Published:Updated:

ஏழு மாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே கருக்கலைப்பு செய்யப்பட்டதா... தாய், சிசு இறப்பில் நடந்தது என்ன?

மரணம்

திருமணம் ஆகாத 21 வயதான இளம்பெண் குறைமாதப் பிரசவத்தில் வீட்டிலேயே உயிரிழந்த விவகாரம் காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏழு மாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே கருக்கலைப்பு செய்யப்பட்டதா... தாய், சிசு இறப்பில் நடந்தது என்ன?

திருமணம் ஆகாத 21 வயதான இளம்பெண் குறைமாதப் பிரசவத்தில் வீட்டிலேயே உயிரிழந்த விவகாரம் காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மரணம்

`ஏழு மாத கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டு, அதிக ரத்தப்போக்கு காரணமாக அவர் வீட்டிலேயே உயிரிழந்துவிட்டார்' என நீலகிரி மாவட்டம், கூடலூர் காவல்துறையினருக்குத் தகவல் வந்திருக்கிறது. உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். மேலும், குறைமாதப் பிரசவத்தில் இறந்த சிசுவின் உடலையும் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணம் ஆகாத 21 வயதான இளம்பெண் குறைமாதப் பிரசவத்தில் வீட்டிலேயே உயிரிழந்த விவகாரம் காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பிரசவத்தில் இறந்த பிரியா
பிரசவத்தில் இறந்த பிரியா

இந்த விவகாரத்தில் அதிர்ச்சித் தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர், ``21 வயதான பிரியாவுக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. அவர், ஒருவரைக் காதலித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், பிரியா கர்ப்பமடைந்திருக்கிறார். இந்த விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்ததும், அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்‌. கருக்கலைப்பு செய்ய மருத்துவர்களை அணுகியிருக்கிறார்கள்... ஏழு மாத கர்ப்பிணி என்பதால் கருவைக் கலைக்க மருத்துவர்கள் மறுத்திருக்கிறார்கள். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு பிரியாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது. அதிக ரத்தப்போக்கு ஏற்பபட்டு அவர் உயிரிழந்தாகச் சொல்கிறார்கள். ஏழு மாத சிசுவும் இறந்திருக்கிறது.

மரணம்
மரணம்

சிசுவை வீட்டருகில் புதைத்திருக்கிறார்கள். இயற்கைக்கு மாறான இறப்பு என வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறோம். ஒருவேளை, வீட்டில் வைத்தே கருக்கலைப்பு செய்யலாம் என்ற விபரீத முயற்சியில் உறவினர்கள் இறங்கியிருப்பார்களோ என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கோணத்திலும் விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்.