`வீட்டில் திடீரென வாந்தி எடுத்தார்..' -பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்

திண்டிவனத்தில் 16 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 7 வயதுச் சிறுமி சென்னையில் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அக்கா, தங்கையான 9 வயது மற்றும் 7 வயதுச் சிறுமிகளுக்கு, 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அகிலாவுக்கும் (பெயர் மாற்றம்) அவரைவிட வயது மூத்தவரான தாய்மாமனுக்கும் திருமணம் நடந்தது. அகிலாவுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. சில காரணங்களுக்காக அகிலாவுக்கும் அவரின் கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

அதனால் அகிலாவும் அவரின் கணவரும் தனித்தனியாக வாழ்ந்தனர். 2 பெண்களைக் காப்பாற்ற புதுச்சேரிக்கு வேலைக்குச் சென்றார் அகிலா. குழந்தைகளை அகிலாவின் அம்மா கவனித்துக்கொண்டார். அகிலாவின் 2 பெண் குழந்தைகளும் பள்ளியில் படித்தனர். முதல் திருமண வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் அகிலாவுக்கு அவருடன் வேலை பார்த்த ஒருவருடன் காதல் ஏற்பட்டது. அந்த நபரிடம் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைக் கூறியதோடு, 2 பெண் குழந்தைகளையும் ஏற்றுக்கொண்டால் திருமணம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார். அதற்கு அந்த நபரும் சம்மதித்தார். இதையடுத்து அகிலாவைத் திருமணம் செய்த அந்தநபர், புதுச்சேரியில் குடியேறினர். 2 குழந்தைகளுடன் அகிலாவின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றது. 2 குழந்தைகளும் புதுச்சேரியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
இந்தச் சமயத்தில் பள்ளி வளாகத்தில் அகிலாவின் மூத்த மகள் மயங்கிவிழுந்தார். அவரின் சகோதரியும் சோர்வாகக் காணப்பட்டார். அதனால் பள்ளி நிர்வாகம், இருவரிடமும் விசாரித்தது. அப்போதுதான் சில மாதங்களாக தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை அந்த 2 சிறுமிகளும் கண்ணீர்மல்கக் கூறினர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக புதுச்சேரி சைல்டு லைனுக்குத் தகவல் தெரிவித்தனர். நலக்குழுத் தலைவர் ராஜேந்திரன் சிறுமிகளிடம் விசாரித்தார். அப்போது சிறுமிகள் இருவரும் பாட்டி வீட்டில் தங்கியிருந்த போது 10-க்கும் மேற்பட்ட உறவினர்கள் தங்களிடம் நடந்துகொண்ட அதிர்ச்சி சம்பவத்தை விவரித்தனர். சம்பவம் நடந்தது விழுப்புரம் மாவட்டம் என்பதால் அங்குள்ள குழந்தைகள் நலக்குழுவுக்கு, புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு அறிக்கை அனுப்பியது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சசிகுமார், உறுப்பினர் லூர்துசேவியர், குழந்தைகள் நலப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் கஜலட்சுமி, திண்டிவனம் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பிரம்மதேசம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் சிறுமிகளின் சித்தப்பாக்கள் ரமேஷ் (30), மகேஷ்(30), உறவினர்கள் ரவிக்குமார் (23), அருண் குமார் (24), அஜித்குமார் (22), பிரபாகரன் (23), தீனதயாளன் (24), பிரசாந்த் (20) சிறுமிகளின் தாத்தா துரை (50) மற்றும் உறவினர் மோகன் (25) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தேடப்பட்ட 6 பேரை அடுத்தடுத்து போலீஸார் கைது செய்தனர். சிறுமியின் தாய்மாமன் அவரின் நண்பர்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்தபோதிலும் கைதானவர்கள் கடந்த தீபாவளி சமயத்தில் ஜாமீனில் வெளியில் வந்தனர்.
வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு அகிலா, சென்னைக்கு இடம்பெயர்ந்தார். சென்னையில் குடியிருந்த அகிலாவின் இளையமகளான 7 வயதுச் சிறுமிக்கு நேற்றிரவு திடீரென வாந்தி ஏற்பட்டது. உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சிறுமியை அழைத்துவந்தார் அகிலா. சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் தெரிவித்தனர். அதைக்கேட்டு அகிலா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். சிறுமியின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்குப்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகச் சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சிறுமியின் உறவினர் ஒருவர், ``பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குப் புதுச்சேரியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்குப்பிறகு அந்தச் சிறுமிகளுக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டது. பின்னர், சிறுமிகளின் எதிர்கால நலன்கருதி, புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் சிறுமிகளின் குடும்பம் குடிபெயர்ந்தது. சென்னையில் சிறுமியின் அம்மா, வீட்டு வேலை செய்துவருகிறார். சில அதிகாரிகளின் தயவால்தான் சிறுமிகள் சென்னையில் படித்துவந்தனர். இந்தச் சமயத்தில்தான் 7 வயதுச் சிறுமிக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. வீட்டிலேயே அவர் வாந்தியெடுத்தார். அதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அந்த மருத்துவமனையில் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கூறினார்கள்.

வரும்வழியிலேயே சிறுமியின் உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். சிறுமியின் மரணத்துக்குக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைதான் காரணம். இன்னொரு 9 வயதுச் சிறுமிக்கு என்னவாகுமோ என்ற பயத்தில் அவரின் அம்மா உள்ளார். எனவே, சிறுமியின் மரணம் தொடர்பாக சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.
சென்னை அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி வழக்கை சிறப்பு நீதிமன்றம் விரைவாக விசாரித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அதைப்போல திண்டிவனம் சிறுமிகள் வழக்கையையும் துரிதப்படுத்த வேண்டும். இன்னொரு சிறுமிக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அரசு செய்ய வேண்டும்" என்றார் வேதனையுடன்.