Published:Updated:

ஆரணி: `கழுத்தில் மிதித்தால், பேய் வாய் வழியாக ஓடிவிடும்!’ - தாயின் மூடநம்பிக்கையால் பலியான சிறுவன்

சிறுவன் உடலை விட மறுத்த பெண்கள்
சிறுவன் உடலை விட மறுத்த பெண்கள்

உடம்பினுள் புகுந்த பேயை வாய்வழியாக ஓட்டுவதாக நினைத்து, கழுத்தில் காலைவைத்து மிதித்து ஏழு வயது சிறுவனைக் கொன்ற படுபாதகச் செயல், ஆரணி அருகே நடந்திருக்கிறது. இந்த கொடூரச் சம்பவத்தைத் தாயும், அவரின் சித்திகள் இருவருமே சேர்ந்து செய்ததுதான் அதிரவைத்திருக்கிறது.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் வசித்துவந்த கார்த்தி-திலகவதி தம்பதியரின் ஏழு வயது மகன் சபரி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவன் கார்த்தி இறந்துவிட்டதால், திலகவதி தனது மகனுடன் வேலூர் அருகேயுள்ள அரியூர் பகுதிக்குக் குடிபெயர்ந்துவிட்டார். திலகவதியுடன் அவரின் தங்கைகளான பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோரும் தங்கியிருக்கிறார்கள். தங்கைகள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இந்தநிலையில், சில தினங்களாக மகன் சபரிக்குப் பேய் பிடித்ததாகக் கூறி தாயும், அவனின் சித்திகள் இருவரும் சேர்ந்து மூடநம்பிக்கையான மாந்திரீகத்தின் பெயரில் சிறுவனை அடித்து, சித்ரவதை செய்துள்ளனர்.

சிறுவன் உடலை விட மறுத்த பெண்கள்
சிறுவன் உடலை விட மறுத்த பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மாந்திரீகவாதி யாரோ ஒருவர் பேய் ஓட்டுவதாகக் கேள்விப்பட்டு நேற்று இரவு திலகவதியும், அவரின் தங்கைகள் இருவரும் சிறுவன் சபரியை அரியூரிலிருந்து ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்தப் பெண்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், ஆட்டோக்காரர் ஆரணிக்கு முன்புள்ள கண்ணமங்கலம் பேருந்து நிலையத்திலேயே நள்ளிரவில் இறக்கிவிட்டிருக்கிறார். இன்று காலை விடிந்த பின், வேறு ஆட்டோவைப் பிடித்து வந்தவாசிக்குச் செல்லலாம் என்று முடிவு செய்த அந்தப் பெண்கள், சிறுவன் சபரியின் தலைமுடியை இழுத்தபடியே கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலக வளாகத்துக்குள் சென்று தங்கினர்.

அதிகாலை 2 மணி இருக்கும். தாய் உட்பட மூன்று பெண்களும் சேர்ந்து சிறுவனைக் கொடூரமாக தாக்கத் தொடங்கினர். சிறுவனின் கை கால்களை சித்திகள் இருவரும் நீட்டியிழுத்துப் பிடித்துக்கொண்டனர். தாய் திலகவதியோ, மகன் என்றும் பார்க்காமல், உடலுக்குள் ஊடுருவிய துஷ்ட சக்தியை வாய்வழியாக ஓட்டுவதாக நினைத்து கழுத்தில் காலைவைத்து மிதித்திருக்கிறார். இவர்களின் கொடூரத்தால், சிறுவன் சபரி மூச்சுவிட முடியாமல் துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான். அதன் பின்னரும், சிறுவனின் வாயைத் திறந்து தண்ணீரை ஊற்றுவது, கன்னத்தில் அறைவது என அந்தப் பெண்களின் கொடூரம் நீண்டிருக்கிறது.

போலீஸாருடன் வாக்குவாதம் செய்த பெண்கள்
போலீஸாருடன் வாக்குவாதம் செய்த பெண்கள்

அருகிலிருந்த மக்கள் சிலர், அதிர்ச்சியடைந்து அந்தப் பெண்களிடம் வந்து, ‘யார் நீங்கள், அந்தச் சிறுவனிடம் ஏன் இப்படி கொடூரமாக நடந்துகொள்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளனர். உடனே, ஆவேசப்பட்ட மூன்று பெண்களும், ‘எங்கள் குழந்தை. அவனுக்குப் பேய் பிடிச்சிருக்கு. திடீர்னு வலிப்பு வந்துடுச்சு. அதான் இப்பப்டி பண்றோம். உங்கள் வேலையைப் பார்த்துட்டுப் போங்க’ என்று ஆக்ரோஷமாக கூறியிருக்கிறார்கள். ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்த மக்கள், உடனடியாக கண்ணமங்கலம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து, சிறுவனின் உடலைக் கைப்பற்ற முயன்றனர்.

அப்போதும், சிறுவனுக்குப் பேய் ஓட்டுவதாகக் கூறி பெண்கள் உடலை விட மறுத்தனர். போலீஸார், ஒருவழியாக சிறுவன் உடலை மீட்டனர். சிறுவன் மயக்கநிலையில் இருக்கிறானா அல்லது மரணித்துவிட்டானா என்பதை அறிய, சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பரிசோதனை செய்தனர். மருத்துவ உதவியாளர் பரிசோதனை செய்து பார்த்து, சிறுவன் இறந்துவிட்டதை உறுதி செய்தார். இதையடுத்து, உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்த போலீஸார், சிறுவனின் உடலை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, தாய் திலகவதி மற்றும் அவரின் தங்கைகள் இருவரையும் கைதுசெய்து கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இந்தக் கொடூரச் சம்பவம், கண்ணமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..

அடுத்த கட்டுரைக்கு