனநலக் காப்பக ஊழியர்

அதில், சிறைத் தண்டனை பெற்று போலீஸ் பாதுகாப்போடு மனநலக் காப்பகத்தில் இருந்த தன்சீர், விஜயன், நிகில், விஷ்ணு, விபின், ஜினீஸ் ஆகியோரும், மன நோயாளி ராகுல் ஆகியோரும் தனி அணியாகச் சேர்ந்துள்ளனர். பின்னர் அவர்கள், இரண்டு நர்ஸுகளைத் தாக்கி ஒரு அறைக்குள் பூட்டி வைத்துள்ளனர். நர்ஸுகள் சத்தம் போட்டதால் அதைக் கேட்டுப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் ரஞ்சித் அங்கு சென்றிருக்கிறார்.

Vikatan

ஏழுபேர் தப்பிச் செல்ல முயன்றதைப் பார்த்த போலீஸ் ரஞ்சித் அவர்களைத் தடுத்துள்ளார். அந்த ஏழுபேரும் ரஞ்சித்தைத் தாக்கி கீழே தள்ளிவிட்டனர். பின்னர், அவரது கழுத்தில் கிடந்த மூன்று சவரன் தங்க செயினைப் பறித்துவிட்டு, அவரிடம் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து வெளியே சென்றுள்ளனர். மனநலக் காப்பக கேட்டின் சாவி இல்லாததால், காம்பவுண்ட் சுவரில் ஏறிக் குதித்து தப்பிச் சென்றனர் அந்த ஏழுபேரும். ஆறு கைதிகளுடன் தப்பிச் சென்ற மன நோயாளி ராகுல், திருச்சூர் சி.ஜே.எம் கோர்ட் உத்தரவுபடி அந்தக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

கைது
கைது
மாதிரி புகைப்படம்

14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருச்சூர் மனநலக் காப்பகத்தின் மதில் சுவர்கள் பல இடங்களில் உடைந்த நிலையில் உள்ளதாகவும், போதிய பணியாளர்கள் இல்லாததால் இதற்கு முன்பும் பல முறை மன நோயாளிகள் தப்பிச் சென்ற சம்பவம் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் தப்பிச் சென்ற ஏழுபேரில் மன நோயாளியான ராகுலை திருச்சூரில் வைத்து பிடித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தேடப்பட்டுவரும் மற்ற ஆறு பேரில் சிலருடைய புகைப்படங்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்துவிடுவோம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மனநலக் காப்பகத்திலிருந்து ஏழுபேர் தப்பிச் சென்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.